Wednesday, June 24, 2015

பண்பாட்டுக் கோலங்கள் By அ. அறிவுநம்பி

ஒரு பேருந்துப் பயணத்தின்போது முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த இருவரின் உரத்த உரையாடல் நான் விரும்பாமலேயே என் காதுகளில் படர்ந்து நின்றது. தன் ஊரில் மிதமான மழை பொழிந்ததை ஒருவர் கூறினார். மற்றவர் ஊரில் மழையில்லை. எங்க நல்லவங்க இருக்காங்களோ அங்க மழையிருக்கும் என்ற மரபுத் தொடர் உச்சரிக்கப் பெற்றது. மண் வளத்துக்கு மழை சரி, மன வளத்துக்கு எது என்ற வினாவும் பூத்தது. அப்போது வள்ளுவம் மின்னியது.
பண்புடையார் பட்டுண்டு உலகம் என்ற விடையும் கிடைத்தது. பண்பாட்டுக் கூறுகளின் அகல நீளங்களை அளந்து பார்க்க வேண்டியது தேவையானது.
பண்பாட்டை வெளிப்படுத்தும்போது புறக்கூறுகள் மாறியிருக்கலாம். பண்பாட்டின் மூலக்கூறு மாறாது, மாறக் கூடாது. முப்பதாண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு திருமண நிகழ்வில், சென்னையிலிருந்து வந்த புகழ் பெற்ற எழுத்தாளரின் அருகில் அமர்ந்து உணவு உண்ண நேர்ந்தது. நான் உண்டு முடிப்பதற்கு ஐந்து மணித் துளிகளுக்கு முன் அவர் உண்டு முடித்துவிட்டார்.
ஆனால், நான் பணியை முடித்தபிறகு அவர், தம்பி, எந்திரிப்பமா என்றார். அவர் எனக்காகத்தான் அதுவரை காத்திருந்தார் என்பது அப்போதுதான் புரிந்தது. பந்தியில்கூட சக மனிதனை மதிக்கும் ஓர் ஒழுங்கை நேசிக்கும் இப்பண்பாடு இன்றில்லை.
பந்திக்கு முந்து என்ற பழமொழியின் பொருளைப் பிழையாகக் கருதியவர்கள், முதல் பந்தியில் இடம் பெற முந்துகின்றனர். உணவுப் பந்தி நிகழுமிடத்தில் தெரிந்தவர், தெரியாதவர் யாராக இருந்தாலும், உண்பவர்களுக்கு நேர்முன்பாக - முந்தியிருந்து - உண்பவர்களை உபசரிக்க வேண்டும். என்ன தேவை என்று கேட்டு உண்பிக்க வேண்டும். இப்பண்பாட்டு மரபு இன்று காணாமல் போய்விட்டது.
கிருபானந்த வாரியார் தன் சொற்பொழிவில், வைக்கோலை எடுத்துத் தொழுவத்தில் கட்டியுள்ள மாட்டுக்குப் போடுவதும் பந்தியில் மனிதர்கட்குப் பரிமாறுவதும் இன்று ஒன்று போலாகிவிட்டது. மாடு தின்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை.
ஆனால், விருந்தினராக வந்தவர்களின் எதிரே நின்று இன்னும் கொஞ்சம் பாயாசம் சாப்பிடுங்களேன் எனக் கவனிக்கும்போதுதான் இரண்டு தரப்பிலேயும் அன்பு மலரும் என்று கூறுவார். இயந்திரத்தனமான விருந்து உபசரிப்பில் மனிதம் இல்லை.
ஒரு மேடை. பக்கத்தில் அமர்ந்திருந்தவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு மூத்தப் பேராசிரியர். என் பக்கம் தலையைச் சாய்த்தபடி மெதுவாகச் சொன்னார்: முதல் வரிசையிலே நாலாவதா இருக்கானே, அவன் எங்கிட்ட படிச்சவன். இன்னிக்கு எனக்கு முன்னால கால்மேலே கால் போட்டு மரியாதையில்லாம உட்கார்ந்திருக்கறதைப் பாரு. அப்படி உட்காருவது ஒரு காலத்தில் மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டது.
