Wednesday, June 24, 2015

புதிய வருமான வரி படிவம்: அரசு அறிவிக்கை வெளியீடு

எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி படிவத்துக்கான அறிவிக்கையை அரசிதழில் மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
மேலும், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு இதற்கு முன்பு 14 பக்க படிவம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தப் படிவத்தில் வெளிநாட்டுப் பயணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன.
இதனால், படிவத்தில் தேவையற்ற கேள்விகள் இருப்பதாகவும், அதனை பூர்த்தி செய்வது சிரமமாக இருப்பதாகவும், தனி நபர்கள், தொழிலதிபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்தப் படிவத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டார். அந்தப் படிவங்களுக்குப் பதிலாக, தலா 3 பக்கத்தில் ஐ.டி.ஆர்-2ஏ, ஐ.டி.ஆர்-2 என்ற 2 படிவங்களை மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
அதில், "ஐ.டி.ஆர்- 2ஏ' படிவத்தை தொழில், வர்த்தகம், வெளிநாட்டுச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டாத தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
"ஐடிஆர்-2' படிவத்தை தொழில், வெளிநாட்டுச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் பெறுவோர் தாக்கல் செய்ய வேண்டும் அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024