Tuesday, June 5, 2018


நீட் தேர்வில் தமிழகத்தில் 40% பாஸ்; பீகார் மாணவி முதலிடம் - தமிழக மாணவி 12-ம் இடம்


Published : 04 Jun 2018 15:38 IST

புதுடெல்லி

 



நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 -ம் இடம் பிடித்துள்ளார்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாக, 12:30 மணியளவில் வெளியாகின.

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 12,69,922 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தெலுங்கானா மாணவர் ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஹிமான்ஷூ சர்மா 690 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஆரோஷ் தமிஜா 686 மதிப் பெண் பெற்று 4வது இடத்தையும், ராஜஸ்தான் மாணவர் பிரின்ஸ் சவுத்திரி 686 மதிப்பெண் பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப், டெல்லி என மற்ற மாநில மாணவ, மாணவியர் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் 40% பாஸ்

தமிழகத்தில் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 1, 14,602 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக உள்ளது.

இந்திய அளவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேரில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

இதுபோலவே புதுச்சேரியில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 4573 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4462 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 1768 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

மதிப்பெண் - தகுதி

பொது பிரிவில் 119 மதிப்பெண் வரை தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவில் 118 - 96 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி உடைவயர்கள் ஆவர்.

இதன்படி, பொதுப்பிரிவில் 6,34,897 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிற்பட்டோர் பிரிவில் 54,653 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 17209 பேரும், பழங்குடியினர் பிரிவில் 7446 பேரும் தேர்வாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024