Sunday, April 2, 2017

பழைய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு! 




குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது கைப்பேசியில் SMS மூலம் தகவல் வந்ததற்குப் பின்னால், குடும்ப அட்டைதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளைப் பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி பேசுகையில், "எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் 'ஏழைகள் மகிழ வேண்டுமென்றால், ஏழைகளின் வயிறு நிறைய வேண்டும், அதற்கான திட்டம்தான் மற்ற எல்லா திட்டங்களைவிட நாட்டுக்கு மிக மிக அவசியமான திட்டம்' என்றார்கள். தங்கள் ஆட்சிக்காலங்களில் பாமர அடித்தட்டு மக்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்களை மகிழ்விக்கும் திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தினார்கள். எம்.ஜி.ஆர். ஏழைக் குழந்தைகள் பசியாற சத்துணவுத் திட்டத்தையும், ஜெயலலிதா ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகத்தையும் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்து பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், வெளிநாட்டினரையும் வியக்க வைத்தார்கள்.

உணவு உற்பத்தியில் மிகை மாநிலங்களான ஆந்திரா, சத்தீஷ்கர், பஞ்சாப், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில்கூட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலைக்குதான் அரிசி வழங்கப்படுகிறது. அதேசமயம் நமது தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.6.2011 முதல் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவுத்துறைக்கு ஆண்டு ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 840 நியாயவிலைக் கடைகள் வாயிலாக, அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு தற்போது தாளில் அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

2012-2013 மற்றும் 2013-2014 ஆகிய ஆண்டுகளில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேட்டு விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு 330 கோடி ரூபாய் செலவில் பொதுவிநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கவும், அதனை ஐந்தாண்டுக்காலம் பராமரிக்கவும், ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கணினிமயமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2015-ம் ஆண்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் நிறுவப்பட்டு பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் அனைத்தும் இணையவழியே கண்காணிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.



தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பொருட்டு, விற்பனை முனைய இயந்திரங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, புதிய தரவுத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 6 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 5 கோடியே 85 லட்சம் உறுப்பினர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகளில் ஒரு கோடியே 17 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முழுமையான ஆதார் விவரங்களும், 70 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆதார் எண் விவரங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தக் குடும்ப அட்டைகளில், 99 சதவிகித குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் விவரங்களாவது சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வழங்கப்படவுள்ளது. இந்த மின்னணு குடும்ப அட்டைகளின் விலையை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுடைய குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விவரங்களை அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அறியும் வகையில் இதுவரை ஒரு கோடியே 67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் கைப்பேசி எண்களும் சேகரிக்கப்பட்டு விவரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்ட விவரத்தினை குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அவர்களின் கைப்பேசிக்கு அனுப்பப்படுவதன் மூலம் போலிப் பட்டியலிடுதல் தவிர்க்கப்படும். பொதுவிநியோகத் திட்டம் முழுமையாகக்ஜ் கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால், நியாய விலைக்கடைகளுக்கான அத்தியாவசியப் பொருள்களின் மாதாந்திர ஒதுக்கீடுகள் இணையவழி மூலம் மேற்கொள்ளவும், கிடங்குகள் முதல் நியாயவிலைக் கடைகள் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் நகர்வினை உடனுக்குடன் கண்காணிக்கவும் இயலும். மேலும் ஒரு நபர், ஒன்றிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் அவரின் பெயர் இடம்பெறுவது தவிர்க்கப்படுவதால், போலிக் குடும்ப அட்டைகள் மற்றும் போலிப் பட்டியலிடுதல் போன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்டம் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைகள் குறித்த மனுக்கள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் குறித்த மனுக்கள் ஆகியவற்றை இணையவழி மூலமாக சமர்ப்பிக்கலாம். இத்தகைய மனுக்களை துறை அதிகாரிகள் இணையவழியாக ஆய்வு செய்து, தகுதியுள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகள் தொடர்பான சேவைகள் விரைவில் கிடைத்திட வழி ஏற்படும். மேலும், இத்தகைய சேவைகளை பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் இன்று தொடங்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை பெறுகிறவரை தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் மூலம் ரேஷன் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது கைக்பேசியில் SMS மூலம் தகவல் வந்ததற்குப் பின்னால், குடும்ப அட்டைதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஜெயலலிதா விட்டுச்சென்ற மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என்று கூறினார்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024