ஆதார் எழுப்பும் கேள்வி!
By ஆசிரியர் | Published on : 03rd April 2017 02:04 AM |
தனி வருமான வரி தாக்கல் செய்வதற்கு
ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு முறையான
பாதுகாப்பு நடவடிக்கையோ, முன்யோசனையோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது
என்று தோன்றுகிறது. 2017-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கடைசி
நிமிடத்தில் எந்தவித விவாதமோ, அறிவிப்போ இல்லாமல் நிதியமைச்சரால் புதிதாகச்
சேர்க்கப்பட்ட முடிவு இது. குடிமக்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசுக்கு
தெரிய வேண்டும் எனும்போது, வெளிப்படைத்தன்மை இல்லாமல், நிதிநிலை அறிக்கை
சமர்ப்பித்தபோது கூறாமல், இப்படி கடைசி நிமிடத்தில் இந்த உத்தரவை இணைக்க
வேண்டிய அவசியம் என்ன?
நிதிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மை கொண்டு வருவதில் தவறே கிடையாது. அப்படிக் கொண்டு வருவதன் மூலம் தனிநபர் ஒருவருடைய செலவுகளையும், அவர் சமர்ப்பிக்கும் வருமான வரிக் கணக்கையும், வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்தான். அதே நேரத்தில், இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.
அரசு இயந்திரம் ஒவ்வொரு தனி நபரின் தனிப்பட்ட விவரங்களான வங்கிக் கணக்கு, கல்வித் தகுதி, உடல்நிலை ஆகியவை குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் தொலைபேசி அழைப்புகளையும், செல்லிடப்பேசி பயன்பாடு குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதில் இருக்கும் ஒரு பிரிவு, எந்தவொரு குடிமகனையும் தேசியப் பாதுகாப்பு என்கிற பெயரில் கண்காணிக்க முடியும் என்கிறது. அதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்கலாம். இருக்கிறது.
தேசியப் பாதுகாப்பு என்பது தெளிவில்லாத ஒரு குற்றச்சாட்டு. அந்த அடிப்படையில் இந்தியக் குடிமகன் ஒருவருடைய தனியுரிமையும், தனிப்பட்ட விவரங்களும் பாதிக்கப்படும்போது அதை எதிர்த்து சட்டப்படி நீதி பெற முடியாது. ஆதார் சட்டம் 47-ஆவது பிரிவின்படி, ஆதார் ஆணையம் மட்டும்தான், திருடு போகும் தகவல்கள் குறித்து வழக்குத் தொடர முடியும். நமது தகவல்கள் பொது வெளியில் கசிந்தால், அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் உரிமைகூட இனிமேல் நமக்கில்லை.
வங்கிக் கணக்குகள், வருமான வரிக் கணக்கு ஆகியவற்றிற்கு ஆதார் கட்டாயமாக்கப் படுவதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது. மானியங்களையும், சமூகநலத் திட்டங்களையும் பெறுவதற்கு மட்டும்தான் ஆதார் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல. ஆனால், ஓய்வூதியம் வங்கிக் கணக்கில்தான் போடப்படும். வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம். அதேபோல, மானியங்கள் பெற ஆதார் எண் தேவையில்லை. ஆனால் மானியங்கள் வங்கிக் கணக்கில்தான் போடப்படும். வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம். இது வேடிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏன் யோசிக்கவில்லை? வழக்குரைஞர்கள் ஏன் அவர்களுக்கு எடுத்துரைக்கவில்லை.
ஆதார் பிரச்னையில் மையமாக இருக்கும் விவாதம் தனியுரிமை தொடர்பானது. ஆதார் அட்டையின் அடிப்படை நோக்கம், அந்த எண்ணுக்கு உரிய நபர் அவர்தானா என்பதும், அவரது பெயர், முகவரி, அங்க அடையாளங்கள் இவையிவை என்பதும்தான். இதன் மூலம் ஒரே நபர் அரசின் மானியங்களை மூன்று நான்கு பெயரிலோ, போலி முகவரிகளின் மூலமாகவோ பெறுவது தடுக்கப்படும். அதுவரையில் யாருக்கும் அது குறித்துக் கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் ஆதார் எண் அந்த நபரின் பொருளாதார விவரங்கள், மருத்துவப் பதிவுகள், வேலை செய்யும், செய்த விவரங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்போது, தனியுரிமை குறித்த கேள்விகள் எழுகின்றன. இவையெல்லாம் இணைக்கப்படும்போதும், நோக்கம் விரிவுபடுத்தப்படும்போதும் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதும், பரிமாற்றம் செய்யும்போது கசிந்து விடாமல் பாதுகாப்பதும் மிகவும் கடினம்.
இந்தக் கவலைகள் முதலில் தெரிவிக்கப்பட்டபோது, அரசு அத்தனை தகவல்களும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால், இப்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையே பல்வேறு அமைச்சகங்களால் பெறப்பட்ட ஆதார் மட்டுமல்லாமல் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல தனிநபர் தனியுரிமைத் தகவல்கள் பொதுவெளியில் இணையத்துக்குக் கசிந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் அதைப் பெற முடிகிறது என்றும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
ஆதார் எண்ணைப் பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றுடன் வெளியிடுவது ஆதார் சட்டம் 2016-க்கு எதிரானது என்றும், மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு உரியது என்றும் அதனால் எந்த அரசுத்துறையும் அவற்றைப் பொதுவெளியில் பதிவு செய்வது தவறு என்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்கள் இணையத்தில் பதிவாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோல, ஆதார் விவரங்களைச் சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள் அந்த விவரங்களைக் கசிய விடுவது சட்டப்படி குற்றம் என்றாலும், கசிந்த பிறகு அவர்களை யார் தண்டிப்பது?
ஒரு நபரின் வருமானவரி விவரங்களையும், வங்கிக் கணக்குகளையும் ஆதாருடன் இணைத்தால், அந்த நபரின் தனியுரிமையையும், தனி விவரங்களையும் பாதுகாக்க அரசு என்ன செய்யப்போகிறது என்கிற முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் கேள்வி மிகவும் முக்கியமானது. முறையான தனியுரிமைச் சட்டம் கொண்டுவரப்படாமல், ஆதார் கட்டாயமாக்கப்படுவது தனிமனித உரிமைகளை பாதிப்பதாக அமையும்!
No comments:
Post a Comment