சென்னை: தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, சம்பள உயர்வு வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள, ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர் களுக்கு, ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. அது குறித்து, தகுந்த பரிந்துரைகளை, தமிழக அரசுக்கு வழங்க, அலுவலர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, தன் பரிந்துரை களை, செப்., 27ல் சமர்ப்பித்தது. இப்பரிந்துரைகளை செயல்படுத்த, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், தற்போதைய ஊதியத்தை, 2.57 ஆல் பெருக்கி, உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, அக்., 1 முதல், பணப்பயனுடன் அமல்படுத்தப்படும்.
தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியம், 6,100 ரூபாய் என்பது, 15 ஆயிரத்து, 700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம், 77 ஆயிரம் என்பது, 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
முந்தைய ஊதியக் குழுக்களால், தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, வீட்டு வாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட, இம்முறை அதிக உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதியம், ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாய்; குடும்ப ஓய்வூதியம், 67 ஆயிரத்து, 500 ரூபாய் என, உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வு பெறும்போது வழங்கப்படும், பணிக் கொடைக்கான அதிகபட்ச வரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு, தற்போதைய ஊதியம், 2.57ஆல் பெருக்கப்பட்டு, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் குறைந்தபட்ச ஊதியம், 3,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம், 11 ஆயிரத்து, 100 ரூபாயாகவும், திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு, குறைந்தபட்சம், 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு, 8,016 கோடி ரூபாய், கூடுதல் ஊதிய மாகவும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, 6,703 கோடி ரூபாய், கூடுதல் ஓய்வூதியமாகவும் வழங்கப் படும்.
இதனால், ஆண்டுக்கு, 14 ஆயிரத்து, 719 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும். அதை மாநில அரசு ஏற்கிறது.ஊதிய உயர்வால், 12 லட்சம் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள்; ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்கள் பயன் அடைவர். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
சம்பள உயர்வு பட்டியல்:
* ஒரே பணி இடத்தில், 10 ஆண்டுகள், தேர்வு நிலை,20 ஆண்டுகள் மற்றும் சிறப்பு நிலை முடித்தோருக்கு, அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தில், தற்போது, இரண்டு ஊதிய உயர்வுகளில் வழங்கப்படும், 6 சதவீதம் தொடர்ந்து அளிக்கப்படும்
* ஆண்டுக்கு, 3 சதவீத ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்
* திருத்திய ஊதியஅமைப்பிலும், தேக்க நிலை ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்
* அரசு அலுவலர்கள், தற்போது பெற்று வரும் சிறப்பூதியத்தில், 50 சதவீதம் கூடுதலாக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
* அரசு பணியாளர்களுக்கு, 40க்கும் மேற்பட்ட படிகள் வழங்கப்படுகின்றன. சில படிகளை தவிர, அனைத்து படிகளுக்கும், 100 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது
* மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படியை பின்பற்றி, மாநில அரசு ஊழியர்களுக்கு, தொடர்ந்து வழங்கப்படும்
* வீட்டு வாடகைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் சீரமைப்பு குழு
அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர் நிலைகளை ஆய்வு செய்து, தேவையற்ற பணியிடங்களை கண்டறியவும், இதர பணியிடங்களை நிரப்பவும் பரிந்துரைகளை அளித்திட, 'பணியாளர் சீரமைப்பு குழு' உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
உயர்கிறது மது விலை
தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று காலை, 11:25 மணிக்கு, சென்னை, தலைமைச் யலகத்தில் துவங்கியது. முதல்வர் பழனிசாமி, தலைமை வகித்தார். துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பகல், 1:00 மணிக்கு நிறைவடைந்தது.
கூட்டத்தில், மதுபானங்கள் விலையை, பீர் பாட்டிலுக்கு, 10 ரூபாய், 'குவார்ட்டர்' பாட்டில் மதுபானத்திற்கு, 12 ரூபாய் உயர்த்த, அனுமதி அளிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைப்படுத்துவது குறித்தும், தமிழகத்தில் பரவி வரும், 'டெங்கு' காய்ச்சலை ஒழிக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர் ஊதிய உயர்வு மட்டும், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற முடிவுகள் குறித்த அறிவிப்புகள், இன்று அல்லது நாளை வெளியாகலாம்.
LATEST COMMENT
It seems the prison officials are more concerned about the commute distance and time to travel to the hospital for the prisoners while the rest of the population take more than an hour to reach the hospitals routinely.Vijay Naidu