'வாழ்ந்து விடு...' மிரட்டிச் சென்ற 'வர்தா'
மத்திய சென்னை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு. பனியில் தலை குளித்துக் கொண்டிருந்தது, என் வீட்டின் மொட்டை மாடி.'வர்தா புயல் நெருங்கி வந்திருச்சு. சாயங்காலத்துக்கு மேலே மழை வரும்னு சொன்னாங்க... ஒண்ணையும் காணோம்...' பக்கத்து வீட்டுக்காரர், தோள் துண்டால் முதுகு துடைத்தபடி கேட்டார்.
'அவங்க சொல்றது என்னைக்கு சரியா நடந்திருக்கு...' குளிரில் துவண்டிருந்த மூளைக்கு, புதிதாய் எதுவும் தோன்றாததால், மொக்கையாய் இப்படிச் சொல்லி சலித்துக் கொண்டேன்.
எதிர் வீட்டின் முன் இருந்த பெரிய வேப்ப மரம், சாதுவாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த அலைபேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தேன். மணி, 8:00. அழைத்தது, தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் உறவுக்காரர்.
'வர்தா' பற்றி விசாரித்த உறவுக்காரரிடம், 'அப்படில்லாம் இருக்காது. நிலா கூட தெளிவா தெரியுதுன்னா பாரேன்' என்றேன். எதிர் வீட்டில், வேப்ப மரத்தையும் விஞ்சி நின்றிருந்த மொபைல் போன் டவர், என்னை முறைத்துக் கொண்டிருந்தது.
'மழை வர்றதா இருந்தா, குளிர் குறைஞ்சிருக்குமே' அனுபவப் பாடம், குளிரோடு சேர்த்து மனதை சிலிர்க்க வைக்க, அக்குளிரை நிறைத்தது, குருமா வாசம். இரவு உணவாக வீட்டில் தயாராகி கொண்டிருந்த சப்பாத்தி நினைவுக்கு வர, கீழிறங்க, மாடிப்படியை நெருங்கினேன்.
அப்போது, என் தோளில் விழுந்தது ஒரு துளி. அம்மழைத் துளியை, பெரும் அபாயத்திற்கான சிறு எச்சரிக்கையாய் கூட நான் உணரவில்லை.
நள்ளிரவு 12:00 மணி. 'மழை பெய்யுதுன்னு நினைக்கிறேன்' என, மனைவி சொல்ல, ஜன்னல் கதவை திறந்தேன். மழை தான்! குனிந்து வானம் பார்த்தால், நான்கு மணி நேரத்திற்கு முன் பார்த்த வானம் அது இல்லை; சிவந்து கிடந்தது.
'வாட்ஸ் ஆப்'பை உயிர்ப்பித்தேன். 'சென்னைக்கு மிக அருகில் நெருங்கி விட்டது வர்தா; எச்சரிக்கையாக இருங்கள்' நண்பர்கள் அனுப்பியிருந்த தகவல், மனதிற்குள் பீதியை கிளப்பியது. 'மழை அந்தளவுக்கு இல்லையே...' எனக்குள்ளே சமாதானம் சொல்லி, புரண்டு படுத்தேன். மழை வலுக்கத் துவங்கியது. 'எதுவும் நடக்காது' என்ற என் தைரியம், வெளுக்கத் துவங்கியது!
திங்கட்கிழமை கண் விழித்த போது, காலை மணி, 7:00. கும்மிருளில் இருந்தது வீடு. 'கரன்ட் கட் ஆயிருச்சுப்பா!' மகள் சொல்ல, 'டேங்க் நிறைச்சிட்டீங்களா...' பதற்றமாய் கேட்டேன். 'ஹவுஸ் ஓனர், 5:00 மணிக்கே மோட்டார் போட்டுட்டார்' மனைவி சொன்ன பதில், நிம்மதி தந்தது.
'நாலு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ, கரன்ட் இல்லை. பிரிஜ் இல்லேன்னா பால் கெட்டுப் போயிடுமே...' மனைவியின் புலம்பலில், நெருங்கி வரும், 'வர்தா'வின் வீரியம் புரிந்தது.
என் தைரியம் இன்னும் வெளுக்கத் துவங்கியது. ஆனால், என் மனைவிக்கும், மகளுக்கும், என் அம்மாவுக்கும் தைரியம்; நான் இருக்கிறேன் என்று! எனக்கோ பயம்; அவர்களை பாதுகாக்க வேண்டுமே என்று!
