Sunday, December 25, 2016

காசோலைக்கு காசில்லை எனில் யாருக்கு சிறை?- ப.சிதம்பரம் பேச்சின் 10 தெறிப்புகள்

சிறப்புச் செய்தியாளர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழம நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய கருத்துகளின் 10 முக்கிய அம்சங்கள்.

* 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட நோக்கங்கள் தோற்றுவிட்டது. இவற்றை அறிமுகப்படுத்தி தவறு செய்துவிட்டதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்.

* இந்திரா காந்தி நல்ல நோக்கங்களோடுதான் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். ஆனால் அதனால் சாமானியர்கள் பட்ட துன்பங்களைக் கண்டு, இனிமேல் இப்படியொரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார். ஆனால் மோடியோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிக்கிறார்.

* கறுப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் தடுப்போம்; ஊழலை ஒழிப்போம் என்ற அவர்களின் உரைகள் பொய்யாகிவிட்டன. புது 2000 ரூபாயில் ஊழல் தொடர்ந்து நடக்கிறது. பணம் கறுப்புப் பணமாக மாறிவருகிறது.

* பணப்புழக்கம் இருந்தால்தான் பொருளாதாரம் இயங்கும். பணப்புழக்கம்தான் பொருளாதாரத்தின் நிலையை தீர்மானிக்கும்.

* தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 5 லட்சம் கோடி அளவுக்கு அச்சிட்டுள்ளனர். 15.44 லட்சம் கோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில், 10 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளுக்குள் வந்துவிடும். மீதம் 5.44 லட்சம் கோடி வராது. அதை கறுப்பு பணமாக அறிவித்துவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தனர். ஆனால், தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் 15.44 லட்சம் கோடியும் வங்கிக்குள் வந்துவிடும்போல் இருக்கிறது.

* கடந்த 45 நாட்களில் 62 முறை வங்கியில் பணம் எடுப்பது, செலுத்துவது குறித்த விதிகளை மாற்றியுள்ளனர். மக்கள் தொகையில் மொத்தம் 45 கோடி பேர் அன்றாடம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.

* கறுப்பு பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதில் எந்த நோக்கமும் நிறைவேறாது.

* ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மட்டும் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. கறுப்பு பணத்துக்கான தேவை இருக்கும்வரை அதன் விநியோகம் இருக்கும். அதற்கு முதலில் ஊற்றுக்கண்ணை தடுக்க வேண்டும்.

* உங்களுடைய அக்கவுண்டில் பணம் இல்லாமலே யாருக்காவது காசோலை அளித்தீர்கள் என்றால் உங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் கொடுக்கும் காசோலைக்கு வங்கிகளிலேயே பணம் இருப்பதில்லை. இதற்காக யார் சிறைக்குச் செல்வார்கள்?

* எந்த அரசுக்கும், பிரதமருக்கும் இத்தகைய மோசனமான பேரிடரை மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட உரிமை இல்லை. பிரதமர் மோடி, ஏழைகளின் நிலையைப் புறக்கணித்து மோசமான வழிகாட்டுதலால் ரூபாய் நோட்டு நடவடிக்கையில் தவறிழைத்து விட்டார். இதை அவர் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

உயர் படிப்புக்காகச் சென்று வேலை கிடைத்த நிலையில் கும்பகோணம் இளைஞர் பிரான்ஸில் கொலை: உடலை இந்தியா கொண்டுவர பெற்றோர் கோரிக்கை

வி.சுந்தர்ராஜ்
மணிமாறன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரைச் சேர்ந்த இளைஞர், பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தங்கள் மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அவரது பெற்றோர் பிரான்ஸ் நாட்டின் தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநறையூர் சிவன் கோயில் சன்னதி தெருவைத் சேர்ந்தவர் தங்கவேல், விவசாயி. இவரது மனைவி மணிமேகலை, மகன் மணிமாறன்(27), மகள் பொன் மணி(25). மகள் பொறியியல் பட்ட தாரி, அவரது திருமணத்துக்காக வரன் பார்த்துக் கொண்டிருக் கின்றனர். தங்கவேல் 15 ஆண்டு களுக்கு முன் வேலைக்காக அரபு நாட்டுக்குச் சென்று திரும்பியவர். தற்போது, ஏனாநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

இவரது மகன் மணிமாறன் தஞ்சாவூர் வல்லம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டுக்கு எம்.எஸ். (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்கச் சென்றார். படிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் அந்நாட்டிலேயே வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அண்மையில், பிரான்ஸில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மணி மாறனுக்கு வேலை கிடைத்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட் டில் மர்ம நபர்களால் மணிமாறன் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டதாக நேற்று முன்தினம், அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையறிந்து அவர்கள் கதறித் துடித்தனர்.

இதுகுறித்து மணிமாறனின் தந்தை தங்கவேல் கூறியது: என் மகன் பிரான்ஸ் நாட்டில் 4 ஆண்டு களாக உயர் படிப்பு படித்து வந்தார். அந்நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், வரும் ஜனவரி 2-ம் தேதி பணியில் சேர உள்ளதாகவும் கடந்த 22-ம் தேதி எங்களிடம் தெரிவித்தார். என் மனைவி, மகளிடமும் மகிழ்ச்சி யுடன் பேசினார்.

இந்த நிலையில், கடைவீதியில் சென்றுகொண்டிருந்த மணிமாறனி டமிருந்த செல்போனை ஒருவர் பறித் ததாகவும், அதைத் தடுத்தபோது கத்தியால் குத்தியதில் அவர் இறந்துவிட்டதாகவும் மணிமாற னின் நண்பர்கள் நேற்று முன்தினம் (டிச.23) என்னிடம் போனில் தெரி வித்தனர்.

என் மகன் தங்கியிருந்த அறையில், நாச்சியார்கோவிலைச் சேர்ந்த குமரேசன், நவீன் மற்றும் இருவர் என தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கியிருந்துள்ளனர். நேற்று கத்திக்குத்து காயங்களுடன் என் மகன், அறைக்கு வந்ததாகவும், லேப்டாப், செல்போன், பணம் ஆகியவற்றைச் சிலர் பறித்துக் கொண்டு கத்தியால் குத்திவிட்ட தாகவும் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக என்னிடம் கூறினர்.

பல இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்து, 4 ஆண்டுகள் படித்து முடித்து வேலை கிடைத்துள்ள நிலையில், அவர் கொல்லப்பட்டது எங்கள் குடும்பத்தை நிலைகுலை யச் செய்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள பிரான்ல் நாட்டின் தூதரகத் தில் புகார் மனு அளித்துள்ளேன். மேலும், மயிலாடுதுறை எம்பி பாரதிமோகனிடம் கடிதம் பெற்று, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளேன்.

மணிமாறனின் உடலை விரைந்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புத்தகங்கள் வாங்கக் கூட பணம் இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை: ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

Return to frontpage

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்து வதாகக் கூறி புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் செய்ததுதான் பிரதமர் மோடியின் சாதனை என செங்கல் பட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறினார்.

செங்கல்பட்டில் நேற்று முன்தினம் புத்தகத் திருவிழா தொடங்கியது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நெருக்கடி காலகட்டத்தில் வழக் கறிஞராக பதிவு செய்தேன். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு புத்தகம், செய்தித் தாள்களை படிக்க தரவில்லை. இதை யடுத்து என்னுடைய முதல் வழக்காக சிறையில் இருப்பவர்களுக்கு புத்தகம், செய்தித்தாள்களை படிக்கத் தர வேண்டும் என வாதாடினேன்.

நெருக்கடி நிலை காலத்தில் அனைத்து நீதிபதிகளும் அச்சத்துடன் இருந்த நிலையில், அந்த வழக்கை போட்ட பின் கைதிகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது என நீதிபதி கேட்டார். கைதியையும் மனிதனாக நடத்த வேண்டும். சிறையில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் புத்தகமே சிறந்த நண்பன் என நீதிபதி கிருஷ்ணஐயர் கொடுத்திருந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வாதிட்டேன். இதனையடுத்து சிறையில் இருந்த கைதிகளுக்கு செய்தித்தாளும் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி தற்போது மோடி செய்துள்ள சாதனை புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் செய்ததுதான். தற்போது பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து பல சிறு தொழில்களை நசுக்கியது போல் புத்தக விற்பனையையும் மோடி நசுக்கிவிட்டார். கடந்த வாரம் மும்பையில் விமான நிலையத்தில் ஒரு புத்தகம் வாங்க என்னிடம் பணம் இல்லை. கிரெடிட் கார்டு இருந்தும் அங்கு பயன்படவில்லை.

நம்மிடம் பணம் இல்லாமல் ஆக்கிவிட்டு, அங்கு சிலர் வீட்டில் தங்கம், வெள்ளி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுக்கின்றனர். பணம் இல்லாத பொருளாதாரம் என யாரைப் பார்த்து சொல்கின்றனர் என தெரியவில்லை.

கோட்டூர்புரம் அண்ணா நூலக கட்டிடம் ஆசியாவிலேயே பெரிய கட்டிடம். இதை கட்டி எழுப்ப 120 கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது. ஆனால் அந்தக் கட்டிடத்தை இடிக்க சிலர் முயற்சித்தனர். நூலகத்தை இடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? மக்கள் வாங்க முடியாத கருத்துப் பெட்டகத்தை நூலகத்தில் இருந்துதான் பெறமுடியும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும். இந்தக் கட்டிடத்தையும் இடிக்க வருகின்றனர் என்றால் நாம் எந்த நாகரீகத்தில் இருக்கின்றோம்?

நூலகங்களுக்கு புதிய புத்தகங் கள் வாங்கி பல ஆண்டுகள் ஆகின் றன. அவை தற்போது பகல் நேர ஓய்விடங்களாக மாறிவிட்டன. இப்படி திட்டமிட்டு புத்தகங்களை தடை செய்வதும், வாசிக்கவிடாமல் செய்வதும் நூலகங்களை இடிக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு குழு யோசிக்கும்போது அதற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு வருடங்களாக நூலக இயக்குநர் பதவி காலியாகவே உள்ளது. இதை நிரப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. இது நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான பிரச் னையில்லை மக்களுக்கும் அரசுக் குமான பிரச்சினை. இதை நாம் புரிந்து கொண்டால்தான் மக்களுக் கான அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தைகளும் நான்கு பெட்டிகளும்

செங்கல்பட்டு புத்தகத் திருவிழாவில் பேசும்போது முன்னாள் நீதிபதி சந்துரு தனது பேச்சில் குறிப்பிட்டதாவது: குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்கிட வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகளையும் அருகில் உள்ள குழந்தைகளையும் அழைத்து கூட்டாக வாசிப்பு வட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

தற்போது குழந்தைகளின் வாழ்க்கையை நான்கு பெட்டிகளில் அடக்கிவிடுகின்றனர். ஒன்று கணினிப் பெட்டி, இரண்டு செல்பேசி பெட்டி, மூன்று தொலைக்காட்சி பெட்டி. நான்காவதாக சவப்பெட்டி. இப்படி குழந்தைகள் தனது வாழ்க்கையை நான்கு பெட்டிக்குள் அடைக்கா

சேகர் ரெட்டியின் வங்கி லாக்கர்களுக்கு ‘சீல்’: பணம் பதுக்கலுக்கு உதவிய அதிமுக பிரமுகர் சிக்குகிறார்?


