Friday, June 5, 2015

முதுநிலை மருத்துவப் படிப்பு: நாளை முதல் மீண்டும் புதிய கலந்தாய்வு


முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு (எம்.சிஎச்.-நியூரோசர்ஜரி) ஆகியவற்றுக்கு மீண்டும் புதிய கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 6), ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7)

நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் மேலே குறிப்பிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

எனினும் கலந்தாய்வு தொடங்கிய பிறகு, முதுநிலை மருத்துவப் படிப்புப் பிரிவுகளில் உள்ள சில இடங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் சமர்ப்பித்தது. இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் புதிய இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரச்னை எழுப்பத் தொடங்கினர்.

கலந்தாய்வு ரத்து: இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை ரத்து செய்ய மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. கலந்தாய்வு ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறையின் இணையதளத்தில் திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

டாக்டர் சங்கம் கோரிக்கை: இதனிடையே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024