திருவருள் சேர்க்கும் திருச்சி ஸ்தலங்கள்! #PhotoStory
திருச்சி மாநகருக்குச் சென்றால் போதும், மனதுக்குப்பிடித்த 5 தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்:
திருச்சி என்றாலே மலைக்கோட்டை, மலைக்கோட்டை என்றாலே உச்சிப்பிள்ளையார்தான். உச்சிப் பிள்ளையார் கோயிலை அடைய 400 படிகள் ஏறிச் சென்றுதான் சுவாமி தரிசனம் செய்யவேண்டும். மலை முழுவதும் செடி கொடிக ள் இல்லாமல் பாறையாகவே இருப்பது இந்த மலையின் சிறப்பு. மலையின் மீதிருந்து திருச்சி மாநகரைப் பார்க்க, அத்தனை அழகாக இருக்கும். உச்சிப்பிள்ளையாரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே தாயுமானவர் சந்நிதியையும் தரிசிக்கவேண்டும். மலை அடிவாரத்திலும் விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது.
சமயபுரம் மாரியம்மன்:
திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது சமயபுரம். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்குள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களுக்குக்கூட இங்கு வந்து வழிபட்டால், உடல் நலம் அடையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. ஶ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பதால், அரங்கனின் சார்பாக சீர்வரிசை வழங்கப்படும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.
திருவரங்கம்:
வைணவர்களின் தலைமைச் செயலகமான திருவரங்கம், 108 திவ்ய தேசங்களில் முதல் கோயிலாக விளங்குகிறது. காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்திருக்கும் இக்கோயிலில் ரங்கநாதர் சயன நிலையில் இருந்து சேவை சாதிக்கின்றார். திருச்சியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவரங்கம். 7 பிராகாரங்களுடன், 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவரங்கம் கோயிலில் கலைநயம் மிக்க வரலாற்றுச் சிற்பங்கள் பல உள்ளன.
திருவானைக்காவல்:
திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் அப்பு தலமாக (நீர்) திகழ்கின்றது. இங்குள்ள மூலவர் 'ஜம்பு' எனும் நாவல் மரத்தடியில் இருப்பதால், ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றார். கருவறையில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். அம்மன் அகிலாண்டேஸ்வரியை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருபவளாக இருக்கின்றாள். திருச்சியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.
குமாரவயலூர்:
திருச்சிக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குமாரவயலூர். பச்சை பசேலென இருக்கும் வாழைத் தோப்புகளுக்கு மத்தியில் இருக்கின்ற வயலூர் முருகன் கோயில் மருதநில மண்ணின் மகத்துவத்துக்கு அடையாளம். திருமணத்தடை நீக்குவதற்குரிய மிக முக்கியமான தலமாகத் திகழ்கின்றது.
தொகுப்பு: எஸ்.கதிரேசன்
No comments:
Post a Comment