சேகர் ரெட்டிக்குச் சொந்தமான லாக்கர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். ரூ.24 கோடி பணம் பதுக்கலுக்கு உதவிய அதிமுக பிரமுகரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு தொழிலபதிபர்கள் பலர் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்த னர். மேலும், வங்கிகள் மூலம் முறை கேடாக கருப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றினர்.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி அவரது நண்பர்கள் சீனிவாசலு, பிரேம் ஆகியோருக்குச் சொந்த மான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் நடந்த சோதனையில், 177 கிலோ தங்கம் மற்றும் ரூ.131 கோடி ரொக்கம், ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பறி முதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத் தில் ரூ.24 கோடிக்கு ரிசர்வ் வங்கி யால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை நடந்தபோது காட்பாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்த தாரர் ஒருவருக்குச் சொந்தமான லோடு ஆட்டோவில் கடத்திச் சென்ற ரூ.24 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டி யின் செல்வாக்கில் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகள் பலவற்றை அவர் பெற்றுள்ளார். சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணத்தை அவர் ஆட்டோவில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

இந்தப் பணம் பறிமுதல் செய்யப் பட்டது குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், பணத்தை பதுக்க உதவிய அதிமுக பிரமுகரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, சிபிஐ அதிகாரிகள் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வங்கி லாக்கருக்கு ‘சீல்’

சேகர் ரெட்டி கைது செய்யப்பட் டுள்ள நிலையில் காட்பாடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லாக்கர்கள் பயன்படுத்துவதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அந்த லாக்கரில் இருந்த பணம், தங்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த லாக்கர்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்


இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் பாரத தர்ஷன் ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்விச் சுற்றுலா போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி கூடுதல் பொதுமேலாளர் எல்.ரவிக் குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில் திட் டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, வரும் 29-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ஆன்மிக சுற்றுலா ரயில் ஈரோடு, சேலம், காட்பாடி, சென்னை சென்டரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயத்துக்கு செல்லும். மொத்தம் 7 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.5,855 கட்டணமாகும்.

இதேபோல, வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷலாக மதுரையில் இருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்படும் சுற்றுலா ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், ஈரோடு வழியாக குருவாயூர், கொல்லூர் மூகாம்பிகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். மொத் தம் 6 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,900 கட்டணமாகும். மதுரையில் இருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்படும் குளிர்கால சுற்றுலா ரயில் மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு வழியாக கொச்சின், ஆலப்புழா, கோவா ஆகிய இடங் களுக்கு செல்கிறது. மொத்தம் 6 நாட்கள் கொண்ட இந்த சுற்று லாவுக்கு ரூ.5,225 கட்டணமாகும்.

ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். இது தொடர்பாக தகவல்களை பெற சென்னை சென்ட்ரல் 90031 40681, மதுரை: 0452 - 2345757, கோயம்புத்தூர்: 90031 40655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல சிங்கப்பூர் - மலேசியா (7 நாட்கள்), துபாய் - அபுதாபி (4 நாட்கள்), லங்கா (7 நாட்கள்), பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் (15 நாட்கள்) விமான சுற்றுலா அறிவிக்கப் பட்டுள்ளது. கட்டண விவரங்கள், சலுகைகளை தெரிந்துகொள்ள 90031 40617, 90030 24169 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

என் பெயர் சைக்கிள் ரிக் ஷா’: கும்பகோணத்தில் ஓடிய 1,500-ல் எஞ்சியது 5 மட்டுமே! வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் சவாரிக்காக காத்திருக்கும் சைக்கிள் ரிக் ஷா தொழிலாளர்கள்.

கடந்த 1980-ம் ஆண்டு வாக்கில் கும்பகோணம் நகரில் எங்கு திரும்பினாலும் சைக்கிள் ரிக் ஷாக்கள்தான் தென்படும். அப் போது, 1,500 ரிக் ஷாக்கள் ஓடிக் கொண்டிருந்த கும்பகோணத்தில் தற்போது இயங்குபவை வெறும் ஐந்தே ஐந்துதான்.

இந்த தொழில் எப்படி நசிந்தது, இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?

கும்பகோணம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கூண்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. பின்னர் சைக்கிள் ரிக் ஷாக்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன.

கும்பகோணத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாலக்கரை காய்கறி சந்தை, அரசு மருத்துவமனை, காந்தி பூங்கா, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டுகள் இருந்தன.

வெளியூரிலிருந்து வருபவர் களும், உள்ளூரில் உள்ளவர்களும் ரிக் ஷாக்காரர்களை பாசத்தோடு சவாரிக்கு அழைத்து செல்வார்கள். நியாய மான கூலியைத் தருவதுடன், உழைப்பைப் பார்த்து சற்று கூடுத லாகவும் கொடுக்கும் காலமும், மனதும் அப்போது இருந்தது.

பின்னர் மோட்டார் வாகனங் களின் வளர்ச்சியால் ஆட்டோக்கள் வரத் தொடங்கின. செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வதற்கு எளிதான வாகனமாக ஆட்டோக்கள் இருந்ததால், பொதுமக்களும் சைக்கிள் ரிக் ஷாவைத் தவிர்த்து விட்டு ஆட்டோக்களை பயன் படுத்தத் தொடங்கினர்.

நாடு முழுவதும் ரிக் ஷாக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், பாரம்பரியமிக்க நகரமாகவும், கோயில் நகரமாகவும் உள்ள கும்பகோணத்தில் இன்றும் 5 பேர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

கும்பகோணம் ரயில் நிலை யத்தில் காலையில் ரயில் வரும் நேரங்களில் இவர்கள் ஆஜராகி, பயணிகளை சவாரிக்கு அழைக்கின் றனர். ஆனால், யாருமே அவர் களைக் கண்டுகொள்வதில்லை என்றாலும், நாள்தோறும் ரயில் வரும்போதெல்லாம் சளைக் காமல் வந்து காத்திருந்து எப்படியாவது ஒரு சவாரியாவது ஏற்றிச் செல்கின்றனர்.

ரிக் ஷா ஓட்டும் தொழிலாளர் கள் முருகையன்(69), ஆனந்தன் (57), ராமகிருஷ்ணன்(72), காந்தி(69) ஆகியோர் கூறியது: நாங்கள் 40 ஆண்டுகளாக ரிக் ஷா ஓட்டி வருகிறோம். அப்போது எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் வந்தபோது எங்களுக்கு பெரும் மரியாதையும் மதிப்பும் இருந்தது. இப்போது அதெல்லாம் போய்விட்டது. நாங்கள் ரயில் நிலையத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களிலிருந்து வரும் வயதானவர்கள் ரிக் ஷாவில் ஏறு கிறார்கள். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தாலே அதிகம். வறுமையில் வாடும் எங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் ரயில் நிலையத்தில் ரிக் ஷாவை நிறுத்த ஆண்டுதோறும் பணம் கட்ட வேண்டும். எங்களது நிலையைப் பார்த்து இங்குள்ள பார்சல் கையாளுபவர்களே பணம் கட்டி விடுவார்கள். ஆட்டோக்கள் வந்ததும் பலர் ஆட்டோ ஓட்டவும், மார்க்கெட்டில் கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம். தாங்கள் ரிக் ஷாவில் செல்வதை மற்ற குழந்தைகள் கேலி செய்வதாகவும், எங்கள் வாகனங்கள் வேண்டாம் என்றும் பெற்றோரிடம் குழந்தைகள் கூறிய தால், யாரும் எங்களுக்கு சவாரி கொடுப்பதில்லை. எங்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது. இந்த பிழைப்பு எங்கள் தலை முறை யோடு முடிந்துவிடும். இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தனர்.

குறைந்த கட்டணம், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனம், சக மனிதனின் உழைப்பை நேரடியாக பார்த்து நெகிழும் மனிதம் என ரிக் ஷா வண்டிக்கென தனி அடையாளங்கள் உள்ளன. எனவே, குறைந்த தூரங்களுக்குச் செல்லும்போது இந்த ரிக் ஷாக்களை சவாரிக்காக பயன்படுத்துவோம். இதன்மூலம் ரிக் ஷாக்காரர்களின் வாழ்வாதா ரத்தை நாம் காப்பது மட்டுமல்ல, பரபரக்கும் இந்த அவரச காலத் திலும் ஒரு பாரம்பரியத்தை காத்து நின்ற பெருமை நம்மைச் சேரும்.

தமிழகத்தில் வருமான வரி சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு: ஹைதராபாத் சிறப்புக் குழு சென்னையில் ஆலோசனை

ராமமோகன ராவ் | கோப்பு படம்


ராமமோகன ராவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரம் | சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக்குழு

தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மேலும் 60 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல் கட்டமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 144 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் சோதனை நடந்தது.

ராமமோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.30 லட்சம் (புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட) ரொக்கம், அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பல கோடி பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்பட்டது.

சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள், உறவினர்கள், ராமமோகன ராவ், அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகளில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியிருப்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான மணல் வியாபாரிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் கோடிக்கணக் கான மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. எனவே, தமிழகத்தில் சோதனை மற்றும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 60 வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமை யிலான தனிப்படையினர் தமிழகத் தில் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக மேலும் பலரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் இருந்து 60 அதிகாரிகளை வரவழைத் துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவல கத்துக்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரி, அவரது அலுவல கத்தில் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட கம்ப்யூட்டர் டிஸ்க் ஆகிய வற்றில் பதிவாகி இருந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வியூகம் அமைத்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, நெஞ்சுவலி என்று கூறி போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை எந்த நேரத்திலும் கைது செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து மேலும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் வீடுகளில் அடுத்தடுத்து எந்த நேரமும் சோதனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு தமிழக போலீஸார் ஒத்துழைக்க மறுத்தால், துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே ராமமோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடந்த போதும் துணை ராணுவத்தினர் தான் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர்.

அதேபோல இனிவரும் காலங் களிலும் துணை ராணுவத்தினரின் துணையுடன் சோதனைகளை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள் ளதாகவும் இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்டதா கவும், 20 கம்பெனி துணை ராணுவத் தினர் தயார் நிலையில் உள்ளதா கவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி முடிவால் முக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, வருமான வரித் துறையினர் சோதனை குறித்து ஊர்ஜிதப்படுத்தப்படாத பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. ‘ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய சொத்து ஆவணங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். அவர், ரூ.1,700 கோடி மதிப்பில் துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார்’ என்றெல் லாம் பல தகவல்கள் வருகின்றன. இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள், சொத்து மதிப்பு குறித்த உண்மையான தகவல்களை வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமமோகன ராவுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி

சோதனையில் சிக்கிய பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர் அமலநாதன் ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதில், அமலநாதன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 55 கேள்விகளை கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில்களை பெற்றுள்ளனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ராமமோகன ராவும் அவரது மகனும் விசாரணைக்கு வருவார்கள் என எதிர்பார்த்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. மற்றொரு நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறோம் என வேறு நபர் மூலம் தகவல் அனுப்பியதாகவும், அதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகன் இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ராமமோகன ராவ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அவருக்கு ஓய்வு தேவை எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.






விவேக், தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ராமமோகன ராவுக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உளவுப் பிரிவு போலீஸார் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர். எந்த நிலையிலும் விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது என வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

களம் புதிது: அரசு அதிகாரத்தின் பெண் முகம்!

Return to frontpage

படம்: வி.கணேசன்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரின் பணிகள் என்ன?

ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் (சட்டமன்ற கட்சித் தலைவர்) முதல்வராக இருப்பார். அந்த மாநிலத்தை நிர்வாக ரீதியாக ஆள்பவர் தலைமைச் செயலாளர்தான். இவரது நேரடிக் கட்டுப்பாட்டில்தான் மாநிலக் காவல் துறை, ஒட்டுமொத்த அரசு நிர்வாகம், அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை போன்றவை இயங்கிவருகின்றன.

அரசின் கொள்கை முடிவுகளை நிர்வாக ரீதியாக நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதைத் தீர்மானிப்பது தலைமைச் செயலாளர்தான். மாநில சட்டப் பேரவையில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியப் பொறுப்பு தலைமைச் செயலாளருக்குத்தான் உண்டு. அரசுத் திட்டங்களை அந்தந்தத் துறைகளின் செயலாளர்கள் உரிய முறையில் நிறைவேற்று கிறார்களா, திட்டப் பலன்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அவ்வப்போது துறைச் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டம் நடத்தி தலைமைச் செயலாளர் உறுதி செய்வார்.

உள்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறன்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் தலைமைச் செயலாளருக்குத்தான் இருக்கிறது.

