பழைய பன்னீர்செல்வம் டூ புதிய ஓ.பி.எஸ்!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 7
பன்னீர்செல்வத்தின் அரசியல்வாழ்வை அறிமுகப் படலம், அனுதாபப் படலம், அதிகாரப் படலம் என்று பிரிக்கலாம். நாம் இதுவரை பார்த்தது அவர் பெரியகுளம் டீ கடைக்காரர் பன்னீர்செல்வமாக இருந்தது முதல் முதல்முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது வரையிலான அறிமுகப் படலம். முதல்முறை முதல் அமைச்சர் ஆனபோது பன்னீர்செல்வத்துக்கு அதிகாரப் படலம் வாய்த்துவிடவில்லை. அவர் அதற்கிடையில் அனுதாபப் படலம் ஒன்றையும் கடக்க வேண்டி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் போட்ட அந்த அஸ்திவாரம்தான், இன்றைய தேதிவரை அவர் அரசியல் நடத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அந்த அஸ்திவாரம்தான் 2001-2006 காலகட்டத்தில் கிள்ளி எடுத்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை, 2011-2016 காலகட்டத்தில் அள்ளி எடுக்க வைத்தது.
அறிமுகப் படலம் டூ அனுதாபப்படலம்!
2001 செப்டம்பர் 21-ல் முதல்முறை முதலமைச்சர் பதவிக்கு வந்த பன்னீர்செல்வத்தை பொதுஜனம் கேலியாகத்தான் பார்த்தது. எதிர்கட்சிகள் ‘பொம்மை’ முதலமைச்சர் என்றனர். ஆனால் நாளடைவில் அதுவே பன்னீரின் பலமாக மாறியது. ஆரம்பத்தில் பன்னீரைக் கேலியாகப் பார்த்த பொதுஜனங்களிடம் இனம்புரியாத அனுதாபம் ஒன்று உருவானது. எதிர்கட்சிக்காரர்களிடம் மானசீகமான மரியாதை ஏற்பட்டது. பன்னீரும் அந்தக் கெத்தைவிடாமல், வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், “தான் பொம்மை அல்ல... உண்மை!” என்று நிரூபித்துக்கொண்டே இருந்தார்.
திருப்பரங்குன்றத்தில் பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியாமல் சந்தித்த பன்னீர்செல்வம் “என்னை செயல்பட முடியாத முதலமைச்சர் என்று கருணாநிதி விமர்சிக்கிறார். நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று என்னை உருவாக்கிய மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவுக்குத் தெரியும். நாட்டு மக்கள் அதைப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் கருணாநிதி என்னை விமரிசிப்பதை விட்டுவிட்டு உருப்படியான வேறு வேலைகளைப் பார்க்கலாம்” என்று பதில் கொடுத்தார். கருணாநிதிக்கு பதில் கொடுத்த கையோடு, ““நான் தற்காலிக முதல்வர்தான்; அம்மாதான் நிரந்தர முதல்வர்; இடையில் அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையால் அவர் இந்தப் பதவியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்; அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை அம்மா விரைவில் தகர்த்துவிடுவார்; அப்போது நான் இந்தப் பதவியை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துவிடுவேன்” என்று விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
2001-2011 : பத்தாண்டு அக்னீப் பரீட்சை!
தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் 5 மாதங்கள் அமர்ந்திருந்தார் பன்னீர்செல்வம். அந்த 5 மாதங்கள்தான் அவருடைய அரசியல் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்த அனுதாபப்படலம் அரங்கேறிய காலம். போயஸ் கார்டனில் ஜெயலலிதா, சசிகலா... மன்னார்குடி குடும்பத்தில் திவாகரன், பாஸ்கரன், தினகரன் என்று ஏகப்பட்ட கரன்கள், கோட்டைக்குள் அதிகாரிகள், கட்சிக்குள் பழம்தின்று கொட்டை போட்ட சீனியர்கள், சக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று ஏகப்பட்ட உள்ளடிகள்.... இத்தனை அக்னிப் பரிட்சைகளையும் வென்று அ.தி.மு.க-வில் அதிகாரத்தை அடைவது எவ்வளவு பெரிய காரியம் என்பது கோட்டையில் இருக்கும் அமைச்சர்கள் முதல் கடைக்கோடியில் கட்சி வளர்க்கும் பகுதிச் செயலாளர்வரை அனைவரும் அறிந்தது. அந்த அக்னிப் பரிட்சைதான் பன்னீருக்கு 2001 முதல் 2011 வரை நடந்தது.
பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கிய ஜெயலலிதா, ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தல் முடிவுகள் 2002 பிப்ரவரி 24-ம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று ஜெயலலிதாவைவிட பன்னீர்செல்வமே அதிகமாகக் காத்திருந்தார். ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதுமே, தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கொண்டு கவர்னரை நோக்கிப் போனார். ‘முதலில் கடிதத்தைப் பிடியுங்கள்’ என்று அவர் கையில் திணித்துவிட்டு வெளியில் வந்தார். தகவல் கேள்விப்பட்ட ஜெயலலிதா நெகிழ்ந்து போனார். ஆண்டிப்பட்டித் தேர்தல் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா “பன்னீர்செல்வத்தைத் தொண்டனாகப் பெற்றது, நான் செய்த பாக்கியம்” என்றார். அன்றுமுதல் 2011 வரை கட்சிக்குள் பன்னீருக்கு ஏறுமுகம்தான்.
பழைய பன்னீர்செல்வம் டூ புதிய ஓ.பி.எஸ்!
2001-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் பத்தாவது அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், 2002-ல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். பொதுப்பணித்துறையை ஜெயலலிதா பன்னீர் செல்வத்துக்குக் கொடுத்தார். 5 மாதம் முதல் அமைச்சராக இருந்தவர், பொதுப்பணித்துறை அமைச்சராகி ஜெயலலிதா பக்கத்தில் அடக்கமாக அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில்தான் பொதுப்பணித்துறை என்பது ‘அள்ள அள்ளக் குறையாத’ தங்கச் சுரங்கம் என்பது பன்னீருக்குப் புரிந்தது. ஆனாலும்கூட பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் அள்ளி எடுக்கவில்லை; தன்னால் முடிந்தவரை கிள்ளிமட்டுமே எடுத்துக் கொண்டார். அதன்பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. 2006-ம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
அப்போது பன்னீர்செல்வத்தைத்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா நியமித்தார்; அந்த நேரத்தில் பன்னீர்செல்வத்தின் பணிவுக்கு தி.மு.க எம்.எல்.ஏ-க்களிலேயே ரசிகர்கள் உருவானார்கள். எதிர்கட்சிக்காரர்கள் மத்தியிலும் பன்னீர்செல்வத்தின் மீது மானசீகமான மதிப்பு உண்டானது. அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் பொருளாளராகவும் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நியமித்தார். பதவிக்காகவும் பொறுப்புக்காகவும் பன்னீர்செல்வத்தை நாடிவரும் கட்சிக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது. பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு வேட்பாளர் பட்டியலில் அவருடைய அனுதாபிகள் அதிகளவில் இடம்பிடிக்கும் அளவுக்குப்போனது. மீண்டும் 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதுதான் பன்னீர்செல்வத்தின் அதிகாரப்படலம் ஆரம்பமான இடம். 2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது முறை முதல்வராகும் வாய்ப்பும், பொதுப்பணித்துறை மற்றும் நிதி அவரது கைக்கு வந்தது.
அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கும் சீனியர்களான பலர் எட்ட முடியாத உயரத்தை பன்னீர் எட்டினார். கட்சியில், சட்டமன்றத்தில், ஆட்சி நிர்வாகத்தில் பன்னீர்செல்வத்தின் கை ஓங்கத் தொடங்கியது. அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் கண்காணிக்க ஜெயலலிதா நியமித்த நால்வர் அணி, ஐவர் அணி என அனைத்து அணியிலும் பன்னீர்செல்வம் முதலாமவராக தொடர்ந்து இருந்தார். பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத் லாபி உருவானது. நத்தம் விஸ்வநாதனோடு நட்பு பலப்பட்டது. இவை எல்லாம் சேர்ந்து பழைய பன்னீர்செல்வத்தை அடியோடு மாற்றி புதிய பன்னீர் செல்வமாக்கியது.