காற்றில் கரையாத நினைவுகள் 14: பள்ளிக்கூடம் போகலாம்!
Published : 05 Jun 2018 09:36 IST
வெ.இறையன்பு
அருகில் இருக்கும் பள்ளியே அழகான பள்ளி. அன்று சில குடும்பங்களில் அத்தனை வசதிகள் இருந்தாலும், பொங்கிப் பெருகும் செல்வம் கொழித்தாலும் நகரத்துக்குச் சென்று பிள்ளைகள் படித்து வருகிற வழக்கமில்லை. அப்பா, அம்மாவுடனேயே குழந்தைகள் தங்கி, கிராமத்துப் பள்ளியில் படிப்பதே வாடிக்கை. இன்றிருப்பதுபோல விடுதியில் தங்கிப் படிக்க வைப்பதும், மதிப்பெண்களைக் கொட்ட வைக்கும் பள்ளிகளில் அனுமதித்து, பெற்றோர் அங்கேயே அறையெடுத்துத் தங்கும் அவலமும் அன்றில்லை.
பள்ளி என்பது படிக்க மட்டுமல்ல; ஒன்றாகச் சேர்ந்து விளையாடவும், அன்பையும் பண்பையும் கற்கவும் அது நாற்றங்கால். கட்டிடம் முக்கியமல்ல. தரையின் ஜொலிப்பு அவசியமல்ல. நடத்தும் ஆசிரியரின் ஆளுமையும் முக்கியமல்ல. காலை முதல் மாலை வரை பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பட்டாம்பூச்சியாகச் சிறகடித்துப் பறந்தால் போதுமென பெற்றோர் நினைத்த காலம் அது.
பள்ளியில் சேர பிறப்புச் சான்றிதழ் கூட அன்று தேவையில்லை. வலது கையால் தலைக்கு மேல் வைத்து இடது காதை முழுமையாகத் தொட் டால் படிக்கிற வயது வந்துவிட்டது என்று பொருள். குள்ளமாக இருந்த தால் எனக்கு எட்டவில்லை. இருந்தா லும் சேர்த்துக் கொண்டனர். இன்று வரை எட்டாமல்தான் இருக்கிறது. பள்ளிக்கு முதல் நாள் செல்ல அன்று குழந்தைகள் அழுததில்லை. வீட்டில் யாரும் பொத்திப் பொத்தி வளர்க்காத தால் பள்ளி எங்களை பயமுறுத்தவில்லை.
பாட்டும், எழுத்தும் படிப்பு
அன்று பெரும்பாலும் மாணவர்கள் நடந்தே வருவார்கள். ஒரு சில வசதி யான குடும்பங்கள் குழந்தைகளை மிதிவண்டியில் கொண்டுவந்து விட ஆள் வைத்திருப்பார்கள். பள்ளியில் தாமதமானால் மகன்களைத் தேடும் தந்தையுமில்லை, அழைத்துச் செல் லும் அயர்ச்சியும் இல்லை. படிப்பைக் காற்றடிப்பதுபோல கஷ்டப்பட்டு மூளைக்கு அனுப்பும் முயற்சியும் இல்லை. தனிப்பாடம் என்பது ஆரம்பப் பள்ளியில் கிடையவே கிடையாது. படிப்பு என்பது பாட்டும், எழுத்தும்.
ஆரம்பப் பள்ளியில் அத்தனை பாடத்துக்கும் ஒரே ஆசிரியர். காலை முதல் மாலை வரை வகுப்பறை அந்த ஒருவர் கண்காணிப்பில் தவழும் தாய்மடி. கை பிடித்து சின்னப் பலகையில் ஆனா, ஆவன்னா எழுதக் கற்றுத் தருவார்கள். பல்பத் தால் எழுதிய பாடத்தை அழித்த பிறகும் சுவடுகள் இருக்கும். பள்ளித் தோழன் பலகை யைத் துடைக்க கற் றுத் தந்த உத்தி ஒன்று. உள்ளங்கைகள் இரண்டையும் அதன் மேல் வைத்து ‘காக்கா காக்கா தண்ணி போடு, குருவிகிட்ட சொல்லாதே’ என்போம். கை வியர்வையை தண்ணீர் என நினைத்து பலகையைச் சுத்தம் செய்வோம். நண்பன் ஒருவன் இலை ஒன்றைக் காண்பித்து படிப்புத் தழை என்று பறித்து பையில் வைப்பான். அதை வைத்தால் படிப்பு நன்றாக வருமாம். நானும் செய்திருக்கிறேன். அது அழுகி துர்நாற்றம் வந்ததோடு சரி. மாம்பழம் வரைய தமிழ் எழுத்து ‘மு’வை எழுதி சுழிப்பதைச் செய்து உள்ளிருப்பவற்றை அழிப்பது எளிய வழி.