ஒரு திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக அம்சங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம், நடைமுறைப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் முதல்வருக்குத் தலைமைச் செயலாளர்தான் எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்தும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர்களால் பிரச்சினை ஏற்பட்டால் அது குறித்து முதல்வர் கவனத்துக்கு தலைமைச் செயலாளர்தான் கொண்டு செல்வார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தவறு செய்யும்போது முதல் கட்ட விசாரணை நடத்தப்படும். அதில் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமைச் செயலாளர்தான் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். அது தொடர்பான அறிக்கை அவருக்கே (தலைமைச் செயலாளர்) வரும். பின்னர் மாநில அரசை நிர்வாகம் செய்யும் தலைவர் என்ற முறையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.

பணியில் இருக்கும்போதே பட்ட ஆய்வு

கிரிஜா வைத்தியநாதன் 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அவர், 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பணியில் இருந்தபோதே 2011-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் நல்வாழ்வுப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.எச்டி பட்டம் பெற்றார். 2013-ம் ஆண்டு நில நிர்வாக ஆணையராகப் பணியாற்றினார். 2014-ம்

உள்ளே ரெய்டு... வெளியே பர்த்டே பார்ட்டி - இது ‘பத்ரிநாராயண்’ ஸ்பெஷல்!

vikatan.com

சினிமாவில்தான் வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடத்தும் போது, வில்லன்கள் 'இப்போ பார்க்கிறியா முதலமைச்சர்ட்ட பேசுறீயானு' டயலாக் விடுவார்கள். அல்லது அசால்ட்டாக மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறும். ரெய்டை பற்றி கொஞ்சம் கூட சினிமா வில்லன்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரிகளைக் கண்டு அஞ்சவும் மாட்டார்கள். சினிமாவில் வரும் காட்சிகள் போலே இப்போது நிஜயத்திலும் நடைபெற்றுள்ளது.

கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்ததைத் தொடர்ந்து சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கிடைத்த ஆவணங்கள் கொடுத்த தகவல்களின் அப்படையில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தின் அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ராமமோகன ராவ் வீட்டிலும் கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் இடையேயும் இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராமமோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் சம்பந்தி பத்ரிநாராயண் (வயது 55) ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார். சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். காலை 5.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் பத்ரிநாரயண் வீட்டுக்குள் புகுந்தனர். சிபிஐ அதிகாரிகள், வீட்டுக்குள் புகுந்ததும் பத்ரிநாராயண் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடந்தனர். ஆனாலும் ரெய்டுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர். அன்றைய தினம் பத்ரிநாராயணனின் 55-வது பிறந்த தினம் ஆகும். அவரது பிறந்த நாளை விமர்சையாக கெண்டாட குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். வீடும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பத்ரிநாராயண் வீட்டில் சுமார் 20 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில், 2 கிலோ தங்கம், ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 125 ஏக்கர் நிலம் வாங்கியதற்காக பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தாலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கைவிட பத்ரிநாராயணுக்கு மனம் வரவில்லை. சோதனை நடந்தால் என்ன? நாம் பிறந்த நாள் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து பிரமாண்ட கேக் கொண்டு வரப்பட்டது. உள்ளே அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் வைத்து பத்ரிநாராயண் தனது 55-வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அவரது உறவினர்கள் பத்ரிநாராயணுக்கு கேக் ஊட்டி விட்டனர். 'ஹேப்பி பர்த்டே' பாடினர் பத்ரிநாராயண் வீட்டில் ரெய்டு நடப்பது தெரியாமல் ஏராளமான தெலுங்குதேசக் கட்சியினர் , அவரது நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவிக்க வீட்டுக்கு வந்தனர். வீட்டில் ரெய்டு நடப்பதை கேள்விபட்டு பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

வீட்டில் ரெய்டு நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிறந்த நாள் கொண்டாடிய பத்ரிநாராயண் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பிறந்த நாள் கேக் கொடுத்தாரா... எனத் தெரியவில்லை. ஆனால், ரெய்டு முடிந்ததும் அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கும் அவர் முழுமையாக ஒத்துழைத்தாக சொல்லப்படுகிறது.

மிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா?

vikatan.com


‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்ற வரலாற்றுத் தகவலுடன் வந்தார் கழுகார்.

‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன?’’

‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா? அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித்து நொந்துபோன தேர்தல் ஆணையம் தஞ்சை, அரவக்குறிச்சித் தேர்தல்களையே ஒத்திவைத்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில், ஓட்டுக்குக் கொடுக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அவர்கள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அன்புநாதன் பங்களா, குடோன்களை வளைத்தனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கோடி கோடியாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரமையங்கள், தொழிலதிபர்கள் என்ற சிண்டிகேட் மாஃபியா பின்னணியில் இருப்பது புரிந்தது.’’



‘‘அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருந்த நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ், சைதை துரைசாமி போன்றவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்தது. அத்துடன் தமிழக அரசின் கஜானாவாக இருந்த, மேலும் பல தொழிலதிபர்களும் இருந்தனர். அதனால், ஒரு கட்டத்துக்குமேல் வருமானவரித் துறையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘அ.தி.மு.க-வுக்கு 50 எம்.பி.-க்கள் உள்ளனர். அவர்களைவைத்து மோடி அரசாங்கத்துக்கு அவ்வப்போது ‘தண்ணி காட்டி’க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. எப்படியாவது ஜெயலலிதாவுக்கு `செக்’ வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்த மத்திய அரசு, அவ்வப்போது சொத்துக் குவிப்பு வழக்கைவைத்து விளையாட்டுக் காட்டும். அவர்களுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த விவரங்கள் மேலும் ஒரு புதிய ரூட்டைப் போட்டுக் கொடுத்தது.’’

‘‘தோண்டத் தோண்ட பல மர்மங்கள் வரும்போல இருக்கிறதே.’’

‘‘மத்திய அரசு உடனடியாக, வருமானவரித் துறை நுண் உணர்வுப் பிரிவுக்குச் சிறப்பு அதிகாரிகளைப் போட்டு தனி டீம் உருவாக்கியது. அந்த டீம், கடந்த 6 மாதங்களாக தமிழகத்தை ரகசியமாக கண்காணித்தது. அவர்களின் கண்காணிப்பு தீவிரமடைந்தபோது அதில், சசிகலா, ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் வளையத்துக்குள் வந்தனர். ஆனால், அதற்குள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் மத்திய அரசு அடக்கி வாசித்தது.’’

‘‘ம்...’’

‘‘டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அதன்பிறகு, பி.ஜே.பி ஏதேதோ வழிகளில், அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. அதன் தற்போதைய கட்டம்தான் இப்போது நடக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளுக்கு பிள்ளையார்சுழி, சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில்தான் போடப்பட்டது. டிசம்பர் 11-ம் தேதி சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி, 105 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 70 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் தாள்கள். இதையடுத்து, சேகர் ரெட்டியை சிறப்பு டீம் ஒன்று கஸ்டடியில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தது.’’

‘‘சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் சொல்லிவிட்டாரா?’’



‘‘விசாரணை தொடங்கிய முதல்நாளே, சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். குறிப்பாக, தேர்தல் சமயத்தில், சசிகலாவிடம் எம்.எல்.ஏ.சீட்டு மற்றும் தேர்தல் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணம், அந்த சமயத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா பணப் பரிவர்த்தனைகள் செய்தது, ஓட்டுக்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆட்சியின்போது பொதுப்பணித் துறை கான்ட்ராக்டுகளை எடுக்க, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட பணம், துறைச் செயலாளர் என்ற முறையில் ராம மோகன ராவ் செய்த முறைகேடுகள், எந்தக் கான்ட்ராக்ட் எடுத்தாலும், அரசாங்க கமிஷன் 30 சதவிகிதம் என்று ஊழல் செய்தது என அனைத்தையும் ஒப்பித்துவிட்டார் சேகர் ரெட்டி. அதன்பிறகுதான், ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குள் புகுந்தது வருமானவரித் துறை. அரசியல் மேகங்கள் திசைமாறுவதைப் பொறுத்து அடுத்தடுத்த அதிரடிகள் இருக்கும்.’’

‘‘பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கும் இந்த ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’’

‘‘பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமரைச் சந்தித்தற்கும் இந்த ரெய்டுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. டெல்லி போன பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடியிடம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.’’

‘‘என்ன சொன்னாராம்?’’

“கதறிவிட்டாராம். ‘நீங்கள் ஒரு ரூட் போட்டு என்னை அதில் போகச் சொல்கிறீர்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. அங்குள்ள அதிகாரிகள் அனைவரும், மன்னார்குடி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். நான் மீட்டிங் போட்டால், ஒரு மணி நேரம் கழித்துத்தான் அதிகாரிகளே வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து என்னால் அரசியல் செய்யவோ, கட்சியைக் கொண்டுபோகவோ முடியாது’ என்று பிரதமர் மோடியிடம் புலம்பியதாகச் சொல்கின்றனர். புலம்பிவிட்டு வந்த மறுநாள், ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு.’’

‘‘பன்னீர்செல்வத்துடன் ராம மோகன ராவும் டெல்லி போயிருந்தாரே?’’

‘‘ராம மோகன ராவ் டெல்லி போய் இருந்தார். ஆனால், அவருக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னீர்செல்வம் மட்டும்தான் பிரதமரைப் பார்த்தார். டெல்லியில் முதல்வரை ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் சென்றவர் தம்பிதுரை. ஆனால், அவருக்கு பிரதமர் மீட்டிங்கில் அனுமதி இல்லை. தம்பிதுரையின் மூலமாக சசிக்கு எந்தத் தகவலும் போகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மறுப்பு. அப்போதே இந்த ரெய்டு விவகாரம் பன்னீர்செல்வத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனால்தான், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கோட்டைக்குள் வந்தபோதும், பன்னீர்செல்வம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அத்துடன், இப்போது நடந்த ரெய்டு என்பது பன்னீர்செல்வத்துக்கும் வைக்கப்பட்ட செக் தான்.’’

‘‘பன்னீர்செல்வத்துக்கும் ‘செக்’கா?’’



‘‘கைதாகி உள்ள சேகர் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட, சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். பொதுப்பணித் துறை பன்னீர்செல்வத்தின் கையில் இருந்ததுதான் காரணம். அவர் மூலம்தான் சேகர் ரெட்டி அத்தனை கான்ட்ராக்ட்களையும் எடுத்தார். அதனால், மத்திய அரசு சொல்கிறபடி நடந்துகொள்ளவில்லை என்றால், பன்னீருக்கும் சிக்கல்தான்.’’

‘‘இப்போது மோடி அரசு என்னதான் நினைக்கிறது?’’

‘‘சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியைவிட்டுவிட்டு போகச்சொல்கிறது. அதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்துச் சொல்கிறது. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுவிட்டார். அடுத்து ராம மோகன ராவும் கைது செய்யப்படலாம். இப்படியே பிடியை இறுக்கிக் கொண்டே போகும் மத்திய அரசு, அ.தி.மு.க மசியவில்லை எனில் அடுத்து சசிகலாவை குறிவைப்பார்கள் அதற்கான வேலைகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது அடுத்த டார்கெட் சசிகலாதான்!’’ என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

‘சாணி என்றவர் சரண்டர் ஆன கதை!

vikatan.com

இதே டிசம்பர் மாதத்தில்தான் ஒரு பிரளயம் அரங்கேறியது. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவையும் அவரது உறவுகளையும் கட்சியைவிட்டு கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அடுத்து சில நாட்களிலேயே கட்சியின் பொதுக்குழு கூடியது. சசிகலாவை விமர்சித்துப் பேசலாமா, கூடாதா? என்று குழப்பத்தில் இருந்தார்கள் நிர்வாகிகள். ‘அம்மாவின் முடிவில் மாற்றம் இருக்காது. இனி சசிகலா அவ்வளவுதான்’ என நினைத்து பொதுக்குழுவில் படபடப்போடு பேச ஆரம்பித்தார் அப்போது அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி. ஜெயலலிதா முன்பு அவர் பேசிய பேச்சு அப்போது சூட்டைக் கிளப்பியது. அப்படி என்ன பேசினார்?



