Saturday, June 6, 2015

மகாமகமும் அதன் மகத்துவமும்!

ட்சத்திரங்களில் சிறப்பானது மக நட்சத்திரம். 'மகம் ஜெகத்தை ஆளும்' என்பது பழமொழி. மாசி மாதம் வரும் மக நட்சத்திரம் விசேஷமானது எல்லா மாத பௌர்ணமிகளையும் விட,  அதிக வெளிச்சம் உடையது மாசி நிலவு. ஆகையால்தான் பெரும்பாலான கோவில் தெப்ப உற்சவங்களையும், ரத உற்சவங்களையும் இந்த நாளில் வைத்தனர் பெரியோர்கள். 

மாசி மாதம் உற்சவம் இல்லாத கோவில்களே இராது. மாசி மாத பௌர்ணமியில் சந்திரனும், மக நடசத்திரமும் உச்சமாகும்போது ஏற்படும் சிறப்பை, அபிதான சிந்தாமணி எனும் தமிழ் கலைக்களஞ்சியம் சிறப்புறக் கூறுகிறது. சிம்ம ராசியில் குரு பிரவேசிக்கும்போது, சூரியன் கும்ப ராசியில் இருக்க, பவுர்ணமி நன்னாளில் 16/2/2016-ல் மஹாமகம் பிரமாண்ட முறையில் குடந்தை என்னும் பெருமை வாய்ந்த கும்பகோணத்தில் கொண்டாடப்படுகிறது.

பேரூழிக் காலத்தில் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய  இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. 'கோயில் பெருத்தது கும்பகோணம்' எனும் முது மொழிக்கேற்ப, எண்ணற்ற கோயில்களைக் கொண்டது கும்பகோணம். 

இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில்குளம், மகாமகக் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.  வருடந்தோறும் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் 1 லட்சம் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரும் பங்கு பெறுகிறார்கள். 

இத்தலமும், மகாமகக்குளமும் நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது. கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹா மகக் குளம். இவ்விரண்டும் புண்ணிய தீர்த்தங்களுக்குப் புண்ணிய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது.
அதெப்படியெனில் முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, “கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல்லாரும் எங்களிடம் வந்து மூழ்கித் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களுக்குக் கரைத்து விட்டுவிட்டுப் புண்ணியாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள் சம்பாதிக்கும் இந்தப் பாவங்களுக்கெல்லாம் விமோசனம் அருள் புரிய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தனர். 

அவர்களிடம் கருணை பாலித்து இறைவன் , “புண்ணிய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டை நான் கும்பகோணத்தில் உருவாக்கியிருக்கிறேன். அவற்றில் சென்று குளித்தால்  உங்களுடைய பாவங்கள் விலகிவிடும்” என்று கட்டளை புரிந்தார். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை இங்கு கங்கை முதலிய தீர்த்த தேவதைகள் வந்து புனித நீராடல் செய்கின்றன.

காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மஹாமகத்துக்கு தமிழக அரசு ரூ. 270 கோடி  பணம் ஒதுக்கி, அதில் 70 கோடி வரை செலவிடப்பட்டது. காந்தி பூங்காவில் நன்றாக விளக்கு வசதி செய்து தந்து விட் டார்கள். ஒரு தனியார் வங்கி சுமார் 15 லட்ச  ரூபாயை பூங்கா மராமத்து செய்ய ஒதுக்கி உள்ளது.
அம்மா உணவகம்,  குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் பக்தர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது. 

நாகேஸ்வரன் கோவிலில் கோபுர கட்டுமான புதுப்பித்தல் வேகமாக நடந்தேறி வருகிறது. மகாமகத்துக்காக ரயில்வே துறையும் சகல  ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பத்து  கோடி ரூபாய்  ஒதுக்கி, ரயில் நிலை யங்களில் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துகிறார்கள். 

2016 பிப்ரவரி 16 ஆம் தேதி கும்பகோணம் வந்து கூடுங்கள். பக்தி பரவசத்துடன் மகாமகம் கண்டு மகிழுங்கள்! 

-ஷான் ( மயிலாடுதுறை)
  . 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024