Wednesday, June 24, 2015

கண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்!


இன்று - ஜூன் 24: கண்ணதாசன் பிறந்தநாள்

அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.

காதுகளின் கவிஞன்

கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.

தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கிறாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்

என் வேதனை கூறாயோ?

ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:

தன் கண்ணனைத் தேடுகிறாள்

மனக் காதலைக் கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ...

தேன்பனி!

சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.

பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:

'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'

(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)

'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனிபோல நாணம் அதை மூடியதேனோ'

(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட

முளைக்காத சொல்லாட ஆடஆட'

(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)

'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்'

(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)

தேன்மூடிய சிருங்காரம்

காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:

'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்

ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்

ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...

அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்

கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.

கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே!

உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

| 'தி இந்து' நாளிதழ் நடுப்பக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான கட்டுரை |

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...