“சாணத்தைப் பிடித்து அதைப் பிள்ளையாராக மாற்றுபவர் அம்மா. அதற்காகச் சாணம் தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டால் எப்படி? அது வெறும் சாணம்தான் என்று புரிய வைக்க, ஒரேயடியாக அதை அம்மா வழித்துப் போட்டுவிடுவார். அம்மா அருகில் இருப்பவர்கள், ‘நாங்களும் பிள்ளையார் பிடிக்கிறோம்’ என்று முயன்றால்... அதுவும் நடக்காது. அப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஒன்றுக்கும் பயன்படாத பொருளாகி விடுவார்கள்’’ என்று சசிகலாவை மறைமுகமாக விளாசித்தள்ளிவிட்டார் கே.பி.முனுசாமி. பிறகு மூன்றே மாதங்களில் சசிகலா மீண்டும் கார்டனுக்குள் வந்ததால் பதவியை இழந்தார் கே.பி.முனுசாமி.

அப்போது, கே.பி.முனுசாமி உள்ளாட்சித் துறை அமைச்சர், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் என ஜெயலலிதாவுக்கு அடுத்துள்ள தலைவர்களில் ஒருவராக ஜொலித்திருந்தார். ‘‘மன்னிப்பே கிடையாது’’ என பொதுக்குழுவில் சசிகலாவை மறைமுகமாக எச்சரித்த ஜெயலலிதா, மூன்றே மாதங்களில் சசிகலாவை மன்னித்து சேர்த்துக்கொண்டார். முனுசாமியோ ஆடிப்போய்விட்டார். அதற்குப் பிறகு என்ன நடந்தது?

முனுசாமியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “அன்று அம்மாவின் நிலைப்பாடு சசிகலாவுக்கு எதிராக இருந்ததால் அண்ணன் அப்படி பேசிவிட்டார். தலைமைக்கு விசுவாசமாக இருந்தது ஒரு தவறா? ஆனால், சசிகலா நேரம் பார்த்துப் பழிவாங்கிவிட்டார். அதற்கு அண்ணனால் வளர்த்துவிடப்பட்ட பழனியப்பனையே பயன்படுத்திக்கொண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததற்கு தர்மபுரியைச் சேர்ந்த பழனியப்பனின் அமைச்சர் பதவிதான் நியாயப்படி பறிபோயிருக்க வேண்டும். ஆனால், முனுசாமியை காலி செய்வதுதான் சசிகலாவின் கணக்கு. ‘அன்புமணி வன்னியர் என்பதால், அவருக்கு ஆதரவாக வன்னியரான கே.பி. முனுசாமி செயல்பட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை’னு ஜெயலலிதா காலில் விழுந்தார் பழனியப்பன். இதை கச்சிதமாக ரூட் போட்டுக்கொடுத்தது சசிகலா தரப்பு.



பழனியப்பனுக்கு பதவி முக்கியமாச்சே... பக்காவாக அதை செய்து முடித்தார். அதற்குமேல் சொல்ல வேண்டியதை அண்ணனை எதிர்க்கும் தம்பிதுரை மூலம் சசிகலா சொல்லவைத்தார். அவ்வளவுதான்... ஒரே நாளில் அடுத்தடுத்து அண்ணனிடம் இருந்த அத்தனை பதவிகளையும் பறித்துவிட்டார்கள். செல்வாக்காக வலம் வந்தவர் டம்மியாக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் மீது புகார்களை அடுக்கியபோது கடந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு அம்மா சீட் கொடுத்தார்கள். கிருஷ்ணகிரியில் வென்று கே.பி.முனுசாமி மீண்டும் பவருக்கு வந்துவிடுவார் என நினைத்த சசிகலாவும், தம்பித்துரையும் கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனக்ஹள்ளிக்கு அண்ணனை மாற்றினார்கள். அங்கும் வெற்றிபெற்றுவிடுவார் என்று ரிப்போர்ட் போனது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியை ஜெயிக்க வெச்சாருல்ல... இப்போ சட்டமன்றத் தேர்தல்ல அன்புமணியை எதிர்த்து பென்னாகரத்தில் நிற்கச் சொல்லுவோம்’ என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதன்படியே அண்ணனை பென்னாகரத்தில் நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்துவிட்டார்’’ என்றார்கள்.

அன்றைக்கு சாணமாக இருந்த சசிகலா இன்று சாமியாகிவிட்டார். ஆமாம், கே.பி.முனுசாமியும் இப்போது சசிகலாவிடம் சரண்டர் ஆகிவிட்டார். கே.பி.முனுசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்பதை அறிந்த சசிகலா, ‘இந்த சூழலில் இது நல்லதல்ல. கட்சியின் சீனியர்கள் யாரும் நமக்கு எதிராக பேசவிடக்கூடாது. அவரை வரச்சொல்லுங்கள்’ என்று கே.பி.முனுசாமிக்கு நெருக்கமான திவாகரன் மூலமாக தூது அனுப்பினார். உடனே கடந்த 20-ம் தேதி அவருக்கான அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டது. சசிகலாவைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘அன்றைக்கு அம்மா திடீர்னு என்னைப் பேசச் சொல்லுவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா. என்ன பேசுறதுனு தெரியாம அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்
கம்மா’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. உங்களுக்குத் தேவையானது உங்களைத் தேடிவரும் பழையபடி உற்சாகமாக கட்சிப்பணியைப் பாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினாராம்.பார்ப்போம்!

- எம்.புண்ணியமூர்த்தி

சவுகார்பேட்டையில் சிக்கிய பண சுரங்கம்... ஐ.டி.ரெய்டால் அலறும் காக்கிகள்!

vikatan.com

வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி சீரியல்படி ஆட்களை தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை போக ஆரம்பித்துவிட்டது. சென்னை தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தங்களுடைய கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப் படுத்தி வருகின்றனர். சென்னையில் புரசைவாக்கம், மண்ணடி, பாரிமுனை, சவுகார்பேட்டை போன்ற இடங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் பட்டியலில் இல்லாததால் அவைகள் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.

அளவுக்கு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள், கணக்கில் வராத பணம், நகைகள் என்று அடுத்தடுத்த ரெய்டுகளில் தாராளமாக சிக்குவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் முழு தெம்பில் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார்கள்.வருமான வரித்துறையினரின் ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம், அடுத்தடுத்த ஆட்களை அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், புதுக்கோட்டை எம்.ஆர். என்கிற ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வரையில் அந்த வாக்குமூலத்தின் நீளம் போய்க்கொண்டே இருக்கிறது.

சென்னை சவுகார்பேட்டை மீது கவனம் திரும்பவும், ரெட்டி அன்ட் கோ கொடுத்த வாக்குமூலம்தான் காரணம் என்கின்றனர். இதுவரையில் நடந்த ரெய்டுகளில் இதுவும் முக்கியமான ஒன்று. நான்கு நாட்கள் ஆனபின்னும், இன்னும் இங்கே ரெய்டு முழுமையாக முடிந்ததா, இல்லையா என்றே தெரியாத அளவுக்கு சவுகார்பேட்டை ரெய்டு போய்க் கொண்டே இருக்கிறது. சவுகார்பேட்டையில், பெருமாள் தெருவில் இருக்கிறது, தீபக் டிரேடர்ஸ். தங்கமுலாம் பூசும் கவரிங் நகைக்கடை மற்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடை. ஆனால், கடையின் உள்ளே சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கான கள்ளப் பணத்தை பதுக்கியிருக்கிறார் இதன் உரிமையாளர் தீபக். சென்னை வேப்பேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். 'தீபக் டிரேடர்ஸ்' என்ற ஒரு பெயர்ப் பலகை, வெளியில் சாதாரணமாகத் தொங்க, அங்கே நடப்பதோ மிரட்டலான பணப் பரிமாற்றங்கள் என்கிறார்கள்.

சேகர் ரெட்டியின் நூல் பிடித்த தொடர்புகளில் சவுகார் பேட்டை தீபக்கும் இருக்கவேதான், அதிகாரிகள் இங்கும் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.தீபக்கின் சுரங்கம் போன்ற பிரமாண்ட நிறுவனத்தில் நடந்த மூன்று மணி நேர சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. முதல் நாள் மீட்பு பணத்தின் மதிப்பு மட்டுமே 10 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். வேப்பேரியில் உள்ள தீபக்கின் வீட்டில் நடந்த சோதனையும் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. கணக்கில் வராத 6 கிலோ தங்கம், மற்றும் முக்கியமான சில ஆவணங்கள் அங்கேயும் சிக்கியுள்ளன. தீபக் வீடு மற்றும் கடையில் ரெய்டு போய்க் கொண்டிருந்த போதே வருமான வரித் துறையினரின் அடுத்த ரெய்டு 'இரானி' நகைக்கடையில் ஆரம்பித்தது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள 'இரானி' நகைக்கடை மற்றும் கடையின் உரிமையாளர் வீடுகளிலும் அடுத்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது, தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கொண்டுவரப் பட்டவையா? போன்ற விசாரணை நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருக்கிறது.ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட தரகர்கள், தீபக் வசிக்கும் குடியிருப்பில்தான் முன்னர் சிக்கினர் என்பதால் ரெய்டில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணை உத்தியையும், அடுத்தக்கட்ட ரெய்டு நடவடிக்கையையும் இதனால் முற்றிலும் மாற்றி உள்ளனர்.



சேகர் ரெட்டியை மடக்கி, அடுத்தடுத்த அரசியல் காய்களை வெட்டலாம் என்று சின்னதாக கோடாரி தூக்கியவர்களுக்கு, ஐ.பி.எல் சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய ஆட்களை நெருங்கிவிட்ட உணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனை பகுதிகளில், அடித்த ரெய்டில் ஐ.டி.அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. "என்.எஸ்.சி போஸ் சாலை (பாரிமுனை), சவுகார்பேட்டை, யானைக்கவுனி போன்ற இடங்களில் நகை வியாபாரிகளுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சில காக்கிகளின் தொடர்பை உறுதிப்படுத்தும் டைரி, ஐ.டி அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது.

வருமான வரித்துறையினரின் ரெய்டின் போது ராம மோகனராவிடமும் இதே போன்று ஒரு டைரி கிடைத்ததாக தகவல் உண்டு. ரெய்டின்போது, உள்ளூர் போலீசாரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரத்தையும் ரகசியக்குழுவினர் கண்காணிப்பதால் 'போன் போட்டு தகவல்' கொடுக்கும் கறுப்பாடுகள் கலங்கிப் போயுள்ளனர். காவல்துறையில் தனிப்படை (ஸ்பெஷல் டீம்) என்ற பெயரில் இயங்கும் சிலர் 'ஸ்பெஷலாக' அடிக்கடி நகைக் கடைகள், இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான ஆட்களிடம் ரெய்டு அடித்து, சொத்துகளை குவித்து வைத்துள்ளனர். சிலர் அவர்களின் தொழில் நுட்பங்களைக் கூட இருந்தே கற்று நகைக்கடை, கந்து வட்டி என்று பெரிதாக வளர்ந்து விட்டனர். 'எங்களுக்கு எதற்கு இனி கவர்ன்மென்ட் வேலை, இருக்கறதை வைத்து காப்பாற்றிக் கொண்டால் அது போதும்' என்ற குரலே அங்கு கேட்கிறது.



ஸ்பெஷல் டீம்களை இயக்கும் மேலதிகாரிகளின் சொத்துப் பட்டியல் அதை விட பல மடங்கு எகிறிப் போய் இருப்பது, வருமானவரி புலனாய்வுத்துறையின் சோதனை டீமையே, சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது."இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட பர்சன்டேஜைக் கொடுத்து விட்டுத்தான் தொழில் செய்தோம், அதே போல் நீங்களும் வாங்கிக் கொண்டு எங்களை வாழவிடுங்கள்" என்று ரெய்டின்போது விபரம் புரியாமல் சில வியாபாரிகள் கதறியுள்ளனர். கூடவே, காக்கிகளுக்கு வருடம் தவறாமல் கலெக்‌ஷன் கொடுத்த ஆதாரங்களையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பக்குவமாகப் பேசி ' ஸ்பெஷல் போலீஸ் டீம்' குறித்த விபரங்களை ஐ.டி. அதிகாரிகள் வாங்கிக் கொண்டுள்ளனர். ஐ.டி.அதிகாரிகளின் பிடியில் 'ஸ்பெஷல் ரெய்டு காக்கிகள்' சிக்கிக் கொண்டாலும் வியப்பில்லை.

