Sunday, April 2, 2017

 கிராம பணி: டாக்டர்களுக்கு கட்டாயமாகுமா?

தமிழகத்தில், அரசு டாக்டர் பணி நியமனத்தில் நடக்கும் முறைகேடுகள், நகர்ப்புற மருத்துவமனைகளில் பணி பெறுவதை மையப்படுத்தியே நடப்பதால், அதை தவிர்க்க, டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணி செய்வதை, கட்டாயமாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த, 2012 வரை, அரசு பணியாளர் தேர்வாணையமே, டாக்டர்களையும் தேர்வு செய்தது.

நடவடிக்கை

ஆனால், டாக்டர்கள், செவிலியர் உள்ளிட்ட பதவிகளின் முக்கியத்துவம் கருதி, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. வாரியம் அமைந்தது முதல், அதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அரசு டாக்டர்கள் பணி நியமனத்தின் போது, கிராம மருத்துவமனைகளை புறக்கணித்து, நகர மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி நியமனம் பெறுவதையே, பலரும் விரும்புகின்றனர்.
அது தான் முறைகேடுகளுக்கு வழி வகிக்கிறது என்பதால், டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணி செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து

உள்ளது.தி.மு.க., ஆட்சியில், ஷீலா ராணி சுங்கத், சுகாதாரத் துறை செயலராக இருந்தார். அப்போது, அரசு பணிக்கு வரும் டாக்டர்கள், முதல் இரண்டாண்டுகள் கிராம ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் போன்றவற்றில் பணி செய்வதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்தார்.

பின், பல்வேறு காரணங்களுக்காக, அத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அத்திட்டம் கொண்டு வரப்பட்டால், புதிதாக பணியில் சேரும் டாக்டர்கள், இரண்டாண்டுகள் கிராமங்களில் பணி செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும். இதனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி பெற, சிபாரிசு தேட   வேண்டிய அவசியம் இருக்காது.

இரண்டாண்டுகள் பணி நிறைவு பெற்றதும், எவ்வித பிரச்னையும் இன்றி, மாவட்ட, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி மாறுதல் பெறலாம். அவர்கள் இடத்தில், புதிதாக பணிக்கு வரும் டாக்டர்கள் அமர்த்தப்படுவர்.

ஆனால், தற்போது கடைபிடிக்கும் நடைமுறைகளால், புதிதாக பணியில் சேரும் டாக்டர்கள், சிபாரிசு மூலம் நேரடியாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி பெறலாம் என்ற நிலை உள்ளது.
இதனால், ஏற்கனவே பல ஆண்டுகள், கிராமப்புறங்களில் பணி செய்து, புதிய வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் டாக்டர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அவர்கள் ஆர்வமற்ற நிலையில், தங்கள் பணியை தொடர்வதால், சிகிச்சையின் தரம் குறைகிறது.

ஊழல்கள்

கிராமங்களில், டாக்டர்கள் பணி செய்வதை உறுதி செய்யும் விதமாக, இதற்கு முன், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
அங்கு பணி செய்வதை தவிர்க்க, அரசு டாக்டர்கள், எந்த விலையையும் கொடுக்க தயாராக உள்ளனர். அதன் வெளிப்பாடே தேர்வு வாரியத்தில் நடக்கும் ஊழல்கள்.
அப்பணியை கட்டாய மாக்கினால், ஊழலை ஒழிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024