Tuesday, June 23, 2015

தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை

தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.
இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதில் என்.சி.டி.இ. உறுதியாக இருந்தது.
தொடர் இழுபறி காரணமாக வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டாகவே இருக்குமா அல்லத இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எட். படிப்புக் காலம் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகளாக உயர்வது உறுதியாகியுள்ளது.
பல்கலைக்கழகம் எச்சரிக்கை: தமிழக அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, என்.சி.டி.இ.-இன் புதிய வழிகாட்டுதல், புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மதுரையில் வருகிற 26-ஆம் தேதியும், திருநெல்வேலியில் ஜூன் 27, கோவையில் ஜூன் 29, சேலத்தில் ஜூலை 1, திருச்சியில் ஜூலை 2, சென்னையில் ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இதில், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தலைவர், செயலர், முதல்வர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
கல்லூரிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்படக் கூடாது. அவ்வாறு பங்கேற்கத் தவறும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...