Saturday, December 24, 2016

எம் ஜி ஆர்

கல்கியின் நாவலும் கலைந்துபோன எம்.ஜி.ஆரின் கனவும்...! எம்.ஜி.ஆர் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு


நினைத்ததை முடித்தவன் நான்... நான்... நான்... என திரைப்படம் ஒன்றில் பெருமிதத்தோடும் கர்வத்தோடும் பாடி ஆடியிருப்பார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு முன்னும் பின்னும் திரையுலகில் வெற்றிக்கோட்டை தொட்டவர்கள் உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு உச்சத்தை தொட்டவர்கள் அரிதினும் அரிது. அந்த அரிதானவர்களிலும் எம்.ஜி.ஆர் தனித்து நிற்பவர். காரணம் இயக்கம், ஒளிப்பதிவு, ஸ்டண்ட், நடனம், எடிட்டிங், என திரையுலகின் அத்தனை துறைகளும் அவருக்கு இருந்த ஞானம். அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னனும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் அந்த திறமைக்கு கட்டியம் கூறுபவை. இன்றைக்கும் அவை எம்.ஜி.ஆரின் மாஸ்டர் பீஸ் எனலாம். குறிப்பாக நாடோடி மன்னன் திரைப்படம் அவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க படம். இந்த படத்திற்காக அதுவரை தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் அவர் அடகுவைக்கவேண்டியதானது. இந்த இரு படங்களின் தயாரிப்பை விட அவற்றை வெளியிடுவதில் அவர் சந்தித்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; ஒரு நாவலுக்குரிய பகீர் திருப்பங்கள் கொண்டவை. நாடோடி மன்னன் இறுதிகட்டப்படப்பிடிப்பின்போது ஒருசமயம்,“படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி" என்று நெருங்கிய நண்பர்களிடம் சோகம் இழையோடச் சொல்லியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக என்று சொல்லமுடியாது; உழைப்பின் பலனாக, நாடோடி மன்னன் அமோக வெற்றிபெற்றது. அடுத்த 20 வருடங்களுக்கு அவரை திரையுலகின் மன்னனாக்கியது. ராஜாராணி படங்கள் என்றால் எம்.ஜி.ஆரைவிட்டால் அதில் சோபிக்க வேறு ஆள் கிடையாது என அடித்துச்சொல்லும் அளவு அந்த வேடங்களில் அசத்திய எம்.ஜி.ஆரை நாடோடி மன்னன் வெற்றி புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதற்குப்பின் அப்படி ஒரு வெற்றியை அவரது வாழ்வில் பார்த்திருக்கமுடியாது. மொத்த தமிழகமும் கொண்டாடியது அந்த படத்தை. நாடோடி மன்னன் தந்த வெற்றி அவருக்கு தொடர்ந்து இம்மாதிரி படங்களை தரவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. அப்படி அவரது ஆசையில் உதித்த எண்ணம்தான் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவேண்டும் என்பது.

கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான 'பொன்னியி்ன் செல்வன்' வாசகர்களிடையெ பெற்றிருந்த வரவேற்பு எம்ஜி.ஆரை பெரிதும் ஈர்த்தது. கல்கியின் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளும் நிரம்பி காணப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் 50களில் புராண இதிகாச கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்று கருதப்பட்ட எம்.ஜி. ஆருக்கு பெரும் ஆசையை மனதில் வித்திட்டதில் ஆச்சரியமில்லை. இதற்கென கல்கியின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. நாடோடி மன்னன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சில மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி. ஆர். தனது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பொன்னியின் செல்வன் வெளிவரும் என செல்லும் இடங்களில் எல்லாம் பெருமிதமாக சொன்னார். பொன்னியின் செல்வன் படமானால் அது தனக்கு நாடோடி மன்னனுக்கு ஈடான நிரந்தர புகழை ஈட்டித்தரும் என்பதில் ஐயமின்றி இருந்த எம்.ஜி. ஆர், 'நாடோடி மன்னன்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று தான் பொறுப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1959 டிசம்பர் மாத இதழில் ) இதுபற்றிய தகவலை வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்தது. சிறுசிறு கதாபாத்திரத்திற்கும் கூட தேர்ந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார். வழக்கமான தனது படங்களில் பயன்படுத்துபவர்களை தவிர்த்து புதிய கலைஞர்களை இதில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டார். 'பொன்னியின் செல்வன்' கதையில் இருவேடங்களில் எம்.ஜி.ஆரே ஏற்று நடிக்க முடிவெடுத்தார். நாவலின் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமது குடும்பநண்பரும் பழம்பெரும் இயக்குனருமான கே. சுப்ரமணியம் அவர்களின் மகள் பத்மா சுப்ரமணியத்தை. நடனக்கலைஞரான அவர் நடித்தால் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக பேசப்படும் என்பது எம். ஜி. ஆரின் எண்ணம். பகீரத முயற்சியில் இதற்கான அனுமதியை அவரது தந்தையிடம் இருந்து பெற்ற எம்.ஜி. ஆரால் அவரது மகளிடம் திட்டம் பலிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எம். ஜி. ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேசமயம் நாடோடிமன்னன் வெற்றியினால் தொடர்ந்து படங்களில் புக் ஆகி இடைவிடாமல் நடித்துக்கொண்டிருந்ததால் எம்.ஜி.ஆரின் கவனமும் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. என்றாலும் தனது மனதில் கதாபாத்திரங்ளையும் காட்சியமைப்புகளையும் செதுக்கியவாறு இருந்தார். மற்ற படங்களின் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பொன்னியின் செல்வனுக்கும் லோகேஷன்களை பார்த்து குறித்துக்கொண்டார். இருப்பினும் அது காகித வடிவிலேயே இருந்தது. '1964 ல் ஆகஸ்ட் 2ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் “படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்!” எனகூறியிருந்தார். அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தயாரிப்புக்கு குறிப்பிட்ட சில வருடங்களாவது தேவைப்படும் என்ற நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துவந்த எம்.ஜி.ஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை.
பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.எம். ஜி. ஆரைப்பற்றி அவ்வப்போது நிலவி வந்த சில தகவல்களும் இந்த படத்தினை தள்ளிப்போட்டது என்பார்கள்.

பொதுவாக எம்.ஜி. ஆர் வெளிப்படங்களிலேயே தான் திருப்தியடைந்த பின்னரே அது வெளியாக அனுமதிப்பார். அப்படிப்பட்டவர் தன் சொந்தப்படத்தினை அதுவும் அவரது கனவுப்படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்வாரோ என்று பிரபல நடிகர்களிடம் ஒரு பேச்சு எழுந்ததாக சொல்வார்கள். பணம் கணிசமாக கிடைக்கும் என்றாலும் ஒரு திரைப்படத்திற்காக நீண்ட நாட்களை செலவிட அவர்கள் தயாரில்லை. முக்கிய கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்த பத்மா சுப்ரமணியம்தான் நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த எம். ஜி. ஆர் 70 களில் பத்மா இருந்த ஒரு மேடையில் “பத்மா சம்மதித்து நடித்து கொடுத்தால் ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவேன்” என்றும் கூறிப்பார்த்தார். ஆனாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த பத்மா சுப்ரமணியம் அதற்கு மசியவில்லை. இப்படி பல காரணங்களால் எம். ஜி. ஆர் பொன்னியின் செல்வனை கைவிட வேண்யடிதானதாக திரையுலகில் சொல்வர். ஆனாலும் எம்.ஜி. ஆரின் மனதில் இருந்து பொன்னியின் செல்வனை விலக்க முடியவில்லை. தான் பொது இடங்களில் தான் சந்திக்கும் திறமையான கலைஞர்களிடம்“ என் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கறியா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார். நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் (1978ம் ஆண்டு) பேசிய எம்.ஜி.ஆர். 'பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்’ என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்.ஜி.ஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை! முதல்வரான பின்னும் பொன்னியின் செல்வனை அவர் மனதில் இருந்து கழற்றிஎறிந்திட முடியவில்லை.

அரசியலில் பரபரப்பாகி முதல்வரானபின்னரும் அவ்வப்போது தனக்கு நெருங்கிய ஒரு பத்திரிக்கையாளரிடம் இது குறித்த ஆதங்கத்தை எம்.ஜி. ஆர் வெளிப்படுத்தியிருக்கிறார். 80 களில் கமல்ஹாசனை வைத்து துவங்கும் திட்டமும் அவர் மனதில் இருந்தது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக காலம் அவருக்கு அந்த கனவை நனவாக்கும் வாய்ப்பை இறுதிவரை வழங்கவில்லை. இதனிடையே குறிப்பிட்ட வருடங்களில் பொன்னியின் செல்வன் மீதான எம்.ஜி. ஆருக்கான உரிமை சட்டப்படி கைவிட்டுப்போன நிலையில் கமலஹாசனும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதுவும் ஈடேறவி்ல்லை.

இப்படி அரசியலிலிலும் திரையுலகிலும் தான் நினைத்ததை முடிப்பதில் வல்லவரான எம்.ஜி.ஆருக்கு“பொன்னியின் செல்வன்” நாவல் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக நிலைத்து நின்றுவிட்டது.

ராம மோகன் ராவ் ‛அட்மிட்'

சென்னை: வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளான, ராம மோகன் ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கருதி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஐ.சி.யூ.,வில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக தலைமை செயலாளராக இருந்தவர் ராம மோகன் ராவ். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் குழு உறுப்பினருமான சேகர் ரெட்டி வீடு மற்றும்அலுவலகங்களில், 130 கோடி ரூபாய் ரொக்கம், 171 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து , டிச.,21 ல் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது மகன் விவேக் வீடு, அலுவலகங்கள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட, 12 இடங்களில், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை சம்மன் :

இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை உருவாக்கியது. தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன் ராவ் நீக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் அவருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் அனுப்பியதாக, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு ராம மோகன் ராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கருதி, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ராமமோகன ராவ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஒரு வதந்தி உலாவி வருகிறது.

11,124 கி.மீ. புல்லட்டில் பயணித்தால் என்ன நடக்கும்? #RoadTrip


"இமாச்சலப் பிரதேசத்தில் உதய்பூர் என்ற ஒரு சின்ன டவுன். இரவு பதினோரு மணியளவில்... நல்ல குளிர். பெளர்ணமி. தனியாக என் தண்டர்பேர்ட் 500-ல் போய்க் கொண்டிருந்தேன். புல்லட் பீட் பின்னணியில் ஒரு கிடார் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப் பார்த்தேன். ரோட்டின் ஓர் ஓரத்தில் ஒரு பையன் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம் போனேன். அவனிடமிருந்து கிடார் வாங்கி எனக்குத் தெரிந்த சில பாடல்களை பாடி, வாசித்தேன். அதன் பின், அவன்... அவனுடைய விரல்கள் கிடாரில் பெரிய மேஜிக் செய்தன. அந்த இரவை அங்கேயே அப்படியே பாட்டு பாடி கழித்தோம். என் பெயர் அவனுக்குத் தெரியாது, அவன் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், இருவருக்குமே அது ஒரு அற்புதமான இரவு...இது தான் பயணத்தின் அழகு " என்று தன் பயணக் கதையை கிக் ஸ்டார்ட் செய்கிறார், கோவையைச் சேர்ந்த சாய்க் குமார்.

இவர் சமீபத்தில் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி டூ வட உச்சி ஜம்மு காஷ்மீர் வரை தனியாக ஒரு பைக் பயணம் போய்வந்திருக்கிறார். மொத்தம் 77 நாட்கள்... 11, 124 கிமீட்டர்கள் என அவர் கடந்து வந்த கதையை புல்லட் வேகத்திலேயே சொல்லத் தொடங்குகிறார்...

எதற்காக இந்தப் பயணம் ?

