By ஆசிரியர்
First Published : 19 November 2015 01:34 AM IST
ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடாது என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ.) மகாராஷ்டிரத்துக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட பிறகும், தொடர்ந்து ஆங்கில மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தின் மீதான விமர்சனத்தை ஆங்காங்கே தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பதிலடியாக சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி, ஓராண்டு மருந்தியல் சான்றிதழ் படிப்பு முடித்த பின்னர் ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களும் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
அந்த முயற்சி ஆங்கில மருத்துவத்துக்கு தீங்காக அமைந்துவிடும் என்று இந்திய ஆங்கில மருத்துவம் செய்வோர் அச்சம் கொள்கின்றனர். இத்தகைய போக்குகள் போலியான ஆங்கில மருந்துவர்களை உருவாக்கிவிடும் என்று அவர்கள் தெரிவிக்கும் கருத்து நியாயமானதுதான். ஆனால் அதற்காக, இவ்வாறான பல்வேறு மருத்துவப் பிரிவுகளிடையே காணக்கூடிய ஒத்திசைவான சிகிச்சை முறைகளை மறுதலிப்பது தேவையற்றது. சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் அலோபதி மருந்துகள் வெறும் வலி நிவாரணிகளாக மட்டுமே இருந்தால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது தேவையற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, இப்போதும்கூட மறுபதிப்பு காணும் டாக்டர் டேவிட் வெர்னர் எழுதிய "டாக்டர் இல்லாத இடத்தில்' (Where there is no Doctor: A village health care handbook) என்கிற புத்தகம் சாதாரண நபர்களுக்கான முதலுதவி மற்றும் அடிப்படை மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம் இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோர முடியுமா?
டாக்டர் இல்லாத கிராமத்தில் ஒரு சாதாரண நபருக்குத் தரப்படும் உரிமைகூட, ஆங்கில மருத்துவர்களைப் போலவே குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களுக்குக் கிடையாதா? ஒரு சாதாரண நபரைக் காட்டிலும் இவர்கள் ஆங்கில மருத்துவத்தை தவறாகப் புரிந்துகொண்டு, மருந்துகளைத் தவறாகப் பரிந்துரைத்துவிடுவார்களா? உயிரிழப்பை ஏற்படுத்திவிடுவார்களா?
முதலுதவி மருத்துவத்துக்கும், போலி மருத்துவத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நுட்பமாகப் பார்த்தால் இந்த எதிர்ப்பு சாதாரண மக்களுக்கு யார் வேண்டுமானாலும் முதலுதவி அளிப்பதா என்கின்ற பிரச்னையால் வருவதில்லை. இது தொழில் போட்டி. அதுதான் இந்த எதிர்ப்புக்கு மிக அடிப்படையான காரணம். இதனால்தான், டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் நல்ல தீர்வு என்றால், அதையும் ஆங்கில மருத்துவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
ஒரு சில அலோபதி மருத்துவர்களால்கூட மஞ்சள் காமாலைக்குப் பெரிதும் பரிந்துரைக்கப்படும் லிவ்-52 என்பது மூலிகையில் தயாரிக்கப்பட்ட மருந்துதான். மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாக சீனாவில் அறியவந்த மூலிகைப்பட்டை பரவலாகத் தரப்படுகிறது. குணமாவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எலும்பு முறிவு சிகிச்சைகளுக்கும் மூட்டுவலிக்கும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் மூலக்கூறுகள் நாட்டு மருத்துவர் சொல்லும் பச்சிலைகளில் இருக்கின்றன. இதை ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் பரிந்துரைக்கக்கூடாது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் வழக்குத் தொடுத்தால் அது நியாயமாக இருக்குமா?
ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் கொஞ்சம் தமிழ் இலக்கியத்தையும் தெரிந்து வைத்திருப்பதைப் போல, அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில வலி நிவாரணிகளை அறிந்து வைத்திருப்பதிலும், குறுகிய கால பயிற்சிக்குப் பிறகு அதை முதலுதவி என்ற அளவில் இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் பரிந்துரைப்பதிலும் கூடத் தவறு இருக்க முடியாது.
இந்திய மருத்துவத்தில் ரணச் சிகிச்சையும் (அறுவைச் சிகிச்சைகள்) ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய தேதியில் அவற்றை யாரும் செய்வதில்லை. அறுவைச் சிகிச்சை முழுமையாக ஆங்கில மருத்துவர்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. அறுவைச் சிகிச்சையில் போட்டிபோட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் தயார் இல்லை. மிக எளிய, சிறு காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மாத்திரைகள், வலிநிவாரணிகள் மட்டும் பரிந்துரைக்க அனுமதிக்கலாம். அதுவும்கூட, அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கையுள்ள நோயாளிகளுக்கு தாற்காலிக மருத்துவமாகத்தான் அவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
என்னதான் விமர்சனம் செய்தபோதிலும், இன்று தமிழ்நாட்டில் நிலவேம்புக் குடிநீர் சூரணம் விற்பனை அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத்தில் முதன்மையான நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் கேட்டு வாங்கிச் செல்லும் நிலை இருக்கிறது. ஆனால், இவற்றின் தரம் என்ன? நிலவேம்புக் குடிநீரில் கலக்கப்பட வேண்டிய ஒன்பது வகை மூலிகைகளும் தரமாக, குறிப்பிட்ட அளவில் கலந்திருக்கிறதா என்பதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்புக் காலத்தில் ஓரிரு மாதம் எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களின் படிப்பு குறித்து தெரிந்துகொள்ளவும், அதேபோன்று அலோபதி மாணவர்கள் இந்த பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓரிரு மாதம் சென்று அதனைத் தெரிந்துகொள்வதும், மாற்று மருத்துவப் பிரிவுகளின் மீது பரஸ்பரம் மரியாதைக்கும் புரிதலுக்கும் வழி வகுக்கும்.
மருத்துவ முறை எதுவாக இருந்தாலும், வியாதி குணமாக வேண்டும். தவறானவர்கள் தவறான சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்காத வரையில், அலோபதி மருத்துவர்களின் அச்சம் தேவையற்றது.