By ப. சங்கரலிங்கம்
First Published : 16 October 2015 01:42 AM IST
அரசியலா! அது நமக்கு சரிப்பட்டு வராது. ஆகவே ஆகாது. அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்ற மனநிலை பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது இன்று, நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே உள்ளது.
அரசியலில் நேர்மை இல்லை. ஊழலும், அராஜகமும்தான் அரசியலை வழிநடத்தும் இருபெரும் தீயசக்திகள் என்று கூறுவதில் உண்மை இருந்தாலும், அதை ஏன் மாற்ற முடியாது? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இதற்கு முதலில் அச்சத்தை ஒழிக்க வேண்டும்.
எந்த ஒரு காரியத்துக்கும் தைரியமே முதல் தகுதி. இது இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். தலைமுறை தலைமுறையாக நம் நாட்டு மக்கள் மனதில் கறையாகப் படிந்திருக்கும் அச்சமே அரசியலைப் பற்றிய அச்சத்துக்கு காரணம்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, "அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவணியிலே' என மகாகவி பாரதியார் மன வேதனையில் பாடியதே, அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை எண்ணித்தான்.
அரசியல் என்றால் கட்சிகளின் செயல்பாடு சம்பந்தப்பட்டது. அதாவது கூட்டம் நடத்துவது, கொடி கட்டுவது, தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது, எதிர்க்கட்சியாக இருந்தால் அரசுக்கு, அதாவது ஆளும் கட்சிக்கு எதிராகப் போராட வேண்டும், வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு கொண்டுவந்தாலும், அதைத் திரித்து மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சாலை மறியல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது, மக்கள் பிரச்னையை எடுத்துக் கூறி தீர்வு காண வேண்டிய அவையில், கட்சிகள் அராஜகத்துடன் நடந்துகொள்வது என்பதும், ஆளும் கட்சி என்றால் ஊழல் செய்வது, எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவது என்ற தற்போதைய அரசியல் துரதிர்ஷ்ட நிலையில் உள்ளது.
இதனால், அரசியல் அல்லது அரசியல்வாதி என்றாலே நாணயமற்றவர்கள் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது.
ஊழல், பழிவாங்கும் எண்ணம், நம்பிக்கைத் துரோகம் போன்றவை தற்கால அரசியலில் தலைதூக்கியிருந்தாலும், நேர்மையான-திறமையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து நிர்வாகத் திறன், வெற்றி - தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம், சகிப்புத்தன்மை,பேச்சாற்றல், தியாகம், ஒழுக்கம், பெருந்தன்மை, தன்னம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
அரசியல் வேறு, அரசு வேறு என்று கூறப்பட்டாலும் அரசின் அஸ்திவாரம் அரசியல்தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் இறப்பு வரை அரசியலின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையல்ல. குழந்தை பிறந்ததும், பிறப்புச் சான்றிதழ் பெறுவதுகூட அரசியல் சார்புடைய நடவடிக்கைதான். பிறப்பு சான்றிதழ் பெறுவதன் மூலம் நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் அந்தக் குழந்தை சேர்க்கப்படுகிறது.
அதன்மூலம், அரசின் நலத் திட்டங்கள், வரவு - செலவு அறிக்கைத் தயாரித்தல் போன்றவற்றிற்கு மக்கள்தொகை புள்ளி விவரங்கள் உதவுகின்றன. அரசின் இந்த நடவடிக்கைகூட அரசியல் சார்புடையதுதான்.
தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான காலத்திலும் அரசியல் கலந்திருக்கிறது. எப்படி என்றால் பாடத் திட்டம், இலவச கட்டாயக் கல்வி சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இன்னும் பிற சலுகைகள் என அரசு நடைமுறைப்படுத்தும் எல்லாத் திட்டங்களும் அரசியல் தொடர்புடையதுதான்.
படித்து முடித்ததும் பணியில் சேர்வது, பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவது என அனைத்தும் அரசியல் தொடர்புடையதுதான். நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிக்கானத் திட்டங்கள், அண்டை நாடுகளுடனான உறவு, வெளிநாடுகளுக்கு மத்தியில் நம் நாட்டின் மதிப்பு என அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியல் உள்ளது.
இதனால், அரசியலைப் பற்றி குடிமக்கள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், நம்நாட்டில் பாமர மக்களிடம் இருக்கும் அரசியல் ஆர்வம்கூட படித்தவர்களில் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இது குற்றப் பின்னணி உள்ளவர்கள் எளிதாக அரசியலுக்கு வந்து கோலோச்ச வசதியாக அமைந்துவிடுகிறது.
இதனால், நமது நாடு இயற்கையாகவே பல்வேறு வளங்களை பெற்றிருந்தும், வளர்ச்சியடைவதில் பின்தங்கியே உள்ளது. இந்த நிலை மாற, படித்தவர்கள் ஆர்வமுடன் அரசியலுக்கு வரவேண்டும். நன்றாகப் படித்து முதலிடம் பிடிக்கும் மாணவரிடம்கூட அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது.
இதற்கு நமது கல்வி முறை மட்டுமன்றி அந்த மாணவரின் பெற்றோரும் ஒரு காரணம். அரசியல் அறிவு தங்களது மகனை நல்வழிப்படுத்தாது, தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும் என்ற அச்சம் பெற்றோரிடம் உள்ளதால், அவர்கள் தங்கள் மகனோ, மகளோ அரசியல் பற்றி அறிந்துகொள்ள விரும்புவது இல்லை. இதன் காரணமாக, சிறு வயது முதலே அரசியல் பற்றிய தவறான எண்ணம் மனதில் பதிந்துவிடுகிறது.
இதனால், உயர் கல்லி கற்றவர்களில் பெரும்பாலானவர்களிடம் அரசியல் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசியல் அறிவும் அவசியம்.
எனவே, கல்வித் திட்டத்தில் அரசியல் பாடத்தை கட்டாயமாக்கி, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் அரசியல் பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும். மேலைநாடுகளில் படித்தவர்களே பெரும்பாலும் அரசியலில் உள்ளதுபோல் நம் நாட்டிலும் படித்தவர்கள் அதிக அளவில் அரசியலில் பங்கெடுத்தால்தான் மேலைநாடுகளைப்போல நம் நாடும் வேகமான வளர்ச்சி பெறும் என்பது திண்ணம்.