" பயணம் தொடங்கும் பலரும் சொல்லும் அதே காரணம் தான் என்னுடைய தொடக்கமும். வேலை... ஒரே மாதிரியான வாழ்க்கை முறை... அதை உடைக்க வேண்டும் என்ற ஆர்வம், பயணம் மீதான ஆசை. ஆனால், இதற்கு மேல் ஒரு பயணியாக எனக்கு ஒரு முக்கிய குறிக்கோள் இருந்தது. அது என்னை நான் புரிந்து கொள்வது... அதற்கேற்றார் போல இந்த பயணம் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது".

தனியாக பயணம் செய்தது எப்படி இருந்தது?

"நான் அடிப்படையிலேயே கொஞ்சம் ரிசர்வ்டான ஆள் தான். எனக்குத் தனியாக இருப்பது பிடிக்கும். அதனால், தனியாக பயணித்தது பெரிய கஷ்டமாக இல்லை. மேலும், தனியாக பயணித்தாலும் இதில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். குஜராத்தின் ரேன் ஆஃப் கட்ச் பகுதியில் இருந்த ஒரு ராணுவ வீரர்... பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் ரொம்ப தனிமையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தவர், தொடர்ந்து 4 மணி நேரம் விடாமல் பேசினார், அதே போல், டில்லியில் ஒரு கஷ்மீர் நண்பன் கிடைத்தான்... கஷ்மீரியாக அவன் படும் வேதனைகள், அவன் வாழ்வின் பிரச்சினைகள்... அதே போன்று சில இஸ்ரேலிய ஊர்சுற்றிகளோடு ஒரு வாரம் பயணம் செய்தேன். பயணத்தை தனியாக தொடங்கினாலும், பயணம் தனிமையானதாக இல்லை. பயணத்தில் பார்க்கும் இடங்கள் அழகு என்றால், பழகும் மனிதர்கள் பேரழகு..."

உங்கள் பயண நண்பன் தண்டர்பேர்ட் 500 குறித்து சொல்லுங்களேன் ?

"பொதுவாகவே இந்தியாவில் தொலை தூரப் பயணங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுவது புல்லட்கள் தான். அதன் அடிப்படையிலேயே தண்டர்பேர்ட் 500யைதேர்ந்தெடுத்தேன். ஆனால், பலரும் அதற்கான சர்வீஸில் பிரச்சினைகள் இருப்பதாக சொன்னார்கள். அதற்கேற்ற மாதிரியே வண்டி எடுத்ததில் இருந்தே பல பிரிச்சினைகள் இருந்தன. வண்டியில் இருந்த பிரச்சினைகளைவிடவும், சர்வீஸ் ஆட்களோடு போராடுவதே பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால், எல்லாம் முடிந்து பயணம் தொடங்கிய பிறகு, வண்டியில் பெரிய தொந்தரவுகள் இல்லை. மைலேஜும் 28யில் இருந்து 30 வரை கிடைத்தது."



பயணத்தின் போது ஏதேனும் விபத்துகள்?

"குஜராத்தின் புஜ் பகுதியில் வண்டியை நிறுத்தி வைத்திருந்த போது, ஒரு பையன் ரிக்‌ஷாவில் வந்து மோதிவிட்டான். அதில் சைலன்சர், ஹேண்டில் பார், க்ராஷ் பார் என அனைத்தும் வளைந்துவிட்டன. பின்னர், அதையெல்லாம் சீர் செய்தேன். ரொடாங் பாஸ் ரோடு வழியாக லேவிற்கு சென்று கொண்டிருக்கும் போது, உள்ளூரைச் சேர்ந்த ரெண்டு பேர் எனக்கு முன்னாடி போய்க் கொண்டிருந்தார்கள். சரியாக பிரேக் பிடிக்காமல், ஸ்லிப்பாகி என் கண் முன்னாடியே பல நூறு அடி பள்ளத்தில் விழுந்து இறந்தார்கள். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது."

பயணத்தின் ஏதாவது ஒரு சமயத்தில் " ஏண்டா... பயணம் கிளம்பினோம்..." என்று வருந்தியது உண்டா?

"நிச்சயமாக இல்லை. நான் ஆபிஸில் ஏசி ரூமில் உட்கார்ந்து பயணம் குறித்து யோசித்ததைவிட, நிஜப் பயணம் கடுமையாக இருந்தது உண்மை தான். ஆனால், அதற்காக நான் எந்த தருணத்திலும் வருத்தப்படவில்லை."

உங்களின் பயண வழி என்னவாக இருந்தது?

"கோவையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக மும்பை சென்றடைந்தேன். அங்கிருந்து குஜராத், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர்... பின்பு, திரும்பும்போது டெல்லி, ஹைதரபாத், பெங்களூரு, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சூர் கடைசியாக, ஆரம்பித்த கோவையில் வந்து முடித்தேன்."

பயணத்தில் சவாலாக இருந்த பகுதிகள் என்ன?

"உறுதியாக லே டூ மணாலி தான். கடுமையான பாதை. குளிர். ஆங்காங்கே நிலச் சரிவு. கொஞ்சம் ஸ்லிப்பானாலும் கூட, மரணம் நிச்சயம். அதில் ஓட்டியது பெரிய சவால். அதுமட்டுமில்லாம, கிட்டத்தட்ட 18 ஆயிரம் அடி உயரம்... ஆக்சிஜன் அளவு மிக குறைவு. ஒரு கட்டத்தில் ஆல்டிட்யூட் மெடிக்கல் சிக்னஸ் ( ALTITUDE MEDICAL SICKNESS ) வந்துவிட்டது. மயக்க நிலையிலேயே கிடந்தேன். அங்கு நான் தங்கியிருந்த கூடாரத்தின் ஓனர்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். என்னோடு பயணித்த சக பயணிகளும், எனக்காக அவங்களோட பயண திட்டத்துல மாற்றம் செய்துட்டு எனக்கு உடல் தேறும் வரை என்னோடு இருந்தாங்க. அந்த நாட்களையும், அந்த மனிதர்களையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்."



மொத்த பயணத்துக்கான செலவு எவ்வளவு?

"பயணத்தோட மொத்த செலவு 1.3 லட்சம். இதில் பெரும்பாலான பணம் பெட்ரோலுக்குத் தான் செலவானது. வண்டியோட டேங்க் கெபாசிட்டி 20 லிட்டர். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் டேங்கை நிரப்பினேன். தோராயமாக ஒரு நாளைக்கு 300 கிமீட்டர் பயணித்தேன். "

பயணத்திற்குப் பின் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்?

"மனிதர்களை பொதுவாக அவர்களின் உடைகள், நடவடிக்கைகள் வைத்து ஜட்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்தியுள்ளேன். இவர் நம்மை ஏமாற்றிவிடுவாரோ என்ற பயத்திலேயே பிறரிடம் பழகும் எண்ணம் மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்தப் பயணத்தில் நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் அவ்வளவு அழகானவர்கள். எல்லாவற்றிருக்கும் மேலாக, என்னுடைய தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கிறது."

இப்படி ஒரு பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் போவது சாத்தியமா?

"கஷ்டம் தான் . ஆனால், வேறு வழியில்லை. வாழ்க்கைக்குப் பணம் அவசியமாகிறதே... இந்த பயணங்களின் நினைவுகளோடு, அடுத்த பயணத்திற்குத் தயாராக பணம் சேர்க்க தொடங்கியுள்ளேன். வேலை போரடிக்கிறது... வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்ற காரணங்களைக் காட்டி பயணம் கிளம்புபவர்களுக்கு ஒரேயொரு விஷயம்... பயணம் ஒரு " எஸ்கேபிசம்" கிடையாது. இதிலிருந்த தப்ப, பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. பயணம் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு கடினமானதும் கூட..." என்று சொல்லி முடிக்கிறார் சாய்க் குமார். அவர் இருக்கும் திசையில் தலைசாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த நீல நிற தண்டர் பேர்ட்...

- இரா. கலைச் செல்வன்.
Posted Date : 15:04 (23/12/2016)
Last updated : 15:05 (23/12/2016)


அரிதினும் அரிதான அரசியல் தலைவர்... கக்கன் நினைவு தின பகிர்வு !





1980-ம் ஆண்டு. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த கால கட்டம் அது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை முத்துவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது காளிமுத்து சொன்ன தகவலால் பதறி போனார் எம்.ஜி.ஆர். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சாதாரண வார்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை கண்ட உடன் கலங்கினார். உடனடியாக அவரை சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார். அப்போது சிகிச்சை பெற்று வந்தவர் எம்.ஜி.ஆரிடம் வேண்டாம் என்றார். 'எல்லோருக்குமான சிகிச்சை பிரிவே எனக்கு போதும். நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி' என்றார் அவர்.

எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, "இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்" என உத்தரவிட்டுச் சென்றார். எம்.ஜி.ஆரை கலங்க வைத்த... 'இவரில்லாவிட்டால் நாம் இல்லை' என பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நபர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவரான கக்கன். சென்னை சென்ற உடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு கக்கனுக்கு ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார்.

ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23-ம் நாள் இறந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உயிரே போகும் சூழலிலும் எளிமையாய் வாழ்ந்தவர் கக்கன். அவரது உடலை காமராசர் நினைவிடம் அருகே புதைக்கவேண்டும் என்பது அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் விருப்பமாக இருந்தது. அதை அரசின் காதுகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கடைசி வரை அந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவன் 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார். எளிமைக்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன் நினைவு தினம் இன்று.



பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எளிய வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்று வாழ்ந்து காட்டி தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிலைத்துவிட்ட கக்கன் பிறந்த ஊர் மேலூரிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் வழியிலுள்ள தும்பைப்பட்டி. சமகால அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை பார்த்துப்பழகிப்போன நமக்கு கக்கன் போன்ற தலைவர்களின் வரலாறு கண்ணீர் சிந்த வைக்கிறது.

காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் இவரைப்போன்று இருந்தார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், முதல்வராக இருந்த காமராஜரும், அமைச்சர் கக்கனும் சாகும் வரையில் எளிமையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தார்கள் என்று அடித்து சொல்லலாம். இவர்களின் அரசியல் எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள்.

மேலூர்காரரான கக்கனுக்கு சென்னை திருவற்றியூர் தாங்கலில் மன்றம் வைத்து இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்களென்றால் அவருக்கு புகழ் எதனால் வந்தது என்பதை அறிய முடியும். இன்று மதுரை மாவட்டத்தில் நிலைத்து நிற்கும் பல நல்ல திட்டங்கள், பாசனக்கால்வாய்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமணைகள் என வருவதற்கு கக்கன் தான் காரணம். இருந்தாலும் அவர் விரும்பிய சாதீய சமநிலை மட்டும் மதுரை மாவட்டத்தில் இன்னும் வரவில்லை என்பதும் உண்மை.

இப்பவே அப்படியென்றால் அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இங்கு எவ்வளவு கீழ் நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்கவே வேதனையாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவுடன், எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அப்போது அவர் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, காமராஜர் வழியில் செல்ல முடிவு செய்தார் கக்கன். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை ஒன்றை மட்டும் எதிர்பார்த்து மற்றவர்கள் போராடியதற்கும் கக்கனின் போராட்டத்திற்கும் வேறுபாடு உண்டு. தான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் இணைந்து போராட வேண்டிய நிலையில் இருந்தார்.



தீண்டாமை கொடுமையை களைவதற்குமுன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அவசியம் என்பதில் குறியாக இருந்தார். அதனால்தான் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அரிஜன சேவா சங்கத்தில் ஒரு வாலண்டியராக இணைந்து மேலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்ட அரிஜனப்பள்ளியின் விடுதி பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.

பகலில் விடுதலைபோராட்டம். இரவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விப்பணி. தும்பைபட்டியில் அமைந்திருந்த ஊருணியில் ஒடுக்கப்பட்ட மக்களை தவிர மற்ற சாதியினர் அனைவரும் நீரெடுக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களோ ஊருக்கு வெளியிலிருந்த குளத்தை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அசுத்தமான குளத்துக்கு ஊர்க்காரர்கள் வைத்த பெயர் பீக்குளம்.

