the hindu tamilM.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.
‘புரட்சிப்பித்தன்’... இந்தப் பெயரைப் பார்த் ததுமே எம்.ஜி.ஆர். படத் தலைப்பு என்பது புரியும். இந்தப் படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ். திரவியமும் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணாவும் தயாரிப்பதாக இருந்து சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு கன்னடப் படத்தின் கதை. பாடல்களுடன் திரைக்கதை, வசனமும் வாலி எழுதுவதாக இருந்தது. 1975-ம் ஆண்டு ‘தீபாவளி வெளியீடு’ என்று பத்திரிகைகளில் விளம்பரமும் வந்தது. ஆனால், அரசியலில் எம்.ஜி.ஆர். ‘பிஸி’யாகி, தேர்தல் வந்து ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிட்டதால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த படத்தின் காட்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவையான சம்பவம்.
கதைப்படி எம்.ஜி.ஆர். ஒரு விஷயத்துக்காக வேண்டுமென்றே மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல நடிப்பார். ஒரு நாள் படப்பிடிப்புக்கு முன்ன தாக இயக்குநர் ராமண்ணாவின் ஆலோசனைப் படி, அன்று எடுக்க இருக்கும் காட்சி பற்றி ஒப்பனை அறையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று விளக்கினார் வாலி. அதைக் கேட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.
அன்று எடுக்க வேண்டிய காட்சியின்படி கோயிலுக்கு காரில் வந்து இறங்கும் கதாநாயகி, சாமி கும்பிடுகிறார். அவர் கண்களை மூடி வணங்கும்போது, பின்னால் வரும் மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கும் எம்.ஜி.ஆர். நாயகியின் தலையில் சூடி இருக்கும் மல்லிகைப் பூவை பிய்த்து தின்ன வேண்டும். அதன்படியே, எம்.ஜி.ஆர். மல்லிகைப் பூவை பிய்த்து தின்றார். எல்லோருக்கும் திருப்தி; காட்சி ஓ.கே.
ஆனால், வாலி மட்டும் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் நின்றார். எல்லோரையும் நோட்டமிட்ட எம்.ஜி.ஆர். அதை கவனித்து விட்டார். ‘‘என்ன ஆண்டவனே... காட்சி உங்களுக்கு திருப்தி இல்லையா?’’ என்று வாலியிடம் கேட்டார்.
‘‘ஆமாண்ணே, நாயகியின் தலையில் உள்ள பூவை நீங்க இன்னும் நிறைய பிச்சு எடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு உள்ள வேகத்தோடு தின்னுருக்கணும்’’ என்ற வாலியின் பதிலால் கோபமடைந்தார் எம்.ஜி.ஆர்.
‘‘அது எனக்கும் தெரியும். ஆனா எப்படிய்யா வேகமா திங்கிறது? மல்லிகைப் பூவை கடிச்சுப் பாரும். எட்டிக் காயா கசக்கும்’’ என்று வாலியைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு ஒப்பனை அறைக்கு விறுவிறுவென எம்.ஜி.ஆர்.சென்று விட்டார்.
படப்பிடிப்பு குழுவினர் வாலியை விரோதியைப் போல பார்த்தனர். எம்.ஜி.ஆரை சமாதானம் செய்வதற்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு வாலியே சென்றார். வழக்கமாக ஒப்பனை அறை யின் முன் நிற்கும் எம்.ஜி.ஆரின் காரைக் காணோம். ‘ஒருவேளை வீட்டுக்கே எம்.ஜி.ஆர். புறப்பட்டு போய்விட்டாரோ?’ என்று குழம்பியபடி நின்ற வாலி யின் சிந்தனையைக் கலைத்தது எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் குரல்.
‘‘என்னண்ணே, இங்கேயே நிக்கிறீங்க. சின்னவர் (எம்.ஜி.ஆர்.) உள்ளேதான் இருக் காரு... வாங்க’’ என்று வாலியின் வயிற்றில் பால் வார்த்தார் பீதாம்பரம்.
உள்ளே சென்ற வாலி, எம்.ஜி.ஆரைப் பார்த்து பவ்யமாக, ‘‘அண்ணே, என்னை மன்னிக்கணும். மனதில் பட்டதைச் சொன்னேன். நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது’’ என்றார். எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடி,
‘நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு’
என்ற திருக்குறளை சொல்லி, ‘‘நீங்கதான் உண்மையான நண்பர். உங்களை எதுக்கு மன் னிக்கணும்? அதே காட்சியை மறுபடி எடுக்கலாம். ராமண்ணாகிட்ட சொல்லுங்க’’ என்றார்.
இங்கே ஒரு விஷயம். நியாயமான கருத்தை சுட்டிக் காட்டி குறை சொன்ன வாலியை, உண்மையான நண்பர் என்று பாராட்டியதோடு, ஒருவரோடு நட்புகொள்வது சிரித்து மகிழ மட்டுமல்ல; தவறை இடித்துரைத்து திருத்துவதற்கும் என்று பொருள்படுகிற அதிகம் புழக்கத்தில் இல்லாத பொருத்தமான குறளையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.
மறுபடி அதே காட்சியை எடுக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சிறிய மாற்றம். வாலி கூறியபடி பூவை நிறைய பிய்த்து வேகமாக தின்ன வசதியாக நாயகி தலையில் இருக்க வேண்டிய மல்லிகைப் பூ, ரோஜாப் பூவாக மாறியது; அதுவும் எம்.ஜி.ஆர். செலவிலேயே. வாலி பார்த்தபோது, எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு முன் வழக்கமாக நின்றிருக்கும் கார் திடீரென காணாமல் போனதன் ரகசியமும் சிறிது நேரத்தில் தெரிய வந்தது. அந்தக் காரில்தான் ஒரு கூடை ரோஜாப்பூ வந்தது.
வாலியின் கருத்துக்கும் மதிப்பளித்து அதே நேரம் காட்சி சிறப்பாக வர, சாதுர்யமாக மல்லிகைப் பூவை ரோஜாப் பூவாக மாற்றி விட்டார் எம்.ஜி.ஆர்.
மீண்டும் அந்தக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கும் முன், ‘‘அண்ணே நீங்க ரோஜாப் பூவை தின்னா எப்படி இருக்கும் தெரியுமா?’’ எம்.ஜி.ஆரை பார்த்து கேட்டார் வாலி.
‘இதென்ன மறுபடியும்?’ என்று புரியாமல் எல்லோரும் பதைபதைப்புடன் பார்க்க, வாலி சொன்னார்...
‘‘ரோஜாப் பூவே ரோஜாப் பூவை திங்கிற மாதிரி இருக்கும்’’
எம்.ஜி.ஆரின் முகம் ரோஜாவாய் மலர்ந்தது.
- தொடரும்...
‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘தம்பி, நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..’ என்ற பிரபலமான பாடல் இடம்பெறும். பாடலுக்கு முன் இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு புத்தகத்தை பார்த்தபடி ‘பாட்டை எழுதியவர் வாலி’ என்று எம்.ஜி.ஆர். சொல்வார். இது வாலியின் திறமைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த அங்கீகாரம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வாலியை இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியில் நியமித்தார். அதற்கு முன் கவுரவப் பதவியாக இருந்த அதன் பதவிக் காலத்தை மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்து ஊதியமாக மாதம் ரூ.3,000 வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
Keywords:
எம்ஜிஆர். தொடர்,
எம்.ஜி.ஆர் தொடர்,
எம்.ஜி.ஆர் வாழ்க்கை,
எம்.ஜி.ராமச்சந்திரன்,
எம்ஜிஆர் கதை,
மனிதநேயம்