Friday, June 5, 2015

டில்லி மெட்ரோ முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகப்படுத்துகிறது

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் சேவை முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகம் செய்கிறது.

தென்கொரியாவின் சாங்வான் நகரில், அந்நாட்டு தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்படும், டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய இந்த ரயில், டில்லி மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக இயக்கப்படும்.

இந்த ரயில், டில்லியில் மஜ்லிஷ் பூங்கா-ஷிவ் விஹார் மார்க்கத்தில் 59 கி.மீ., தூரமும், ஜனக்பூரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன் மார்க்கத்தில் 38 கி.மீ., தூரமும் தினமும் பயணிகளை சுமந்து செல்ல காத்திருக்கிறது. இதில் டிரைவருக்கு என்று தனியாக கேபின் இல்லை என்பதால் வழக்கமாக டிரைவரால் இயக்கப்படும் ரயிலை விட கூடுதலாக 240 பேர் பயணம் செய்ய முடியும். அதாவது ஒரே நேரத்தில் 2,280 பேர் பயணிக்க முடியும்.

பாதுகாப்புக்காக, ரயிலின் உட்புறமும், வெளிப்புறமும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டு, மெட்ரோ ரயிலின் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படும்.இந்த ரயிலுக்குத் தேவையான ரயில் பெட்டிகள் தென் கொரியாவிலும், இந்தியாவில் பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல் நிறுவனத்திலும் வடிவமைக்கப்படும் எனவும், இந்த ரயில் சேவை 2016 ல் நடைமுறைக்கு வரும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024