Wednesday, July 1, 2015

மெட்ரோ ரெயில் சேவையில் முதல் நாள் பயணத்தின் போது பயண அட்டை வாங்கியவர்களுக்கு லாபம், டோக்கன் எடுத்தவர்களுக்கு நஷ்டம் முன்அறிவிப்பு இல்லாத சலுகையால் பயணிகள் குழப்பம்



சென்னை,

மெட்ரோ ரெயில் சேவையில் முதல் நாள் பயணத்தின் போது பயண அட்டை வாங்கியவர்களுக்கு லாபமும், டோக்கன் எடுத்தவர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

2 வித டிக்கெட்டுகள்

மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டதும், சென்னை மக்கள் ஆர்வத்துடன் அதில் ஏறி பயணம் செய்வதற்காக கோயம்பேடு–ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை உள்ள 7 ரெயில் நிலையங்களில் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 2 விதமான டிக்கெட் முறைகளை பயன்படுத்தி பயணிகள் டிக்கெட் எடுத்தனர்.

பயண அட்டைக்கு ரூ.9

ரூ.100 கொடுத்து பயண அட்டை வாங்கியவர்களுக்கு ரூ.50 அட்டைக்கு பணமாகவும் மீதி உள்ள ரூ.50 பயணத்துக்கான கட்டணத்துக்காகவும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

அப்படி பயண அட்டை வாங்கியவர்கள் கோயம்பேடு–ஆலந்தூர்–கோயம்பேடு இடையே ஒரு மணி நேரத்துக்குள் எத்தனை முறை பயணம் செய்திருந்தாலும் அவர்களுடைய பயண அட்டையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் தொகை ரூ.9 தான்.

ஆனால் டோக்கன் மற்றும் டிக்கெட் வாங்கியவர்கள் ஒரு மணி நேரத்துக்குள் கோயம்பேடு–ஆலந்தூர்–கோயம்பேடு இடையே பயணம் செய்ய செலுத்திய கட்டணமோ ரூ.40 ஆகும்.

சலுகை

இதுகுறித்து கோயம்பேடு மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:–

மெட்ரோ ரெயில் சேவையில் முதல் நாள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு சலுகையாக ரூ.10 தீர்மானித்தோம். ஆனால் டோக்கன் வாங்குபவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை.

பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி இருப்பதால் ரூ.10–க்கு பதில் ரூ.9 வசூலிக்கப்பட்டது. இன்றும் (அதாவது நேற்று) இதேபோல் தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அநேகமாக நாளை முதல் (இன்று) முறையான கட்டணம் பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு அமல்படுத்தப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024