நெருங்கியது தீபாவளி; துவங்கியது வசூல்! : பட்டாசு ஆலை அதிபர்கள் ரத்தக்கண்ணீர்
dinamalar
பதிவு செய்த நாள்11அக்
2017
20:44
சிவகாசி: தீபாவளி நெருங்கி வரும் வேளையில், சிவகாசியில் அதிகாரிகளின் வசூல் வேட்டை அதிகரித்துள்ளதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு, ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆர்டருக்கு ஏற்ப, பட்டாசுகளை தயார் செய்யும் பணியில், மும்முரமாக இறங்கி உள்ளனர்.
ரூ.10 ஆயிரம் : இவ்வார இறுதியில், உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி, ஆலைகளுக்கு விடுமுறை விடப்படும். வாழ்வாதாரத்திற்காக, உரிமையாளர்கள் முதல், தொழிலாளிகள் வரை, பட்டாசு உற்பத்தியில் விதியோடு விளையாடி கொண்டிருக்கும் வேளையில், அதிகாரிகளின் கெடுபிடியும் அதிகரித்து வருகிறது. ஆய்வு என்ற பெயரில், பட்டாசு ஆலைகளில் நுழையும் வருவாய், போலீஸ், தீயணைப்பு துறை அதிகாரிகள்,ஓர் ஆலைக்கு குறைந்தது, 10 ஆயிரம் ரூபாய் வரை கறக்கின்றனர்.
பணம் வாங்குவதில் குறி : அசைந்து கொடுக்காத ஆலைகளுக்கு, பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தற்காலிக பட்டாசு உற்பத்தியை நிறுத்த, நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
முறையாக அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில், நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள், சிவகாசி சுற்றுவட்டார கிராமங்களில், விதி மீறி உற்பத்தி செய்யும் பட்டாசுகளை கட்டுப்படுத்த, முனைப்பு காட்டுவதில்லை. பணம் கறப்பதிலேயே குறியாக செயல்படுகின்றனர்.இதில், தற்போது தொழிலாளர் ஆய்வக துறை அதிகாரிகளும் சேர்ந்துள்ளனர். இவர்களும், தங்கள் பங்கிற்கு, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெருக்கடி : சிவகாசி, சாத்துார், விருதுநகர் பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு,500 பட்டாசு விற்பனை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு ஆய்வுக்கு செல்லும் தொழிலாளர் துறை அதிகாரிகள், பட்டாசுகளின் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவைகளை ஆய்வு செய்வதாக கூறி, வசூலில் ஈடுபடுகின்றனர். தொழில் நலிந்து வரும் வேளையில், அதிகாரிகளின் நெருக்கடியில் சிக்கி, ஆலை உரிமையாளர்களும், விற்பனையாளர்களும் ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக பரிதவிக்கின்றனர்.
இம்சிக்கும் அதிகாரிகளால் மனவேதனை : ஜி.எஸ்.டி., விதிப்பிற்கு பின், வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு, சிவகாசியில் வேலை இல்லை. முன்பெல்லாம் லாரியை மடக்கி, ஒரு தொகை பார்த்த அதிகாரிகளுக்கு, தற்போது, லஞ்சம் வாங்காமல் கைகள் அரிக்கின்றன. இதனால், ஒவ்வொரு ஆலைகளுக்கும் சென்று, கிடைப்பதை வாங்கி சுருட்டுகின்றனர்.
வருவாய் துறை அதிகாரிகள், உதவியாளர் என, ஒரு பட்டாளமே லஞ்சம் வாங்குவதற்காக, டூ - வீலரில், அரசு வாகனங்களில் சுற்றி வருகின்றன. ஒரு சிலர் வாடகைக்கு கார் பிடித்து, லஞ்சம் வாங்க ஆலைகளில் ஏறி இறங்குகின்றனர். இவர்களை கண்டாலே, உற்பத்தியாளர்களுக்கு நடுக்கம் வந்து விடுகிறது. அந்தளவு அச்சப்படுத்தி வைத்துள்ளனர்.
உற்பத்தியை முடக்கி, லைசென்சை ரத்து செய்து விட்டால், பாதிப்பு என்பதால், அதிகாரிகள் கேட்பதை, உரிமையாளர்கள் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரி விதிப்பு கொள்கையில் மாற்றம், ஐந்து வெளி மாநிலங்களில் பட்டாசு விற்க தடை என்பது போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, தொழில் நலிவடைந்து வருகிறது. அடுத்தாண்டு தொழில் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இந்நேரத்தில், தீபாவளி இனாம் கேட்டு, அதிகாரிகள் இம்சிப்பது, உற்பத்தியாளர்களின் மனதை வேதனைப்படுத்துகிறது.
ஜி.விநாயகமூர்த்தி, சிறு பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், மீனம்பட்டி
No comments:
Post a Comment