அணைகளைத் தூர்வாருவோம்
By எஸ். சந்திரசேகர் |
Published on : 03rd April 2017 02:10 AM |
தமிழகத்தில் முழுவீச்சில்
குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலத்துக்குப்
பிறகு தண்ணீர் சேமிப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம் விவசாயிகளிடம்
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திட்ட அமலாக்கத்தில் சில இடங்களில்
பிரச்னைகள் நிலவினாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இத்திட்டம் வரவேற்கத்
தக்கதே.
அதேசமயம் மற்றொரு முக்கிய அம்சம் பல ஆண்டுகளாக அறிக்கை நிலையிலேயே உள்ளது. அது அணைகள் தூர்வாரும் பிரச்னை.
மதுரையின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கட்டப்பட்ட பிறகு தூர்வாரப்படவே இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அணையின் 71 அடி கொள்ளளவில் 10 அடிக்கு சகதி படிந்துள்ளதாக கூறினர். ஆண்டுகள் செல்லச் செல்ல சகதியின் அளவு கூடி தற்போது 20 அடி வரை சகதி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், "22 அடி வரை சகதி உள்ளது. அதற்கு மேல் இருக்கும் ஓரிரண்டு அடிகளையும்கூட குடிநீருக்குப் பயன்படுத்த முடியாது. மழை குறையக்குறைய சகதி அதிகரிக்கும். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் அணையில் சகதியின் உயரம் 30 அடியைத் தொட்டுவிடும்' என்றார்.
அணையில் சகதி அதிகரிக்க அதிகரிக்க கடைமடையின் விவசாயம் தரிசாகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசன நிலங்களில் இரண்டு விதமான நிலங்கள் உள்ளன. பெரியாறு அணை பாசனப் பகுதிகள் மற்றும் பூர்வீக வைகை பாசன நிலங்கள்.
இவற்றில் பெரியாறு அணைப் பாசனப் பகுதிகளுக்கு வைகை அணை வழியாக தண்ணீர் வந்தாலும் அதை வைகை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், பூர்வீக வைகை பாசன நிலங்களுக்கு முழுக்க முழுக்க வைகை தண்ணீர் தான் பயன்படுத்த வேண்டும்.
பெரியாறு - வைகை பாசன விளை நிலங்களில் பல ஹெக்டேர் நிலங்கள் பல ஆண்டுகளாகவே தரிசாக கிடக்கின்றன. இதன் விளைவாக கிரானைட் குவாரிகளும், மனை வணிகர்களும் பாசனக் கால்வாய்களையும், கண்மாய்களையும் உருக்குலையச் செய்துவிட்டனர்.
அதே நிலைதான் அணைக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்புப் பகுதிகளிலும். மூல வைகை பல இடங்களில் ஓடையாக மாறிவிட்டது. இதன் விளைவாக அணைக்கும் தண்ணீர் சரிவர வருவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே வைகை அணை நிரம்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க காட்டும் ஆர்வத்தில் பாதியளவு ஆர்வத்தை வைகை அணை மீது காட்டினால் போதும். இப்பகுதி விவசாயம் பிழைக்கும். இப்போதைய நிலையில் பெரியாறு - வைகை தண்ணீரால் தேனி மாவட்டம் மட்டும் ஓரளவு பாசன வசதி பெறுகிறது.
அதைக் கடந்து தண்ணீர் வருவதே இல்லை. வந்தாலும் ஒருபோகத்தைக்கூட உருப்படியாக விளைவிக்க முடிவதில்லை. மழை இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், தண்ணீரை தேக்க முடியவில்லை என்பது முக்கியமான காரணம்.
பயிரை விதைத்துவிட்டு பதைபதைக்கும் நெஞ்சுடன் காத்திருக்கும் விவசாயிக்குத்தான் தண்ணீரின் அருமை தெரியும். உரிய நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும் சிக்கல்... தேவையில்லாத நேரத்தில் மழை பெய்தாலும் சிக்கல்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் எப்படியாவது விளைச்சல் எடுத்துவிட வேண்டும் என இரவு பகலாக காத்திருக்கும் விவசாயியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
எந்த விவசாயியும் வறட்சி நிவாரணத்தை விரும்புவதில்லை. லாரித் தண்ணீரை விலைகொடுத்து வாங்கியாவது பயிரைக் காப்பாற்றாத்தான் முயல்கிறார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பிறகு தான் கருகும் பயிர்களை பார்த்து கண்ணீர் விடுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மழை போதுமான அளவுக்கு இல்லை. இப்போது வைகை அணையில் வெறும் 25 அடிதான் தண்ணீர் உள்ளது. அதிலும் 20 அடி சகதி. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தூர் வாரும் பணிகளை மேற்கொண்டால் ஓரிரு மாதத்தில், அதாவது மழைக்கு முன்னதாகவே பணிகளை முடித்துவிட முடியும்.
முன்பெல்லாம் தூர் வார வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பு தேவை. இப்போது அந்த நிலை இல்லை. தூர்வாரவும், அதை அள்ளிச் செல்லவும் விதம் விதமான இயந்திரங்கள் உள்ளன. பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும். இதில் உள்ள ஒரே பிரச்னை தூர்வாரியபின் அந்த மண்ணை அப்புறப்படுத்துவது தான்.
அணையின் சகதி மண் வளம் மிக்கது. இதை விவசாயிகளை எடுத்துச் சொல்ல அனுமதி வழங்கினால், உடனடியாக காலியாகிவிடும். எனவே தூர்வாரும் மண்ணை காலி செய்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
மேலும் செங்கல் சூளைகளுக்கு மணல் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கப்பட்டால் செங்கல்லின் விலை குறையும். கட்டுமானப் பணிகள் சுறுசுறுப்படையும்.
ஆனால், அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரும் பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்வதுடன் தங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடுகின்றனர்.
அவர்கள் தான் அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிகள் அதைவிட மோசம். இதைப் பற்றி பேசுவதே கிடையாது.
வைகை அணை மட்டும் இல்லை. இன்று தமிழகத்தில் உள்ள பல அணைகளின் நிலை இதுதான். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் புதிதாக எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கும் அணைகளையாவது தூர்வாரி தண்ணீர் சேமிக்கும் அளவை உயர்த்தலாமே.
ஒவ்வோர் ஆண்டும் வறட்சி நிவாரணம் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுவதை விட, அணைகளைத் தூர்வாரினாலே விவசாயம் தழைக்கும்.