முறைமைகள் மாறி விட்டன. குருகுலக் கல்வி முறையில் ஆசான் மட்டும் நடுநாயகமாக அமர்ந்திருக்கவும், சீடர்கள் அவரருகே நின்று கொண்டு அல்லது கீழே தரையில் அமர்ந்து பணிவாகப் பாடங்கேட்பர். இப்போதோ மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துவதே நிகழ்முறை. சூழலுக்கேற்பச் செயல்பாடுகள் மாறும். ஆனாலும், பண்பாட்டின் உயிரைப் பறிக்கலாகாது.
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது பயில்மொழி. அந்த இறைக்கு முன்பாகவாவது பணிவுடன் தோன்றுவதுதானே ஒழுங்கு. அப்படி இருக்கும்போது, அவர்களின் மனத் திரையில் ஒரு தொடர் தானாகவே ஒளிரும். அது, பணியுமாம் என்றும் பெருமை. இது கற்றோர் பண்பாடு.
காலச் சூழல் நடைமுறைக் கூறுகளை மாற்றலாம். பழங்காலத்தில் ஒரு பெண் தன் கணவருடைய பெயரைச் சொல்லுவதில்லை. சொல்லுவது மகாக் குற்றமாகும். இன்றைக்கு, ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்கள் அனைவரும் ஊரறிய, உலகமறியத் தன் பெயருடன் தன் கணவரின் பெயரையும் உரத்து அறிவிப்பது மரபாகிவிட்டது.
பல வீடுகளில் கணவரைப் பெயர் சொல்லி மனைவி அழைக்கும் வழக்கமும் வந்துவிட்டது. கேட்டால், கூப்பிடுவதற்குத்தானே அவரது (கணவரின்) பெற்றோர் பெயர் வைத்துள்ளனர் - இது மனைவியின் பதில். பின் தூங்கி முன் எழும் மரபும், கணவர் உண்ட எச்சில் இலையில் அல்லது தட்டில் மனைவி உண்ணும் பழக்கமும் மாறிவிட்டது. அவை பொருளற்றவை எனக் கருதப் பெற்று மாற்றங்களை இவ்வுலகம் பெற்றுவிட்டது.
பழங்காலத் திரைப்படங்களில் வைகறையில் துயில் எழும் நங்கை தன் மணவாளனின் கால்களைத் தொட்டு வணங்கிய பிறகு அன்றாடப் பணிகளை மேற்கொள்வதாக வரும் காட்சி இன்றைய தலைமுறையினருக்கு நகைச்சுவைக் காட்சியாகிப் போனது. இத்தகு பழக்க வழக்கங்களை ஊடகங்களும், காலப் பின்னணியும், வாழ்க்கை வேகமும் மாற்றின. இதில் பிழையில்லை.
ஆனால், புது நாகரிகம் என்ற பெயரால் உண்டாகும் பண்பாட்டுச் சரிவுகளை எதில் சேர்ப்பது? ஓர் ஆடவன் பல பெண்களோடு திரிகிறான் என்றால், அவனைத் திருத்துவதே சரியானதாயிருக்குமே அல்லாமல் ஆணும் பெண்ணும் சமம் என்ற முழக்கத்துடன் ஆடவர்கள் பலருடன் ஒரு பெண்ணும் திரிவது அறமாகுமா என்பாரின் வினா அழுத்தமானது. இதில், ஆண், பெண் இருவருக்குமே மிகப் பெரிய பொறுப்புண்டு. முறையாக யாவும் நடந்தால் அஃது இல்லறப் பண்பாடு.
