Sunday, April 2, 2017

சிதம்பரம் நகருக்கு விடிவு காலம் எப்போது? அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் நிலையம்

சிதம்பரம்: ரயில்வே வரை படத்தில் சிதம்பரம் என்ற இடத்தில் புனித ஸ்தலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த புனித ஸ்தலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயிலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளது. சிதம்பரம் அருகே சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் சதுப்பு நிலக்காடுகள் கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன.

இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்த ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பயணிகளின் பெருங்குறையாக உள்ளது. சிதம்பரம் ரயில் நிலைய நடைபாதையில் இருபுறங்களிலும் புதிதாக கட்டண கழிவறைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் சேதமடைந்து வருகிறது. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்துள்ளதால் போதிய குடிநீர் இன்றி பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இருந்தது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் எடுக்கப்பட்டுவிட்டது.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இல்லாததால் மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் ரயில் நிலையம் வெளியே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்கனவே இருந்தது. அங்கு மேற்கூரை இல்லாததால் வாகனங்கள் கடும் வெயில் மற்றும் மழையில் போதிய பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் தற்போது மூடப்பட்டுவிட்டது. இதனால் தினமும் ரயில் மூலம் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதியுறுகின்றனர். சிலர் ரயில் நிலைய வாயில் பகுதியில் பாதுகாப்பின்றி விட்டு செல்கின்றனர்.

ரயில் வரும் போது முதியவர்கள், பெண்கள் தண்டவாளத்தை கடந்து அடுத்த நடைமேடைக்கு செல்கின்றனர். முதியவர்கள், பெண்களின் நலன் கருதி எக்ஸ்லேட்டர் அமைக்க வேண்டும். மேலும் சிதம்பரம் ரயில் நிலையம் கும்பகோணம் ரயில் நிலையம் போன்று அடிக்கடி பெருக்கி, சுத்தம் செய்து சுகாதாரம் பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தென்னக ரயில்வே அதிகாரிகள் சிதம்பரம் ரயில் நிலையத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும்'

சிதம்பரம் ரயில் நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் தில்லை சீனு கூறுகையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். திருச்சிசென்னை இடையே செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பயணிகள் பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. எனவே, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மயிலாடுதுறை-விழுப்புரம் பாசஞ்சர் ரயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் பழைய ரயில் நிலைய கட்டிடத்தில் மரங்கள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும், என்றார்.

கண்டு கொள்ளாத எம்பி.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. முக்கியமாக புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரத்தில் நிற்காமல் செல்கிறது. சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்னைகள் மீது சிதம்பரம் எம்.பி சந்திரகாசி கண்டுகொள்ளாததால் சிதம்பரம் தொகுதி மக்கள் எம்பி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் எம்பி சந்திரகாசி சிதம்பரத்திற்கு வந்தால்தானே தொகுதி மக்களின் பிரச்னை தெரியும் என்றும் கூறுகின்றனர்.

'பெங்களூரூக்கு ரயில் விட வேண்டும்'

அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், கட்டுமான பொறியாளர் சங்க சாசன தலைவருமான ரவிச்சந்திரன் கூறுகையில், புவனேஸ்வர்ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. சிதம்பரத்தை விட சிறிய ஊரான சீர்காழியில் அந்த ரயில் நிறுத்தப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வெளி மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம், கடலூர் வழியாக புதிய விரைவு ரயில் பெங்களூரூக்கு விட வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடைக்கு செல்ல இணைப்பு பாலத்தை நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால் பல்கலைக்கழக மாணவர்கள் தண்டவாளத்தை கடக்காமல் எளிதில் பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024