மேலூர் தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கனுக்கு இந்த கொடுமையை பார்த்து மனம் சகிக்கவில்லை. அதற்காக உடனே களத்தில் இறங்கி போராடவும் அவர் நினைக்கவில்லை. இந்த கொடுமையை தன்னோடு கட்சிப் பணியாற்றும் மற்ற காங்கிரஸ் காரர்களிடம் சொல்லியும் பலனில்லை. காரணம் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சாதிக்கட்டமைப்பையும், தீண்டாமயையும் ஆதரிப்பவர்களே அதிகம் அங்கம் வகித்தனர்.

கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர் பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். பொங்கி எழுந்த ஆதிக்க சாதி கூட்டம், இந்த இரண்டு பேரையும் தாக்க முற்பட்டனர். வாக்கு வாதத்துக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், குளத்தின் இன்னொரு கரையை பயன்படுத்திக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.



இது ஒரு அரைகுறை தீர்வென்றாலும் அந்த காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய சாதனைதான். காமாரஜருக்கு அடுத்து கக்கனுக்கு மிகவும் பிடித்தவர் யாரென்றால் அமைதி வழியில் போராடும் குணத்தை உருவாக்கிய வைத்தியநாதய்யர். அரிஜன மக்களின் முன்னேற்றத்தில் எந்தவொரு பாசாங்குமில்லாமல் உழைத்தவர் வைத்தியநாதய்யர்.

இதற்காக அவர் இழந்தது ஏராளம். மீனாட்சியம்மன் கோயில் ஆலய நுழைவுப்போராட்டத்தை கக்கனோடு சேர்ந்துதான நடத்தினார். அதற்கு பின்பும் கக்கனுக்கு பல வகையிலும் உதவியாக இருந்தார். அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது 1955 ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன்.

இறுதிச்சடங்கு செய்யும் நேரத்தில் வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோ, நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். சிலர் கோவித்துக்கொண்டு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் கிளம்பி சென்றார்கள்.

காங்கிரசை கடுமையாக எதிர்த்தாலும் அரியலூர், மேலூர் சட்டமன்றத்தொகுதியில் கக்கன் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை திமுக. கக்கன் மீது தனி மரியாதை வைத்திருந்தது. 1967ல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்ட நிலையில்தான் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். காங்கிரசின் படுதோல்விக்கு பிறகு மிகவும் கஷ்டமான நிலைக்கு கக்கன் குடும்பம் சென்றுவிட்டது. நிறைய கடன் வேறு. அதை தெரிந்துகொண்ட பழ.நெடுமாறன் மதுரையில் கக்கனுக்கு மணிவிழா எடுத்து நிதி வசூல் செய்து 21 ஆயிரம் வழங்கினார். அதை வங்கியில் டெபாசிட் செய்ய மறுத்த கக்கன், நாவினிபட்டி பண்ணையார் போன்றவர்கள் தேர்தல் செலவுக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை கடனாக எழுதி வைத்திருந்தார். நெடுமாறன் வழங்கிய நிதியின் மூலம் இக்கடன்களை அவர்கள் கேட்காமலே அடைத்தார்.



அப்போது மதுரை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் பின்னாளில் புதுவை பலகலைகழக வேந்தராக பதவி வகித்த வேங்கடசுப்ரமணியன். இவரிடம் மதுரை மாவட்ட தலித் மக்களின் நிலையை எடுத்து சொல்லி விடுதிகளுடன் கூடிய பள்ளிகளை அதிகம் திறக்க வைத்தார். அதில் பிற்பட்ட சாதி மாணவர்களுக்கும் அதிக விடுதிகள் கட்ட ஏற்பாடு செய்தார். ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டது.

காவல்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். லஞ்ச ஒழிப்பு துறையை உருவாக்கியதும் இவர்தான். சாதி கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ள பிரச்னைகளை கண்டறிய தனி பிரிவை காவல்துறையில் ஏற்படுத்தினார். என்னதான் காவல்துறையை அவர் கண்ட்ரோலில் வைத்திருந்தாலும், கலவரங்களில் உயர்சாதி வெறியோடு செயல்படும் காவலர்களை, அதிகாரிகளை தடுக்கவோ தண்டிக்கவோ அவரால் முடியவில்லை. வெளியே சொல்ல முடியாத இந்த வேதனை அவரிடம் இருந்துள்ளது.

கக்கனிடம் நீண்டகாலம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கே.ஆர். நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லும்போது, "விடுதலை வேள்வியில் சவுக்கடிகளின் தழும்புகளைப் பரிசாகப்பெற்றவர். சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளானவர். அரசியல் உலகில் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரர். இன்றைக்கு அவரை யார் நினைக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்கிற வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை கக்கன்ஜியைவிட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. இனியும் பிறக்கப்போவதும் இல்லை. இது சத்தியம்.." என்றிருந்தார்....அது உண்மையிலும் உண்மைதான்.

மூத்தவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி கட்சிப்பணிகளை செய்ய வேண்டுமென்று அறிவித்து அதற்கு தானே முன்னுதராணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகிய காமராஜர், அடுத்த முதல்வராக கக்கனை முன்மொழிய நினைத்தார். இதை தெரிந்துகொண்ட கக்கனோ, தன்னைவிட சீனியரான பக்தவச்சலத்தை முன்மொழிந்தார். காமராஜரின் ஆசை நிறைவேறாமல் போனது.

கக்கன்ஜியின் அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை பற்றி நிறைய சம்பவங்களை கூறலாம். அது ஓரளவு நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஊழலிலும் குற்றங்களிலும் புழுத்துப்போன சமகால அரசியலை அவதானித்துவரும் இன்றைய செல்பி தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும் இவைகளை நினைவு படுத்த வேண்டியது அவசியம்.....

வேளாண்மைத் துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது அவரை மலேஷிய நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் சந்திக்க வந்திருந்தார். அவர் கக்கனுக்கு ஒரு பேனா பரிசளித்தார். கக்கன் அந்த பேனாவை ஆச்சரியமாக பார்த்தார். அதற்கு மலேஷிய அமைச்சர், இது தங்கப்பேனா என்றார். அப்படியானால் இதை வைத்துக்கொள்ளும் தகுதி எனக்கில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.. என்றார் கக்கன்.

மலேஷிய அமைச்சரோ இது நட்பிற்கான அடையாளம். எனது பரிசு என்றார். உடனே கக்கன், தன் உதவியாளரை அழைத்து, பதிவு புத்தகத்தில் இந்த பேனா வந்தது குறித்து பதிவு செய்து எடுத்து வாருங்கள் என்றார். மலேஷிய அமைச்சர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை பதிவு செய்யாமல் வாங்கிக்கொள்ள கக்கன் உடன்படவில்லை. கடுப்பான மலேஷிய அமைச்சர் அந்த பேனாவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கக்கனின் தம்பி விஸ்வநாதன், சிறந்த ஓட்டப்பந்தய வீரர். இவருக்கு போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. இந்த விஷயத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கனிடம் விஸ்வநாதன் சொல்ல, வேண்டாம், நீ போலீஸ் வேலையில் சேரக்கூடாது. அந்த துறை என் பொறுப்பில் உள்ளது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அனுமதிக்கவில்லை.
உடனே அப்போது ஐ.ஜியாக இருந்த அருளைக் கூப்பிட்டு, விஸ்வநாதனின் விரல்கள் சரியாக செயல்படாது. துப்பாக்கியை கையாளுவதெல்லாம் சிரமம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் முழுத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அவருக்கு வழங்க இருந்த பணி ஆணையையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

ஆனால் உண்மை என்னவென்றால், விஸ்வநாதன் இளவயதில் விளையாடும்போது தவறிவிழுந்ததால் அவரது வலது முழங்கையின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் சுண்டு விரலும் மோதிர விரலும் சற்று வளைந்திருந்தது இதை விஸ்வநாதன் அருளிடம் தெரிவிக்க.. இதற்காகவா அமைச்சர் அப்படி கூறினார், என போலிஸ் அதிகாரி அருள் ரொம்பவும் கவலைப்பட்டுள்ளார்.

இப்படி தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏகப்பட்ட சம்பவங்களை நாம் கற்றுக்கொள்ள பாடமாக வைத்துவிட்டு சென்றுள்ள கக்கனை இன்று மட்டுமல்ல எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் கக்கன் அரிதினும் அரிதான அரசியல் தலைவர் கக்கன்.

'வர்தா' துயர் துடைக்க வந்தவர்களை அடித்து துரத்திய அ.தி.மு.க.வினர்


தருமபுரி : வர்தா புயலால் சிக்கி சின்னாப்பின்னமான நகரை சீர்படுத்த வந்த துப்புரவு தொழிலாளர்களை அ.தி.மு.க.வினர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை மையப்படுத்தி அடித்த வர்தா புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருந்தது. லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் புயல் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகின. சாலைகள் தோறும் மரங்கள் வீழ்ந்து கிடக்க... மரங்களை அகற்ற... மின் வினியோகத்தை சீர்படுத்த தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவுக்கரம் நீட்டியது அரசு பணியாளர்கள் தான்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து துப்புரது தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோர் சென்னை வந்து, மரங்களை அகற்றுவது, துப்புரவு பணிகள், மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இப்படி பணியாற்ற வந்த இடத்தில் துப்புரவு பணியாளர்களை அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வு அரங்கேறி இருப்பது தான் வேதனை.

வர்தா புயலால் சென்னையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில். சேலம் மாவட்டத்திலிருந்து 119 ஆண் துப்புரவு பணிளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். வேளச்சேரி பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தியும், சாலைகளை தூய்மைபடுத்தும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று விஜயா நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாலன், மாது,ராவி,ராமக்கிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னைக்கு சென்றிருக்கும் சேலம் துப்புரவு பணியாளர்களிடம் பேசினோம், “நேற்று மதியம் ஒரு மணி இருக்கும் நாங்க ஒரு பத்துபேர் விஜயா நகர் பகுதியில் சுத்தம் பண்ணிகிட்டு இருந்தோம். அப்ப அந்த பகுதியோட வட்டச்செயலாளர் சம்பத்ங்கறவர் எங்க கிட்ட வந்து, கபாலி நகருக்கு சுத்தம் பண்ண வரச்சொன்னார். ஆனா, விஜயா நகரில் இன்னும் வேலை முடிக்கலை. அவர் பேச்சையும் தட்ட முடியாதுங்குறதுக்காக ஒரு நாலுபேர முதல்ல கபாலிநகருக்கு போக சொல்லிட்டு. மத்தவங்க விஜயா நகர்ல இருக்கும் வேலைய முடிச்சிட்டு அங்க போகலாம்னு நினைச்சு வேக வேகமா வேலை பாத்துகிட்டு இருந்தோம்.

அப்ப, அவர் என்ன நினச்சாரோ தெரியல. நான் கூப்பிட்டா நீங்க எல்லாரும் வர மாட்டீங்களாடானு, கெட்டவார்த்தையில் திட்டினாரு. அதை பொறுத்துகிட்டு தான் நாங்க நின்னோம். திடீர்னு ஓரமாக கிடந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சார். இதுல பாலன், மாது, ரவி, ராமகிருஷ்ணன் ஆகிய நாலு பேருக்கு அடி விழுந்துச்சு. அவர் கூட வந்த இன்னொருத்தரும் தன் பங்குக்கு ஒரு குச்சிய எடுத்து அடிச்சார். எல்லோருக்கும் பலமான அடி வலி தாங்கல..

உடனே மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கொடுத்தோம்.. அவர் அமைச்சர் வரைக்கும் பேசியிருக்கிறார். ராத்திரி 7 மணிக்கு சரவணன்னு ஒருத்தர் வந்தார் வேளச்சேரி அ.தி.மு.க பகுதி செயலாளர்னு சொன்னாங்க. “நடந்தது மிகப்பெரிய தப்புதான் மன்னிச்சிடுங்க. விஷயத்தை பெருசு பண்ணாதிங்க நான் மேல பேசிடுறேன்.. நீங்க எல்லாரும் நாளைக்கு வேலைய முடிச்சிட்டு கிளம்பிடுங்க, மன்னிச்சுடுங்கனு கையெடுத்து கும்பிட்டார். வேலை இன்னும் இருந்துச்சு. நாங்க இருந்தா விஷயம் பெருசாகிடும்ங்குறதால எங்களை உடனே ரிலீவ் பண்ணி அனுப்பிட்டாங்க," என்றனர்.

