Saturday, June 6, 2015

ஆவின் பால் புதிய அட்டையை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

புதிதாக பால் அட்டை பெறவும், பழைய அட்டையைப் புதுப்பிக்கவும், ஆவின் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை பெருநகரில் ஆவின் பால் குறைந்த விலையில் பெறுகின்ற வகையில் மாதாந்திர பால் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டைகள் 16 ஆவின் வட்டார அலுவலகங்கள், 49 பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகரில் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் நாளொன்றுக்கு 7.15 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது.
புதிய மாதாந்திர பால் அட்டைகளைப் பெற வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. புதிய ஆவின் பால் அட்டைகள் பெற விரும்பும் நுகர்வோர்கள், வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களைத் தொடர்பு கொண்டு அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இருப்பிட அல்லது அடையாள சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் வட்டார அலுவலக ஊழியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக புதிய பால் அட்டைகள் வழங்கப்படும். மேலும், இணையதளம் மூலம் புதிய அட்டைகள் பெறவும், பால் அட்டைகளை மாதந்தோறும் புதுப்பிக்கவும் வசதி உள்ளது. www.aavinmilk.com என்ற இணையதளத்தை அணுகி புதிய பால் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதிலுள்ள விண்ணப்பத்தைப் பதிவு செய்தவுடன், கள ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய பால் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024