அன்று அகல உழுவதைவிட ஆழ உழுதது அதிகம். எங்களுக்கு முதல் வகுப்பில் சரஸ்வதி டீச்சர். மாணவர்களுக்கு இன்னொரு தாயாய் இருப்பார். எந்தக் குழந்தையையும் அவர் திட்டியது இல்லை. காலையில் பள்ளியில் பிரார்த்தனை நடக்கும்.
முதல் பூ டீச்சருக்குத்தான்
இரண்டாம் வகுப்பில் பென்சில் அறிமுகமாகும். காகிதம் எழுதத் தரப் படும். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த சாவித்திரி டீச்சர் கத்தரிக் காய் எவ்வளவு நல்லது என்று வகுப்பெடுத்தார். அதுவரை கத்தரிக்காயைத் தொடாமல் இருந்த நான், அதற்குப் பிறகு சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினேன். ஆசிரியர் வாக்கே வேத வாக்கு.
மூன்றாம் வகுப்பில் ஜோதி டீச்சர். அவ்வளவு எளிமையாக எங்களுக்கு ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினார். அத்தனை மாணவர்களிடமும் சிரித்த முகத்துடன் நடந்துகொள்வார். மூன் றாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துகள் கற்றுத் தரப்பட்டன. எழுதப் பேனாவும் எங்களுக் குத் தரப்படும். ஆண்டு தொடக்கத்தில் பெறுகிற பேனாவை முழுஆண்டுத் தேர்வு வரை பாதுகாக்க வேண்டும். அவ்வப்போது கீழே விழுந்து உடைந்து முள் (நிப்) முறியும். புது முள்ளுக்கு 3 பைசா. நீல மசியை நிரப்ப 3 பைசா. கருப்பு மையை நிரப்ப 4 பைசா. நாளடைவில் தேய்ந்து முள் பட்டையடிக்க ஆரம்பிக்கும். புது முள் கொஞ்சம் அழுத்தமாக எழுத, அதன் நடுவே பிளேடை விட்டு நெம்புவதும் உண்டு. சமயத்தில் பேனா லீக்கடித்து சட்டைப் பை மசியால் நனைவதும் உண்டு. நான்காம் வகுப்பிலும், ஐந் தாம் வகுப்பிலும் கமலாட்சி டீச்சர். பள்ளி முடியும் வரை கண்டிப்பு, அதற்குப் பிறகு கனிவு.
வீட்டுப் பாடம் என்பது அரை மணி நேர வேலை. ஒன்றாம் வகுப்பில் சின்னக் கரும்பலகையின் இரண்டு பக்கமும் எழுதும் அளவே வீட்டுப் பாடம். இரண்டாம் வகுப்பில் 16-ம் வாய்ப் பாடு வரை பலமுறை எழுதி எதைக் கேட்டாலும் உடனடியாகச் சொல்ல வேண்டும். திண்ணையிலேயே அமர்ந்து வீட்டுப் பாடத்தை முடித்த பிறகு உள்ளே நுழைவோம். அதற்குப் பிறகு விளையாட்டு மட்டுமே. இருட்டும் வரை விளையாட்டு. பின்னர் வீட்டுக்கு வந்து கை, கால் அலம்பி சாப்பிட்ட பிறகு சுகமான தூக்கம். வீட்டில் எப்போதும் ஆசிரியர் பற்றியே பேச்சு இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் வகுப்பாசிரியருக்கு பொங்கல் வாழ்த்து அட்டையை கைப்பட வரைந்து, அனுப்புவதற்கு காசு இல்லாததால் அப்படியே வைத்திருப்போம். வீட்டுச் செடியில் முத லில் பூத்த சாமந்தியை டீச்சருக்கு எடுத்துச் செல்வதில் அப்படியொரு பெருமை.
