Saturday, March 11, 2017


மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர்.

'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

“1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம். அவரது நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் ஃபிலிம் டிவிஷன் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஒருமுறை, சீனத் தூதரக அதிகாரி தலைமைச் செயலகம் வந்தபோது... அதைப் படம்பிடிக்கத் தோளில் 'டெக்'குடன் ஓடினேன். அப்போது, கீழே இருந்த கேபிள் ஒயர் தடுக்கியதால், முன்னே சென்ற மற்றொரு கேமராமேனின் கேமராவில் என் தலை மோதியது. சொல்லமுடியாத வலியால் என்னையும் அறியாமல் அந்தச் சூழலை மறந்து, 'ஐயோ... அம்மா' எனக் கத்தினேன். இதை, அங்கிருந்தவர்கள் மிகவும் சாதாரணமாகவே பார்த்தார்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா வேகமாக என் பக்கம் திரும்பி, 'தம்பி பார்த்து...பதற்றமில்லாம வேலைபாருங்க' என்றதோடு, என்னை நோக்கி நெருங்கிவந்தார். 'ஒண்ணும் இல்லீங்கம்மா... தேங்க்ஸ்' என்றேன். 'கேபிளை ஓரமாகப் போடக்கூடாதா...' என கேமராமேனைக் கண்டித்ததோடு, 'அவருக்கு மெடிக்கல் ஹெல்ப் வேணுமான்னு கேளுங்க' என என்னைக்காட்டி அருகிலிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு முதல்வர், சாதாரண ஓர் ஊழியனிடம் காட்டிய அந்தப் பரிவை இன்று நினைக்கும்போது பின்னாளில் அவர் 'அம்மா' என தொண்டர்களால் அழைக்கப்பட்டது சரியே என இப்போது உணர்கிறேன். ஒரு முதல்வராகப் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் இருந்தாலும் அவர் மக்களிடம் நெருங்கிப் பழகவே விரும்பினார்'' என்று சொல்லியிருந்தார் பெருமைபொங்க.



ஆம். அவர் சொல்வது உண்மைதான். சாமான்ய மக்களின் வலி என்னவென்பதை நன்றாக உணர்ந்திருந்தவர் ஜெயலலிதா. அவர் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மதிப்புமிகுந்த தலைவர்கள், தாங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் இதுபோன்று துயரச் சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால்... அவர்களுக்கு முதலுதவி செய்வதிலேயே முன்னுரிமை அளிப்பர். அப்படித் தம்மால் முடியாதபட்சத்தில், தன் உதவியாளர்கள் மூலம் உதவச் செய்வர். ஆனால், இன்று அப்படிப்பட்ட அரசியல்வாதிகளைக் காண்பதே அரிதாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஜெயலலிதா மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் இறந்துபோன அந்தக் கட்சியின் தொண்டர்களுடைய குடும்பங்களுக்கு, நிதியுதவி வழங்கிய நேற்றைய (9-3-17) நிகழ்வில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது, நிதியுதவி பெறுவதற்காகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர், டி.டி.வி.தினகரன் அருகே வந்தபோது... துக்கம் தாங்காமல் பீறிட்டு அழுதபடி மயங்கி விழுந்தார். இதை, எந்தவித பதற்றமுமின்றி அருகிலிருந்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்த்தபடி அமைதியாக நின்றனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் விரைந்துசென்று, பரமேஸ்வரியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளியவைத்தனர். அதன்பின், அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது வேறு கதை.

''ஆபத்தில் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு உதவாமல் அப்படியே அமைதியாக நின்று உற்றுப் பார்ப்பவர்களுக்கு எதற்குத் தலைவர் பட்டம்...இதுவா, அரசியல் நாகரிகம்... கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் இருப்பவர்களா மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்'' என்று சரமாரியாக அவர்களைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர் பொதுமக்கள். மேலும், ''அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர்., அவரது வழியில் கட்சியைக் கட்டிக்காத்த ஜெயலலிதா ஆகியோரெல்லாம்கூட சாமான்ய மக்களிடம் சரிசமமாகப் பழகியிருக்கிறார்கள். ஆனால், தற்போது பதவிக்காகவும், பணத்துக்காகவும் கட்சி நடத்தும் இவர்களுக்கு மனிதநேயமும் மக்களின் வேதனைகளும் எங்கே தெரியப்போகிறது. இதற்கெல்லாம் முடிவு வரும். மக்களையும், அவர்களுடைய பிரச்னைகளையும் கண்டுகொள்ளாத இவர்களுக்குத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களாகிய நாங்கள் நல்ல பாடம் புகட்டுவோம்'' என்கின்றனர், அவர்கள்.

சாமான்யர்களோடு ஒன்றாகக் கலந்து, கைகுலுக்கி, உணவு உண்ட மரியாதைமிக்க தலைவர்கள் உண்மையிலேயே மறைந்துதான் போய்விட்டனர்!

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024