By ஆசிரியர்
First Published : 01 November 2015 01:43 AM IST
நமது "தினமணி' நாளிதழின் பத்தாவது பதிப்பாக, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களுக்கான நாகப்பட்டினம் பதிப்பு இன்று முதல் வெளிவருகிறது. "தினமணி' நாளிதழின் நீண்ட நெடும் பயணத்தில் இது மற்றுமோர் மைல் கல்.
நமது 10-ஆவது பதிப்பு தொடங்கப்படும்போது, 82 ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதியாரின் 13-வது நினைவு நாளில் "தினமணி' தொடங்கப்பட்டது பற்றி நினைக்கத் தோன்றுகிறது. சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க பத்து ரூபாய் பரிசு என்று 1934-இல் அறிவிக்கப்பட்டது. "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. "தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருந்தது.
செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.
"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர்' என்று பெருமையுடன் கூறிக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது, தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.
சுதந்திரப் போராட்டக் காலத்தின் உச்ச கட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் திரட்டும் ஆயுதமாக "தினமணி' விளங்கியது.
"தினமணி'யின் முதல் பதிப்பு சென்னையில் 1934-ம் ஆண்டு உதயமானது. அதன்பிறகு 1951-ல் மதுரை பதிப்பும், 1990-ல் கோவை பதிப்பும் உருவானது. அதன்பின்னர், 2003-ல் திருச்சியிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களிலும் பதிப்புகளைத் தொடங்கிய தினமணி தனது ஏழாவது பதிப்பை அதியமான் பூமியான தருமபுரியில் 2010-ஆம் ஆண்டிலும், தலைநகர் தில்லியில் 2011-ஆம் ஆண்டிலும், விழுப்புரத்தில் 2013-ஆம் ஆண்டிலும் பதிப்புகளைத் தொடங்கி இப்போது உங்கள் "தினமணி' நாளிதழின் நாகைப் பதிப்பு இன்று மலர்ந்திருக்கிறது.
நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளுக்கென்று ஒரு தனிப் பதிப்பு தேவைதானா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஏனைய நாளிதழ்கள் எதுவுமே நாகை, திருவாரூர் பகுதிகளிலிருந்து வெளிவராத நிலையில், "தினமணி' நாளிதழ் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியது ஏன் என்று சிலர் கேட்கக் கூடும். அதற்குக் காரணம் இருக்கிறது.
தமிழகத்திலுள்ள எந்த அச்சு, ஒளி ஊடகங்களை எடுத்துக் கொண்டாலும், ஓர் ஆண்டின் 365 நாள்களில் குறைந்தது 300 நாள்களாவது நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகள் தொடர்பான ஏதாவது ஒரு செய்தி இல்லாமல் வெளி வருவதே இல்லை. அது காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்னையாக இருக்கலாம் அல்லது நாகை மீனவர்கள் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் நாகை, திருவாரூர் மாவட்டம் செய்தியில் அடிபடாமல் இருப்பதே இல்லை.
இப்படிப் பிரச்னைகள் தொடர்ந்து இருக்கும் பகுதியிலிருந்து ஒரு நாளிதழ் வெளிவரும்போது, அந்தப் பிரச்னைகளை மாநில, தேசிய அளவில் உரக்க ஒலிக்கச் செய்ய முடியும் என்பதும், அதன்மூலம் தீர்வுக்கு வழிகோல முடியும் என்பதும் எங்கள் நம்பிக்கை. குறிப்பாக, தலைநகர் தில்லியிலிருந்து வெளிவரும் ஒரே நாளிதழ் என்கிற பெருமைக்குரிய தினமணியால் மட்டுமே அது சாத்தியம் என்பதை உலகறியும்.
நாகையில் பதிப்புத் தொடங்கும்போது "தினமணி' முன்வைக்க விரும்பும் இன்னொரு கோரிக்கை, நாகை மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்பது. மயிலாடுதுறையைச் சேர்ந்த மக்கள் மாவட்டத்தின் தலைநகரான நாகைக்கு வருவதற்கு யூனியன் பிரதேசமான காரைக்கால் வழியாகவோ, திருவாரூர் மாவட்டம் வழியாகவோதான் வந்தாக வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, காரைக்கால் வழியாக வாகனங்களில் வரும் பயணிகள் புதுச்சேரி அரசுக்கு நுழைவு வரி செலுத்தும் கட்டாயமும் உண்டு.
2004-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில், சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகியவை மாவட்டங்களாகச் செயல்பட முடியுமானால், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி வட்டங்களையும், 286 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ள மயிலாடுதுறை வருவாய்க் கோட்டம் ஏன் தனி மாவட்டமாகச் செயல்படக் கூடாது என்கிற கேள்வியை "தினமணி' உரக்க எழுப்பி, அந்தப் பகுதி மக்களின் உணர்வைப் பிரதிபலிக்க விரும்புகிறது.
"தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கமும், நீண்ட நாள் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என். சிவராமனும் இட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் தொடர்ந்து நடைபோடும் உங்கள் "தினமணி' தனது பத்தாவது பதிப்புடன் வீறு நடை போடத் தயாராகிறது.
இப்போதும், ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற எண்ணத்துடனும், ஓர் ஆவணப் பதிவைத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற உணர்வுடனும்தான், "தினமணி' நாளிதழ் தினந்தோறும் உருவாக்கப்படுகிறது.
இதில் வியப்படைய ஒன்றுமில்லை. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் எங்களது நிறுவன ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் குறிக்கோளாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் இன்று வரை தொடர்கிறது, அவ்வளவே!
"எல்லா வியாதிகளிலும் மனோ வியாதியே மிகக் கொடியது. நமது மக்கள் மனதில் அடிமைத்தனம் குடி கொண்டிருக்கிறது. நமது பெரியாரிடத்தும், சிறியாரிடத்தும் அடிமைப்புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு ஒழித்து, தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்கு "தினமணி' ஓயாது பாடுபடும் என்றும், "சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திரத் தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் "தினமணி'யைத் தமிழ் மக்கள் முன்வந்து வரவேற்பார்கள் என்பது நமது பரிபூரண நம்பிக்கை என்றும் எங்களது நிறுவன ஆசிரியர் தனது முதல் நாள் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அதே காரணங்களை முன்னிறுத்தி, இப்போதும் "தினமணி'யின் பயணம் தொடர்கிறது. அந்தப் பயணத்தில் "தினமணி'யின் நாகைப் பதிப்பு மற்றுமொரு மைல் கல்.
தமிழுணர்வு, தேசியக் கண்ணோட்டம், சமத்துவச் சிந்தனை, ஆன்மிக எழுச்சி என்று தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் "தினமணி', நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் வாழ் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் பிரதிபலிக்கவும், அவர்களது நல்வாழ்வுக்கு உறுதுணையாக நிற்கவும் இன்று முதல் இந்தப் பதிப்பை வெளிக்கொணர்கிறது.
பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், இந்தியாவில் மக்களாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் எங்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கும், முகவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றி.
தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!