dinamalar 05.06.2018
'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் குரல் எழுப்பிய அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, இத்தேர்வு எழுதிய, 1.14 லட்சம் பேரில், 45 ஆயிரம் மாணவர் - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்வு நன்றாக எழுதியதன் காரணமாக, டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள, 7,470 மருத்துவ படிப்பு இடங்களுக்கு போட்டியிடும் அளவுக்கு, ஆறு மடங்கு மாணவர்கள் தகுதி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டு வந்தனர். இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தங்களது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தனர். அதனால், டாக்டர்களின் தகுதியும், திறமையும் கேள்விக்குறியானது.
கடும் எதிர்ப்பு :
அதனால், உயிரை காப்பாற்றும் புனித தொழிலான மருத்துவத்தில், தரத்தை உறுதி செய்யும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும். தமிழக மாணவர்களால், மருத்துவம் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள், தமிழக மாணவர்களுக்கான இடங்களை அபகரிப்பர்' என்றெல்லாம், இக்கட்சி கள், மத்திய அரசுக்கு எதிராக, தீவிர பிரசாரம் செய்தன.
இப்பிரச்னை, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதும், 'நீட் தேர்வு கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமானது. இதில், தமிழக அரசு, விலக்கு கேட்டும் கிடைக்கவில்லை. எனவே, நீட் தேர்வுக்கு, தமிழக அரசின் சார்பில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், நீட் தேர்வு, மே, 6ல், நாடு முழுவதும் நடந்தது. இதன் முடிவுகளை நேற்று, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டது. நாடு முழுவதும், தேர்வு எழுதிய, 12.69 லட்சம் பேரில், 56 சதவீதமான, 7.14 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம், 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வில், சென்னை, பத்மசேஷாத்ரி பள்ளி மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 12ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில், 1.14 லட்சம் பேர், நீட் தேர்வை எழுதினர். அவர்களில், 45 ஆயிரத்து, 336 பேர், தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். அதாவது, தேர்வு எழுதியோரில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வாயிலாக,
கவுன்சிலிங் நடத்தப்படும். இதில், மொத்த இடங்களில், 85 சதவீதம், நீட் தேர்ச்சி பெற்ற, தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படும். 85 சதவீத இட ஒதுக்கீட்டில், தோராயமாக, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 3,894 இடங்களும், பி.டி.எஸ்., என்ற, பல் மருத்துவ படிப்புக்கு, 1,880 இடங்களும் என, மொத்தம், 5,774 இடங்கள் உள்ளன.
மேலும், இந்த ஆண்டு முதல், நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள, இந்திய மருத்துவமான - ஆயுஷ் படிப்புகளுக்கு, 1,696 இடங்கள் உள்ளன. எனவே, தமிழக ஒதுக்கீட்டில், மொத்தம், 7,470 மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, இந்த இடங்களை விட, ஆறு மடங்கு அதிகமாக, 45 ஆயிரத்து, 336 மாணவர்கள் போட்டியில் உள்ளனர்.
'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும்; தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகி விடும்' என்றெல்லாம் பிரசாரம் செய்த, கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் காரணமாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்ச்சி மூலமாக, மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அரசு ஒதுக்கீடு :
தமிழகத்தில், நிகர்நிலை பல்கலைகளில், 1,349 மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றுடன், அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., 456 மற்றும் பி.டி.எஸ்., 30 இடங்களையும் சேர்த்து, 1,835 இடங்களிலும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த, மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் சேர முடியும்.
குறைந்த மதிப்பெண் எவ்வளவு?
'நீட்' தேர்வில், மருத்துவ இடங்களில் சேருவதற்கான, 'கட் ஆப்' என்ற, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 'கட் ஆப்' ஒன்பது மதிப்பெண் குறைந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களது இன அடிப்படையில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. இதன்படி, பொதுப் பிரிவினருக்கு, 119 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், 691 மதிப்பெண் வரை, 6.35 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், மாற்றுத் திறனாளிகளுக்கு, குறைந்தபட்சமாக, 107 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கும், குறைந்தபட்ச மதிப்பெண், 96. பிற்படுத்தப்பட்டோரில், 54 ஆயிரத்து, 653 பேர்; தலித் பிரிவில், 17 ஆயிரத்து, 209; பழங்குடியினர், 7,446 பேர், இந்த குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளில், பொதுப் பிரிவினர், 205; பிற்படுத்தப்பட்டோர், 104; தலித், 36; பழங்குடியினர், 12 பேர், தகுதி பெற்றுள்ளனர். இந்த பட்டியலின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர்கள். அவர்களுக்கு, அகில இந்திய தர வரிசை பட்டியலின் படி, மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
No comments:
Post a Comment