அழுக்கு உடை அணிந்து 'சேவை' செய்தவர்களை, 'வெள்ளை' உடை அணிந்தவர்கள் அடித்து விரட்டியிருக்கிறார்கள்.



VIEW COMMENTSPOST COMMENT

செல்லாக்காசு : 50 நாட்களை நெருங்குகிறோம்... நிலைமை சரியானதா? #Demonetisation

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டு இன்றோடு (23.12 2016) 45 நாட்கள் ஆகிறது. அப்பாவி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ. டி. எம்-களில் வரிசையில் நிற்கும் நிலை மாறவில்லை. முதலில் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றார்கள். ஒரு வாரம் என்றார்கள், கடைசியாக 50 நாட்களில் சரியாகி விடும் என்று கூறினார்கள். தற்போது 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இன்னும் நிலைமை சரியான பாடில்லை. பணம் இருக்கும் ஏ.டி.எம்-களைத் தேடி மக்கள் அலைகின்றனர். அதே போன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை கிரடிட் ஆகாமல் பவுன்ஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் மட்டும் செல்லாக்காசு ஆக மாறவில்லை. சாதாரண மனிதர்களின் வாழ்கையும் தான். இது குறித்து வங்கியிலும் ஏ.டி.எம் - களிலும் நின்றிருந்த மக்களிடம் பேசினோம்.

செக் பவுன்ஞ்ச் அவமானம் ...

எழும்பூரில் இந்தியன் வங்கி வாயிலில் காத்திருந்த ரேணுகாவிடம் பேசினோம். "கடந்த மாதம் 23-ம் தேதி காசோலை டெபாசிட் செய்தேன். இன்னும் என் கணக்கில் கிரெடிட் ஆகவில்லை. நான் மற்றவர்களுக்கு கொடுத்த செக்-கள் பவுன்ஞ்ச் ஆகிவிட்டன.கடன் கொடுக்க வேண்டியவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கின்றேன். மிக வேதனையாக உள்ளது. ஆன்லைன் ஆன்லைன் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்படப் போவது முதியவர்கள்தான். அவர்களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லையா?" என்றார்.



ஏ.டி.எம் வாசலில் நின்றிருந்த பாலகிருஷ்ணனிடம் பேசினோம்."பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி எடுத்துக் கொள்வார்கள். ஐந்தும், பத்துமாக குருவி சேர்ப்பது போன்று சேர்த்து வைத்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் நாங்கள், எப்படிப் பணம் எடுக்க முடியும். கார்டில் தேய்த்து செலவு செய்யுங்கள் என்கிறார்கள். கார்டில் பணம் அதிகமாக இருந்தால்தானே தேய்க்க முடியும் பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்" என்றார்.

என் பணத்திற்கு நானே பிச்சைக்காரன்

"என்னுடைய பணத்துக்கு என்னையே பிச்சைக்காரனாக மாற்றியுள்ளார்கள். அதுதான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. செய்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு நாள் கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கிறேன். அவமானமாக உள்ளது" என்கிறார் அப்துல்காதர்.

சிங்கப்பூரில் இருந்து வந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காத்திருக்கும் விநோத்திடம் பேசினோம். "ஆயிரம் ரூபாய் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாகத் திண்டாடுகிறேன். இதுவரை பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிமிடம் வரை பணம் எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்"என்று கலங்கினார்.

பணம் எடுக்க வந்த செல்வியிடம் பேசினோம்."தெருத் தெருவாக காலையில் இருந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு ஏ.டி.எம் கூட திறக்கப்படவில்லை. திறந்துள்ள ஏ.டி .எம்-கள் வேலை செய்யவில்லை. எனது அன்றாடப் பணிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. வேலை பார்ப்பேனா, குடும்பத்தை பார்ப்பேனா, பணத்துக்காக அலைவேனா சொல்லுங்க" என்றார்.

அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் !

"பாரிமுனையில் உள்ள நகைக்கடைகளில் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் வங்கிகளில் கிடைக்கவில்லை. மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆன்லைன், ஆன்லைன் என்று சொல்கிறார்கள். அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் சொல்லுங்க. முதலில் நாட்டு மக்களை வளரச் செய்துவிட்டு வங்கி கார்டுகளை வழங்குங்கள்" என்றார் வெங்கட்.

ஆன் லைன் ஆன் லைன் என்று சொல்கிறார்கள் படித்தவர்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். படிக்காத விவசாயிகளும், வேலைக்கார்களும் எப்படிப் பயன்படுத்த முடியும். அவர்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு ஏது ஆன்லைன் வசதி, பாஸ்வேர்டு" என்றார் மல்ஹோத்ரா.



20 சதவிகித ஏ.டி.எம்-களே திறந்துள்ளது !

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர்.சி பி கிருஷ்ணாவிடம் பேசியபோது,"நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏ.டி. எம்-களில் பணம் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் கோடி அச்சாகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள ஏ.டி.எம்-களில் 80 சதவிகித ஏ.டி.எம் - கள் மூடப்பட்டுள்ளன. 20 சதவிகித ஏ.டி.எம்-கள்தான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

வரும் 30 -தேதி முதல் நிலைமை சரியாகும் என்று ஆர்.பி.ஐ சொல்லியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டச்சார்யாவே பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

பணப்பற்றாக்குறை வரும் 30-ம் தேதி முதல் சீராக வாய்ப்பில்லை. இந்தியாவில் பணத்தை அச்சடிக்க 4 அச்சகங்கள் மட்டுமே உள்ளது. இந்த அச்சகங்கள் மூலம் தேவையான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் ஆகிவிடும்.

மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் 2,000 ரூபாய் நோட்டை ஏன் தருகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை. 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நடைமுறையை ஏன் செயல்படுத்தவில்லை என்று நீதிபதிகளும் கேட்கவில்லை. இப்படி இருக்கிற சூழலில் நிலைமை எங்கே சரியாவது? மத்திய அரசு தனது போக்கை எப்படி மாற்றிக் கொள்ளும்" என்றார்.

50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடிவில்லை. 500 மற்றும் 1000 ரூபாய்க்கான தடை அறிவிப்பை திடீரென்று அறிவித்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி, அதனை சரிபடுத்தும் நடவடிக்கையை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !

- கே.புவனேஸ்வரி

ராம மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீடு, தலைமை செயலக அலுவலகம், அவரது மகன் மற்றும் உறவினர்களது வீடு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 23, 2016

' ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை!' -கார்டன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க. 

vikatan.com

'முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள். சேகர் ரெட்டியின் நட்போடு ஆந்திரா, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட தொழில்கள், பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. விரைவில் சி.பி.ஐ கஸ்டடிக்கு ராமமோகன ராவ் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன" என விவரித்த தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

" சேகர் ரெட்டி வளைக்கப்பட்ட தினத்தில் இருந்தே தூக்கமில்லாமல் தவித்து வந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, டெல்லி வரையில் சென்று சில லாபிக்களை செய்து பார்த்தார். அவரிடம் பேசுவதற்குக்கூட டெல்லியில் உள்ள அவருடைய ஐ.ஏ.எஸ் நண்பர்கள் பயந்தார்கள். ' எங்கள் கைகளில் எதுவும் இல்லை. பிரதமர் நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்' எனப் பதில் சொல்லி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து இருண்ட முகத்தோடுதான் சென்னை வந்தார். 21-ம் தேதி காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதை அறிந்து, கார்டன் வட்டாரத்தின் 'சூத்ரதாரி' எனச் சொல்லப்படுபவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, மத்திய இணை அமைச்சர் ஒருவரைத் தொடர்பு கொண்டார் சூத்ரதாரி. போன் எடுத்துப் பேசத் தொடங்கியதுமே, ' ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்க முடியும். இந்த மாதிரியான விவகாரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்' எனக் கோபத்துடன் கூறிவிட்டார்.



அடுத்ததாக, பா.ஜ.கவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இன்னொரு சூத்ரதாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கறேள். எல்லாம் அவர் பார்த்துண்டு இருக்கார்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார். இறுதி முயற்சியாக, நிதித்துறை அமைச்சகத்தின் சீனியர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' ரெய்டில் கிடைத்த துல்லியமான தகவல்களைக் கொண்டுதான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீங்கள் தொடர்பில் வந்தது தெரிந்தாலே, மத்தியில் உள்ளவர்கள் கொந்தளித்துவிடுவார்கள்' எனச் சொல்லிவிட்டார். இதன்பிறகு யாரைத் தொடர்பு கொள்வது என நொந்தபடியே விவாதித்துக் கொண்டிருந்தார் சூத்ரதாரி. 'சென்னையில் இருந்தால் தேவையில்லாமல் தன்னையும் வம்புக்கு இழுப்பார்கள்' என்பதால், நீலாங்கரையில் உள்ள 'கரன்' வீட்டில் அமர்ந்து கொண்டே ஆலோசனைகளைத் தொடர்கிறார். ராமமோகன ராவ் கைது செய்யப்பட்டால், அடுத்த குறி கார்டனை நோக்கித்தான் இருக்கும் எனவும் அச்சத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டும் அறிவுரைகளைக் கேட்டு வருகிறார். மிக ரகசியமாகவே அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதால், பிரதமரை எந்த வகையில் சந்திப்பது என்ற ஆலோசனைதான் தீவிரமாக இருக்கிறது" என்றார் விரிவாக.

" சென்னை துறைமுகத்தின் மூலம் மொலாசஸ் ஏற்றுமதியை ராமமோகன ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தி வருகிறார்கள். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாகவே கவனித்து வந்தார் தலைமைச் செயலாளர். கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் கரும்பில் இருந்து மொலாசஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை வாங்கி லண்டனுக்கு விற்பதில் ராமமோகன ராவுக்குக் கிடைக்கும் லாபம், கணக்கில் அடங்காதது. ' புதிதாக வந்த ஒரு கம்பெனிக்கு துறைமுகத்தில் எப்படி இடம் கொடுக்கலாம்' என கப்பல் துறையில் உள்ள முக்கியமானவரிடம், துறைமுக அதிகாரிகள் சண்டைக்குப் போன சம்பவமும் நடந்தது. 'கரும்பு மொலாசஸ் பின்னணியை வருமான வரித்துறை ஆராய வேண்டும்' என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கார்டனின் அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் ராமமோகன ராவ். அதை வைத்தே, தனக்கென்று பிரமாண்ட வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் மீது கைது நடவடிக்கை பாய்வது என்பது சசிகலா வகையறாக்களை நேரடியாக வளைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதோடு நான்கு அமைச்சர்களின் பரிவர்த்தனைகளையும் தோண்டி எடுத்துவிட்டார்கள். அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் என கார்டனை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

-ஆ.விஜயானந்த்

ரெட்டிக்கு புழல் சிறையில் 'First Class'


முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாசலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புழல் சிறையில் அவர்களுக்கு முதல் வகுப்பு அறையை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 
சவூதியில் நர்ஸ் வேலை! இவர்களுக்கு முன்னுரிமை
vikatan.com
சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன்  பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ ((NICU), மருத்துவம் & அறுவைசிகிச்சை ((Medical & Surgical)) மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவு (ICU) போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி, 2017 முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவூதி ப்ரோமெட்ரிக் (Saudi pro-metric) தேர்ச்சி மற்றும் IELTS 7 Band மற்றும் TOFEL தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம் & அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.41,000 மற்றும் என்ஐசியூ/தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன் ரூ.6,300 உணவுப்படியும், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் (அறிவிக்கை எண் (Notification No.037) என தவறாமல் குறிப்பிட்டு கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவூதி புரோமெட்ரிக், IELTS/TOFEL போன்ற சான்றிதழ்களின் நகல்கள்
மற்றும் ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் எண். B-0821/CHENNAI/ CORPN/1000+/ 5/ 308/84 ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 21.12.2024