Tuesday, June 30, 2015

திண்டிவனம்- - தி.மலை சாலையில் 3ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை : செஞ்சி கோர்ட் அதிரடி உத்தரவு


செஞ்சி: 'திண்டிவனம்- - திருவண்ணாமலை இடையேயான சாலை, தேசிய நெடுஞ்சாலை அல்ல; மரண சாலை' என வேதனை தெரிவித்த, செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, இச்சாலை வழியாக, வரும், 3ம் தேதி வரை, உள்ளூர் வாகனங்கள் தவிர, வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

புதுச்சேரி - -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை யில் (எண்- 66) திண்டிவனம் முதல், கிருஷ்ணகிரி வரை உள்ள, 178 கி.மீ., சாலையை, 7 மீட்டர் அகலத்திலிருந்து, 10 மீட்டராக மாற்றும் பணி, கடந்த, 2012ம் ஆண்டு, மே மாதம் துவங்கியது. 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி, நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், பாதி பணி கூட முடியவில்லை.

தினமும் விபத்துகள்

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கான்ட்ராக்ட் எடுத்த, 'டிரான்ஸ்ட்ராய்' நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளது. இந்த சாலையை அகலப்படுத்துவதற்காக வெட்டிய பள்ளங்களும், வெட்டி எடுத்த தார் சாலையையும் அப்படியே உள்ளது. இதனால், தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. இதை கண்டித்து, ஆங்காங்கே, பொது மக்கள் மறியல் செய்தனர். செஞ்சியில், மூன்று மாதம் முன், வழக்கறிஞர்கள், சாலை மறியலும், நீதிமன்ற புறக்கணிப்பும் செய்தனர்; ஒரு நடவடிக்கையும் இல்லை!

தடை கோரி மனு

இதையடுத்து, செஞ்சியை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில், செஞ்சி பார் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர், செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், 'பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில், தினமும் விபத்துகள் நடக்கும் இந்த சாலை, போக்குவரத்திற்கு தகுதி இல்லாமல் இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

மறந்த இறையாண்மை

இந்த மனுவை விசாரித்து, நீதிபதி வெங்கடேசன் பிறப்பித்த இடைக்காத உத்தரவு:

ஒவ்வொரு மனிதனை காப்பாற்றுவதும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதும், மனித உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் இறையாண்மை பணியாகும்.

இந்த இறையாண்மை பணியை செய்ய, மாவட்ட நிர்வாகம் தவறியுள்ளது. தினமும், முதியோர், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல், கஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகின்றனர் என்பது, இம்மனு மூலம் தெரிகிறது.

26 பேர் உயிரிழப்பு

இந்த சாலையை பயன்படுத்தியதால், செஞ்சி, சத்தியமங்கலம், காவல் எல்லையில் மட்டும், 26 பேர் இறந்துள்ளனர்; 95 பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். திருவண்ணாமலைக்கு, பவுர்ணமியன்று வரும் பக்தர்கள், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மூன்றாம் தேதி வரை தடைதிண்டிவனம் - தி.மலை இடையேயான சாலை, தேசிய நெடுஞ்சாலையல்ல; மரண சாலை என்றே குறிப்பிடலாம்.

எனவே, திண்டிவனம், தீவனுார், வல்லம், செஞ்சி, ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், கீழ்பெண்ணாத்துார், சோமாசிபாடி, திருவண்ணாமலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், உள்ளுர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அவசர கால வாகனங்கள் தவிர, வேறு வெளியூர் செல்லும் வாகனங்கள், வரும், 3ம் தேதி வரை செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.







இன்று பவுர்ணமி: பக்தர்கள் திண்டாட்டம்!

பவுர்ணமி தினமான இன்று, சென்னையில் இருந்து பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. வேலுார், காஞ்சிபுரம், விழுப்புரம் வழியாக, தி.மலைக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024