ஒரே இடம், ஒரே நபர், ஒரே செயல்பாடு. ஆனாலும், ஒன்றைச் செய்வதுபோல மற்றொன்றைச் செய்ய இயலாது. குறுக்கே தடுப்பது பண்பாடு என்ற உயரிய தடைச் சுவராகும்.
திருமண மன்றம் போன்ற ஒரு பொது இடத்தில் இருபது வயது இளைஞன் ஒருவன் ஒரு வயதுக் குழந்தையை முத்தமிடலாம். அதே இடத்தில் அதே நபர் பதினாறு வயதுப் பெண்ணிடம் அப்படி நடக்க இயலாது. முன்னது கனிவான அன்பின் பரிமாற்றம், பின்னது காமத்தின் களியாட்டமென்றே கருதப் பெறும்.
ஆணும், பெண்ணும் நான்கு சுவர்களுக்குள் எவ்வளவு அணுக்கமாகவும் இருக்கலாம். பலர் நடுவில் இவ்வாறு இருத்தல் மரபு இல்லை. ஆனால், திரைப்படங்களும், இணையங்களும் புகுத்திய புதுப் போக்குகளின் மயக்கத்தில் இன்று இளைஞர்களும், இளம் பெண்களும் பயணங்களின்போது பேருந்தில், தொடர்வண்டியில் அமர்ந்துள்ள கோலங்கள் எப்படி எனக் கூற வேண்டியதில்லை.
இன்றைய காதல் இணையர்களின் இருப்பு தலைகீழானது. சுற்றியிருப்பவர்கள் தாம் வெட்கப்பட்டுக் கொண்டு வேறு திசைகளில் பார்வையைச் செலுத்துகின்றனர். மேனிக் காதலாக அல்லாமல் மேன்மைக் காதலாக இருக்கும்போதுதான் அது அகப் பண்பாடு.
பழைய காலத்து உடை இன்றில்லை. உணவுப் பழக்கங்களும் அப்படியே. போக்குவரத்து வசதிகள் மாறி விட்டன. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப வீடுகளின் அமைப்பும் பிறவும் வேறாகிவிட்டன.
இவை போன்றதன்று பண்பாடு என்பது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாத் திருமண மண்டபங்களிலும் மண்டபத்துக்கு வெளியில்தான் காலணிகளை விட்டிருந்தனர். ஆனால் இப்போதோ, மணமக்களுக்கு வாழ்த்துக் கூறவும், பரிசு கொடுக்கவும் மணமேடைக்கு வரும்போது காலணிகளுடனே வருகின்றனர்.
தீபமேற்றப்பட்டு, அக்கினி வளர்க்கப் பெற்று, சில இடங்களில் இறையுரு வைக்கப்பட்டுள்ள மேடையைப் பலரும் கோயில் போன்றே எண்ணுவர். அம்மேடையைப் புனிதமாகக் கருதுவர்.
ஏனெனில், விபூதி பூசியும், அட்சதை தூவியும் வாழ்த்துமிடம் வழிபாட்டிடம் போன்றது என்ற நினைவு இறுக்கமாயிருந்தது. குறைந்தபட்சம் மேடையிலாவது காலணி அணியாதிருக்கலாமே என்பது மூத்த குடிமக்கள் வழிகாட்டல்.
வயது முதிர்ந்த ஒருவர் பேருந்தில் ஏற முயலும்போது, அவருக்கு உதவ முன்வராமல், "ஏ பெரிசு, பாத்து வாய்யா, விழுந்துடப் போறே' என்கிற ஏளனக் குரல் பெரிய நகரங்களில் இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டது.
அதே சூழலில், பெரியவரே என்றோ, ஐயா என்றோ அழைத்து, பாத்து மெதுவாக வாங்கய்யா, கவனமா வாங்க என்ற குரல் வருமேயானால் அந்த இடத்தில் மணக்கும் கனிவும், அன்பும், பாசமும், மதிப்பும் இமயத்தை விஞ்சுவதை உய்த்துணரலாம். இதுவே உயர் பண்பாடு.
ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் ஒரு நாடகம் நடந்தது. சாலமோன் கதைதான். மேடை நடுவில் சாலமோன். எதிரில் ஒரு பச்சிளங் குழந்தை. இடதுபுறம் இருந்த வந்த நங்கை அந்தக் குழந்தை தன்னுடையது என்கிறாள். வலதுபுறமிருந்து வருபவளும் அந்தக் குழந்தை தன்னுடையது என்பாள்.
உண்மையறிய அந்த மன்னன் வாளையுருவி அந்தக் குழந்தையை வெட்டப் போவதாகக் கூற உண்மையான தாய் பதறிப் போய், அரசே வெட்டாதீர்கள், அவளிடமே குழந்தையைத் தாருங்கள் என்பாள். இஃது உலகறிந்த கதை.
அன்றைய நாடகத்தில் காட்சிகள் மாறின. அரசனின் எதிரே குழந்தை. இருபுறமிருந்தும் வந்த பெண்கள் இருவருமே அந்தக் குழந்தை தங்களுடையதில்லை என்று வாதிடுகின்றனர். காவலர்களை அரசன் நோக்க, குப்பைத் தொட்டியில் அழுதபடி கிடந்தது இந்தக் குழந்தை. அருகினில் இவர்கள் நின்று கொண்டிருந்தனர். மூவரையும் இங்கே கொணர்ந்தோம் என்றனர்.
உண்மையான தாயைக் கண்டறியும் நோக்கில் வேகமாக வாளைத் தூக்குவார் மன்னர், இடதுபுறம் நின்ற பெண், வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வேண்டும் என்று கூறிச் சிரிப்பாள். வலதுபுறப் பெண்ணோ, அரசே சன்னம் சன்னமாக வேண்டுமானாலும் அறுத்துக் கொள்க என்று கூறிப் புன்னகைப்பாள்.
ஒன்றும் புரியாத அரசர், உள்நுழையும் அமைச்சரிடம் மன்னர், என்ன இது என்பார். அமைச்சர் தலைகவிழ்ந்தபடியே, மன்னியுங்கள் அரசே, தாங்கள் இப்போது இந்தியாவில் இருக்கிறீர்கள் என்று பதில் தருவார். கதை யாருடையது என்பதைவிடக் கருத்துக்கு மதிப்புத் தரவேண்டிய பகுதி இது.
மாற்றங்கள் தேவைதான். ஆனால், மூலத்துவம் மாறக் கூடாது. நீங்கள் கையில் ஏந்திக் கொண்டிருப்பது தங்கத் தட்டாக இருக்கலாம், வெள்ளிப் பேழையாக இருக்கலாம், வைரம் பதித்த கலயமாக இருக்கலாம், அவை முக்கியமில்லை. அவற்றில் பரிமாறப் பெறும் உணவு கெட்டுப் போயிருந்தால் எப்படி உண்ண முடியும்?
வளைந்து நெளிந்துபோன தகரத் தட்டில் கூடத் தரமான உணவை உண்ண முடியும். வெளி நாகரிக நடைமுறைகள் யாவும் பாத்திரக் கலங்கள். பண்பாடுதான் உணவு.
தனக்கும், பிறருக்கும் பயன் தரும் பண்பாடுகளால் விளையக் கூடியவை அழகுக் கோலங்கள். மற்றவையெல்லாம் வெறும் அலங்கோலங்கள்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்,
புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம்.
முறைமைகள் மாறி விட்டன. குருகுலக் கல்வி முறையில் ஆசான் மட்டும் நடுநாயகமாக அமர்ந்திருக்கவும், சீடர்கள் அவரருகே நின்று கொண்டு அல்லது கீழே தரையில் அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்பர். இப்போதோ மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துவதே நிகழ்முறை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024