Thursday, June 25, 2015

2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி, ஜூன் 25-

2005ம் ஆண்டுக்கு முந்தைய பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. குறிப்பாக 500, 1,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிகம் புழங்குகின்றன. இந்திய பொருளாதாரத்தை நசுக்க பாகிஸ்தான் போன்ற சில அண்டை நாடுகளும் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றன.

2005–ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா அச்சிட்டு வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு தன்மை கொண்டவை. இதனால் 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.

அதன்படி 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அல்லது தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 1–ந்தேதி என்று முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. பின்னர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்தது.

அந்த காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது டிசம்வர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.

இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024