Sunday, March 12, 2017

கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி மகாமக குளத்தில் புனித நீராடல்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, மாசி மக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாசி மாத விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, 12 சிவாலயங்களிலிருந்து, சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.பின், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து, நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தீர்த்தவாரியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து, மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மாசி மகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, வைணவத் தலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை சக்கரபாணி சுவாமி உபநாச்சியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின், காலை, 9:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. மாலை சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகபெருமாள், தாயாருடன் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024