படுக்கையறையின் ஜன்னல் இடுக்கு வழியே, மெலியதாய் ஊளையிடத் துவங்கியது காற்று.
'மாடிக் கதவை அடைச்சிட்டேன். யாரும் மொட்டை மாடிக்கு போகாதீங்க. ஜன்னல் கதவு எதையும் திறக்காதீங்க' சத்தமாய் சொல்லிய படியே, கீழிறங்கிப் போனார் வீட்டின் உரிமையாளர். வீட்டிற்குள் மெழுகுவர்த்தி கரைந்து கொண்டிருந்தது. அதை அணைக்க, வீட்டின் இடுக்குகளின் வழியே போராடிக் கொண்டிருந்தது காற்று.
'சாயங்காலம் கார்த்திகை தீபம் ஏத்த முடியுமாப்பா?' - 70 வயது அம்மாவின் சந்தேகக் கேள்வி, மனதிற்குள் திகிலை கிளப்பியது. '100 கி.மீ., தொலைவில் வர்தா' அலைபேசி வழி, 'வாட்ஸ் ஆப்' செய்தி வந்து விழுந்த வேளையில், 'ஊஊ... ஊஊ...' என, பெரும் ஊளையிடத் துவங்கியிருந்தது, காற்று.
'ச்ச்ச்சடார்...' பின் பக்க வீட்டில் வேயப்பட்டிருந்த, 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை, இருந்த இடத்தின் தொடர்பை முறித்துக் கொள்ளத் துவங்கியிருந்தது. 'ஷ்ஷ்ஷ்ஷ்...' சீறியபடி ஏதோ ஒன்று, எங்கள் படுக்கையறையின் கண்ணாடி ஜன்னலை நோக்கி வந்தது. 'அது என்னவாக இருக்கும்' என, உணர்வதற்குள், 'ச்ச்ச்ச்லீர்ர்ர்...' நொறுங்கியது கண்ணாடி. சில கண்ணாடி துண்டுகள் மெத்தையில் தெறிக்க, 'அம்மா...' அலறினாள், என் மகள். 'அய்யய்யோ... இங்கே வந்திருங்க...' மனைவியும், அம்மாவும் கையைப் பிடித்து இழுக்க, மகளும், நானும் அறை கடந்தோம்.
அந்த அறைக்குள் காற்றாகவும், நீராகவும் நுழையத் துவங்கியிருந்தது வர்தா.
கை, கால் நடுங்க, மூச்சிறைக்க, இதயம் குதிரை வேகத்தில் விரைய, வரவேற்பறை சோபாவில் அமர்ந்த படி, நான். சுற்றிலும், என்னை நம்பியிருக்கும் மூன்று ஜீவன்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அத்தனை பேர் முகத்திலும் மின்னியது பயம். சமையலறையில் உள்ள, 'எக்ஸ்ஹாஸ்ட் பேன்' நிலை கொள்ளாமல் முன்னும், பின்னும் அசுரத்தனமாய் சுற்றிக் கொண்டிருந்தது.
பதற்றம் தணிக்க, அண்ணாந்து நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நொடியில், 'டொம்ம்ம்ம்ம்ம்...' என, பெரும் சத்தம் கேட்டது, வெளியே. மகள், என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். மனைவி, தோள்களைப் பற்ற, அம்மா, என் கைகளைப் பிடித்துக் கொண்டார். தண்ணீர் விழுங்கிய நான், இடைவெளியின்றி எச்சில் விழுங்கினேன்.
'எதிர் வீட்டு வேப்ப மரமும், டவரும் சாய்ஞ்சிருச்சு. யாரும் வெளியில வராதீங்க' வீட்டின் உரிமையாளர் கீழிருந்து கத்தினார். என் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள், மகள். நிலைமை கைமீறி போவதை உணர்ந்தேன். பதற்றம் தணிக்க, 'இன்ட்ரால் 10' மாத்திரை ஒன்றை விழுங்கினேன். மகளையும், அம்மாவையும் வரவேற்பறையில் இருக்கச் சொல்லி விட்டு, அரிசி சாக்குப்பை ஒன்றை எடுத்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தேன். அறை முழுக்க சாரல்; தரை முழுக்க ஈரம். 'உடைந்த ஜன்னல் பகுதியை நீ எப்படி அடைக்கிறாய், பார்ப்போம்' என, முஷ்டி முறுக்கியது, வர்தா. அதனுடன் மல்லுக்கட்டி, ஒருவழியாக சாக்கை அடைத்து, சாரலை குறைந்து, வரவேற்பறை திரும்புகையில், என் உடலெங்கும் ஈரம்; என் மகள் கண்களிலும்!
அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டிருந்த போது, 'ஆ... அய்யோ...' வர்தாவை மீறி, வெடித்தது பெருங்குரல் ஒன்று! வரவேற்பறை பக்கம் இருந்து வந்த குரல், ஏதோ ஒரு அசம்பாவிதம் என்பதை உறுதிப்படுத்த, ஜன்னல் பக்கமாக சென்று காது கொடுத்தேன். எங்கோ இருந்து பறந்து வந்த பிளாஸ்டிக் தொட்டி, அடுத்த வீட்டின் பாத்ரூம் கூரையை பதம் பார்த்திருந்தது. வீட்டைச் சுற்றி, நாலாபுறமும் கூக்குரல்கள்!
தெருவிளக்குகள் வெடித்து தெறிக்கும் ஓசை, வயது வித்தியாசமின்றி அனைவரையும் அலற வைத்தது. பூஜையறையில் விளக்கேற்றி, முருகனை வழிபடத் துவங்கியிருந்தார், அம்மா. 'வாட்ஸ் ஆப்' படங்கள் மூலம், சென்னை சின்னாபின்னமாவதை உணர்ந்தேன். ஹாலிவுட் படம் ஒன்றில், 'சுனாமி' வரும் போது, மகளையும், மனைவியையும், நெஞ்சோடு சேர்த்து அணைத்து, அழும் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. மணி, 3:00. காற்றிடமிருந்து, மழை கழன்று கொண்டது.
வீட்டிற்கு வெளியே, மாடிப்படிகளில் காலடி சப்தம். 'வேண்டாம்ப்பா... போகாதீங்க...' மகள் தடுத்தும் கேளாமல், மாடிப்படிகள் ஏறினேன். எங்கிருந்தோ பறந்து வந்த பாத்திரங்கள், மரக்கட்டைகள் பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பச்சை இலைகளால் மொட்டை மாடி நிறைந்திருந்தது. காற்றில் பச்சை வாசம். சுவாசித்துக் கொண்டே, சுவர் அருகில் வந்து, தெருவைப் பார்த்தேன்; போர்க்களம் போல் இருந்தது. முதல் நாள் இரவு நான் உயிரோடு பார்த்த வேப்ப மரம், சடலமாகி கிடந்தது. கம்பீரமாய் நின்ற டவர், கவிழ்ந்து இருந்தது. என் வீட்டில், ஒரு ஜன்னல் கதவு மட்டும் சேதம்; பல வீடுகளில் எல்லா கதவுகளிலுமே சேதம்.'எனக்கு, 60 வயசு ஆகுது... நான் பார்த்த ஆக்ரோஷ புயல் இது தான்' என்றார், வீட்டு உரிமையாளர். பார்வைக்கு தென்பட்டவரையில் அத்தனை மரங்களுமே சாலையில் தான் கிடந்தன. கொஞ்சம், கொஞ்சமாய் தன் வேகத்தை வர்தா குறைத்துக் கொள்ள, எல்லா வீட்டு மாடிகளிலும் மனிதத் தலைகள்.
'உங்க வசதிக்காக, ஒரு பக்கமா கிளைகளை வெட்டி, என்னை இப்படி சாய்ச்சுட்டீங்களேடா...' என, வியந்து பார்க்கும் மனிதர்களிடம் மரங்கள் கதற, விடைபெற்றது வர்தா.
மாடியிலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்தேன். பாதிப்புகளை அறிய, என் குடும்பத்தையும் மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தேன்.
அவர்கள் மீண்டும் வரும் இடைவெளியில், எனக்குள் மீண்டும் ஒலித்தது அந்த குரல்... 'நாம இன்னைக்கு செத்துருவோமாப்பா...' என, சற்று நேரத்திற்கு முன், என் கைகளை இறுக பற்றியபடி, என் மகள் கேட்ட அந்த கேள்வி... ஒவ்வொரு நிமிடமும் முழுமையாய் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய கேள்வி! நீங்களும் வாழ்ந்து விடுங்கள் நண்பர்களே...!
- துரை கோபால் -