நண்பனை காணவில்லை
ஆண்டுத் தொடக்கத்தில் வாங்கித் தருகிற இரண்டு, மூன்று ஜோடி சீருடை மட்டுமே. அவற்றில் கழுத்துப் பட்டை நுனியில் மஞ்சள் தடவி அணிந்து செல்வோம். முக்கால்வாசி மாணவர்கள் மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டுச் செல்வார்கள். குடிநீர்க் குப்பிகளை தூக்கிச் செல்லும் வழக்கமில்லை. பள்ளியின் குடிநீர்க் குழாயில் கைகளைக் குவித்து கவ லையின்றி நீர் பருகி நிம்மதியாக இருந்தோம். பள்ளி வேலைகளை குழுவாக மாணவர் செய்த காலம் அது. அடுப்புக் கரி, ஊமத்தங்காய் ஆகியவற்றை அரைத்து வகுப்பறைக் கரும்பலகையில் மாணவர்கள் அவ்வப்போது பூசுவார்கள். மண் பானை யில் தண்ணீர் கொண்டு வர ஒரு குழு. பெருக்க ஒரு குழு. பிரார்த்தனை மைதானத்தை கூட்டுவதற்கு ஒரு குழு.
என்னோடு மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாகப் பள்ளிக்குச் சேர்ந்து செல் கிற நண்பன் ஒருவன் உண்டு. நான்காம் வகுப்பு தொடங்கும்போது என்னை அழைத்துச் செல்ல அவன் வரவில்லை. காத்திருந்து பார்த்திருந்துவிட்டு, களைத்துப் போய் அவசர அவசரமாக பள்ளிக்கு ஓடினேன். வகுப்பிலும் அவன் இல்லை. ஒரு வாரம் கழித்து நான் படித்த மூன்றாம் வகுப்பைக் கடக்கும்போது அவனை அங்கு பார்த்தேன். எல்லாக் காலத்திலும் தேர்ச்சி பெறாமல் போவது ஒருவித சோகம்தான்.
நாங்கள் துவைத்த உடையோடு பள்ளிக்குச் செல்கையில் ஓரிரு மாணவர்கள் அங்கங்கே சலவை செய்த கூர்மையான உடைகளுடன் பள்ளிப் பேருந்துக்கு காத்திருப்பதைப் பார்ப்போம்.
சீருடை கூர்மையும் புத்தி கூர்மையும்
எங்கள் கையில் அத்தனை புத்தகங்களையும் அட்டவணை என்கிற பாகுபாடே இல்லாமல் சுமக்கும் பை. அவர்களிடமோ பளபளக்கும் சின்ன அலுமினியப் பெட்டி. அவர்கள் மிகவும் உயர்ந்த படிப்பைப் படிக்கிறார்கள் என்கிற எண்ணம். உயர்நிலைப் பள்ளி யில் சேர்ந்து ஆறாம் வகுப்பில் அவர்கள் வந்து எங்களோடு இணையும்போது அது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும். சீருடையின் கூர்மைக்கும், புத்திக் கூர்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இன்று மழலையர் பள்ளியில் சேர்வதற்கே மகத்தான கூட்டம். முதல் நாளே சென்று விண்ணப்பம் வாங்க வீதியில் படுத்து பெற்றோர் காத்திருக் கும் பள்ளிகளும் உண்டு. பள்ளி இறுதி வரை கங்காரு குட்டிகளைச் சுமப்பதுபோல பெற்றோர் காபந்து செய்யும் நடைமுறை.
படிப்பு என்பது நிகழ்காலத்தைத் தவறவிட்டு எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் திட்டமிட்ட முதலீடு இன்று.
- நினைவுகள் படரும்...