Tuesday, June 5, 2018

புதுமை நாயகன்!

Published : 04 Jun 2018 07:11 IST

பிரேம்

 


இளையராஜா திரையிசை வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். திரைப்படம் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்கூட அவரை விரிவாகச் செயல்பட விடாமல் தடுத்ததும் திரைப்படம்தான். திரைப்படம் எனும் வடிவம்தான் இந்தியாவில் இசைக்கான பெரிய வெளிப்பாட்டு வடிவமாக இருப்பதால், அவர் அதற்குள் அடங்கிவிட்டார். மற்ற நாடுகளில் இருப்பதுபோல் இசைக்கென்று தனியாக ஒரு களம் இருந்திருந்தால் அவர் ஒரு இசைப் படைப்பாளியாக இன்னும் பெரிய அளவில் சாதித்திருப்பார். அதற்கான கற்பனை வளமும், அதற்கான வடிவங்களை உருவாக்கும் திறனும் இளையராஜாவிடம் உண்டு.

இளையராஜாவைப் பொறுத்தவரை எண்ணிக்கை அளவில்கூட உலக அளவில் உள்ள பெரிய இசைப் படைப்பாளிகளைவிடப் பல மடங்கு அதிகம் செய்திருக்கிறார். திரையிசையில் கோலோச்சிய அதேசமயம், வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சாஸ்திரிய சங்கீதத்தில் தன்னுடைய மேதமையை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. ராகம் என்பது ஏற்கெனவே இருக்கும் வடிவம். அதை இன்னும் செழுமையாக்கிவிடுகிறார் இளையராஜா. ஒரே பாடலில் வெவ்வேறு அடுக்குகளை வைக்கிறார். புதிய இசைப் படைப்பாகத் தான் அதைக் கொடுக்கிறார். இவையெல்லாம்தான் அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு.

ஆயிரம் படங்கள் என்றால் வெறும் படங்கள் அல்ல, பின்னணி இசை, தொடக்க இசை, சில சமயம் லீட் மோடிஃப் என்று சொல்லக்கூடிய தொடர்ந்து ஒலிக்கக்கூடிய.. கதைக்கே உரிய சில பாடல்களைப் படத்தில் அங்கங்கே கொடுப்பார். புதிய வடிவங்களை உருவாக்கக்கூடியவர் அவர். தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அவர் இசைக் கருவிகளை பயன்படுத்தும் விதம் இன்னொரு சிறப்பு. தில்ருபா போன்ற மிக அரிதான கருவி கள் உட்பட ஏராளமான கருவிகளை அவர் பயன் படுத்தியிருக்கிறார். அவர் பயன்படுத்தியிருக்கும் தோல் இசைக் கருவிகளையும் தேர்ந்தெடுத்த கலைஞர்களையுமே தனித்த ஒரு ஆய்வாக்கலாம். ஒரு 4-5 நிமிடப் பாடல்களில் பல விதமான இசைக் கருவிகளுக்கான சின்னச் சின்ன பகுதிகளை அவர் கொடுக்கிறார். அவரது சில பாடல்களுக் கான இசையை ஒரு பெரிய தனி இசையாகக்கூட வளர்த்தெடுக்க முடியும்.

நாட்டார்/நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய இருந்தாலும் அவற்றை மொத்த மாக விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய வடிவங்களுக்குள் அடக்கிவிடலாம். நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அவர்களு டைய குரல் வளம் ஆகியவற்றால்தான் தனித்துத் தெரிகிறார்கள். ஒரு திரையிசை அமைப்பாளர் அதற்குள் அடங்கி கிராமிய சினிமா பாடல்களைக் கொடுத்துவிட முடியாது. ஆகையால், அடிப்படை யான சட்டகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு வடிவத்தைப் புதிதாக அவர் உருவாக்குகிறார். அதிலும் அவரது படைப்பாற்றலுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ‘நாயகன்’ படத்தின் ‘தென் பாண்டிச் சீமையிலே’ ஒரு சிறந்த உதாரணம்.

உலக அளவில் இருக்கக்கூடிய இசை யின் பின்னணி தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாக இருந்ததில்லை. உலகமயமா தல் சூழலில்கூட அது நிறைவேறவில்லை.

தமிழ்ச் சமூகத்துக்குப் பலவும் வெளியிலிருந்து வருபவைதான். அவரது இசை மூலமாகத் தமிழர்கள் தங்களின் உணர்வுகளுக்கு ஒரு அடையாளம் கிடைப்பதாக நினைக்கிறார்கள்.

-பிரேம், எழுத்தாளர், ‘இளையராஜா:

இசையின் தத்துவமும் அழகியலும்’

நூலின் ஆசிரியர்களில் ஒருவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024