Tuesday, June 5, 2018

துன்பங்கள் எல்லாம் தூசிகளே!

Published : 20 Oct 2014 15:03 IST

டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்
 



“வேலை கிடைக்க வில்லை. சாகலாம் போல உள்ளது.” என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் நல்ல கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய பொறியாளர். தாமதிக்காமல் பதில் போட்டேன்.

பணியிட மனநலம்

வேலையில்லாத நிலை, வேலையில் பளு, வேலையில் மனஅழுத்தம் எனப் பல காரணங்களுக்காகத் தற்கொலைகள் பெருகி வருகின்றன. இது கவலை தரும் விஷயம்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள், டாஸ்மாக், மாரடைப்பு போல இதுவும் அவசியம் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டிய விஷயம். இதன் சமூக, உளவியல், மருத்துவத் தீர்வுகள் எல்லோருக்கும் தெரிய வேண்டியவை. மேலை நாடுகளில் பணியிட மனநலம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கும் அதன் தேவை வளர்ந்துவருகிறது.

துக்கம் எனும் நோய்

சுய மதிப்பு இழத்தல், உதவி இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மை என 3 முக்கிய உளவியல் காரணங்களைத் துக்க நோய்க்குக் காரணமான மனநிலைகள் என்கிறார்கள். ஆமாம், துக்கம் என்பதும் ஒரு நோய்தான்.

இதில் நம்பிக்கை யின்மைதான் கடைசியில் தவறான முடிவை எடுக்க வைக்கிறது.

நம்பிக்கையை வளர்க்கும் செய்திகளைத் தேர்வு செய்து உட்கொள்வது மிக அவசியம். நம்பிக்கையைக் கெடுக்கும் செய்திகளை நச்சு போலத் தவிர்ப்பது நல்லது. இதை ஒரு திறனாகச் செய்ய நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

வாலியைத் தேற்றிய கண்ணதாசன்

கவிஞர் வாலி திரைப்படத் துறைக்கு வருவதற்கு மிகவும் போராடிக்கொண்டிருந்த நேரம். ஒரு முறை சலித்துப் போய் ஊருக்குத் திரும்பலாம் என்று நினைக்கையில் அவர் கண்ணதாசனின் ஒரு திரைப்பாடலைக் கேட்கிறார்.

அது அவர் மனதை உறுதி செய்து மீண்டும் போராடித் திரைப்பட வாய்ப்பிற்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. அந்தப் பாடல் “மயக்கமா கலக்கமா?” என்று தொடங்கும்.

அதில் என் பிரிய வரிகள்:

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி.

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”

அமரத்துவம் பெற்ற இந்த வரிகள் துன்பம் வரும் தருணங்களில் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள்.

மாறும் நிஜங்கள்

வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லை. வேலை போய் விட்டது. குடும்பம் கஷ்டத்தில். வேலையில் தீராத மன உளைச்சல். ஆரோக்கியம் கெடுகிறது. எல்லாம் நிஜமான போராட்டங்களே. எதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மறந்துவிட்ட ஒரே உண்மை: இவை அனைத்தும் மாறக்கூடிய நிஜங்கள். இவற்றை மாற்றத் தேவை மனோ திடம்.

மாறாத நிஜங்கள்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாற்ற முடியாத நிஜங்களுடன் எத்தனை பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

மன வளர்ச்சி குன்றியவர்கள், சிறு வயதில் பெற்றோர்களை இழந்தவர்கள், போர்க் குற்றங்களால் பாதிக்கப் பட்டோர், இயற்கைப் பேரிடரில் அனைத்து உடைமைகளையும் இழந்தவர்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், விபத்தில் உறுப்பிழந்தவர்கள், சாதிக் கொடுமையால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோர், வேற்று நாட்டுச் சிறையில் நீதி கிடைக்காமல் வருடக்கணக்கில் சிக்கி உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டவர்கள்...இன்னமும் நிறையப் பேரைப் பட்டியலிடலாம்.

பூதக்கண்ணாடியில்..

இவர்கள் வலிகளை விட நம் வலி பெரிதா? எந்த நம்பிக்கையில் இவர்கள் வாழ்கிறார்களோ, அதே நம்பிக்கை நம்மைக் காக்காதா?

யோசித்துப் பார்த்தால் நம்மில் பலர் சமூகத்தின் 98 சதவீத மக்களை விடச் சிறப்பாக இருக்கிறோம். இந்த உண்மையைப் பெரும்பாலான நேரத்தில் நாம் நினைப்பதில்லை. நம்மிடம் இல்லாததை நினைத்து வேதனை கொள்ளும் மனம் நாம் மற்றவர்களை விடச் சிறப்பாக இருக்கிறோம் என்கிற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது.

இப்படிச் சலித்து எடுத்துப் பிரச்சினைகளைப் பூதக்கண்ணாடியில் வைத்துப் பார்க்கையில் நாம் மலைத்து விடுகிறோம்.

நல்லதே நடக்கும்

போதாக்குறைக்கு, நாம் பேசும் மொழி நம் எண்ணங்களைக் கூர்மைப்படுத்துகிறது.

“இந்த வேலை மாதிரி கஷ்டமான வேலை உலகத்திலேயே கிடையாது!”

“என் அளவுக்கு அடிபட்டவன் யாரும் இருக்க மாட்டான்.”

“என் நிலைமை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது.”

“அது மாதிரி ஒரு சோதனையை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்ததில்லை”

“இந்த மாதிரி ஒரு மோசமான முதலாளி உலகத்திலேயே கிடையாது!”

இப்படிப் பேசப்படும் சொற்களை ஆழ்மனம் பதிவு செய்து கொள்கிறது. பின்னர் இவை மெல்ல நம் சுய மதிப்பைக் குறைக்கின்றன. பின் அடுத்தவர் மதிப்பையும் குறைத்துத் ‘தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று நம்ப வைக்கிறது. எதிர்காலம் சூனியமாகத் தெரியும். பின் தன்னம்பிக்கை மறையும். வாழ்க்கை பற்றிய நம்பிக்கை மறையும்.

அதனால் படித்துவிட்டு வேலை தேடுவோர், வேலை தாவி வேறு வேலை தேடுவோர், வேலைச் சூழ்நிலையில் சிக்கலில் உள்ளவர்கள் என அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

நல்லது நிச்சயம் நடக்கும் என நம்புவது!!

அந்த நம்பிக்கையைத் தரக்கூடிய தெய்வங்கள், மனிதர்கள், புத்தகங்கள், பாடல்கள், வழிமுறைகள், அமைப்புகள், வார்த்தைகள், நடத்தைகள் என அனைத்தையும் தழுவிக்கொள்ளுங்கள்.

சிறு தூசி

ஒரு சோதனைக் காலத்தில் நான் தலைப்பு பார்த்து வாங்கிய புத்தகம் என் சோதனைகளை விட என் வலிமையை உணர்த்தியது. அந்தப் புத்தகத்தின் பெயர்:

“Tough times never last. Tough people do!”

ஆண்டவன் இந்தச் சோதனையை உங்களுக்கு அளித்திருக்கிறான் என்றால் அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை உங்களுக்கு உள்ளது என்கிற காரணத்தில் தான்!

கண்ணில் விழும் தூசி கண் பார்வையையே மறைக்கும். அதைத் துடைத்துப் போடுகையில்தான் தெரியும் அது கண் பார்வைக்குக்கூட அகப்படாத சின்னஞ்சிறிய தூசி என்று.

எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை!

தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024