Friday, June 5, 2015

மேகி நூடுல்சில் உணவு பாதுகாப்புத்துறை

மேகி நூடுல்ஸ் இப்போது பலத்த சர்ச்சையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. நாடு முழுவதிலும் நூடுல்ஸ் விற்பனை கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நேரத்தில், உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கடைகளில் உள்ள சில மேகி பாக்கெட் சாம்பிள்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். இந்த பரிசோதனை முடிவில், அதில் மோனோசோடியம் குளுடாமேட் என்ற ருசி அதிகரிப்பதற்காக போடப்படும் சீன நாட்டு உப்பும், காரீயமும் அளவுக்கு மிகஅதிகமாக இருக்கிறது, இதனால், இதை சாப்பிடுகிறவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்ற அபாய சங்கை ஊதினார். உடனடியாக உத்தரபிரதேச அரசாங்கம், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது. இதுதொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் மேகி தயாரிக்கும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பல மாநிலங்களில் இப்போது மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் கூட மேகியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மந்திரி ராம் விலாஸ் பஸ்வான், மேகி நூடுல்ஸ் விவகாரம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், நாட்டிலேயே முதல்முறையாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12(1) (டி)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த முடிவு வந்தவுடன் தமிழ்நாட்டிலும் தடைவிதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

நூடுல்ஸின் விளம்பர தூதர்களாக சினிமா நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி ஒரு கலப்பட பொருளை வாங்கச்சொல்லி விளம்பரத்தில் தோன்றினார்கள் என்று அவர்கள்மீது பீகாரில் வழக்குப்போட்டு, இப்போது கோர்ட்டும் அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரவலாக கோரிக்கை வலுத்து வருகிறது. விளம்பர தூதர்கள் மீது நடவடிக்கை என்பது அபாண்டமானது. அதில் நியாயமேயில்லை. அந்த கம்பெனி கலப்படம் செய்தால் அவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?. மேலும், அவர்கள் விளம்பரத்தில் நடிக்கும்போது பரிசோதனைகூட ஆய்வறிக்கையை காட்டும் நேரத்தில் எந்தக்குறையும் இல்லை என்கிறார்கள். அதன்பிறகு குறையிருந்தால் அவர்களை குறைசொல்லி பயனேயில்லை. இவ்வளவுக்கும் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசிலும் உணவு பாதுகாப்புக்கென தனித்துறைகள் மற்றும் அமைப்புகள் இருக்கிறது. மேகி மட்டுமல்லாமல், அனைத்து உணவுப்பொருட்களையும் பரிசோதித்து ஆய்வுகூடங்களுக்கு அனுப்பவேண்டியது அவர்கள் கடமையாகும். அவர்கள் நடவடிக்கை தீவிரமாக இருந்திருந்தால், விற்பனைக்கு வரும் முன்பே தடுத்து இருக்கமுடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, கோக்கோ கோலா, பெப்சி குளிர்பானங்கள் மீதும் பூச்சி மருந்து இருந்ததாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையமே தெரிவித்திருந்தது. அந்தநேரத்திலும், இதுபோல பரபரப்பாக பேசப்பட்டதே தவிர, நடவடிக்கை எதையும் காணோம். அதுபோல இல்லாமல், இனி உணவுப்பொருட்கள் பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட துறைகள் மிகவும் விழிப்போடு செயல்படவேண்டும். மக்கள் உயிருக்கு பாதுகாப்பு என்ற முறையில், இதில் தொய்வே இருக்கக்கூடாது. மேலும், மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவர திட்டமிட்டுள்ள சட்டத்தில் இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையிலான வலிமையான பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024