Wednesday, June 6, 2018

13 கிலோ மனுக்களை சுமந்து வந்த தாய் - மகன்

Added : ஜூன் 05, 2018 22:23




கடலுார் : கடலுாரில் தாய், மகன் இருவரும், தங்களது நிலத்தை மீட்டுத் தரக்கோரி, 11 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்களின் நகல்களை, மூட்டையாக கட்டி, தலையில் சுமந்து வந்து, கலெக்டரை சந்தித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த கூத்துக்குடியைச் சேர்ந்தவர் மாயவன் மனைவி குண்டுப்பிள்ளை, 62; இவரது மகன் முனுசாமி, 37; விவசாயி. இருவரும் கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு, தலையில் பெரிய மூட்டைகளை சுமந்தபடி வந்தனர். அவர்களை கலெக்டர் தண்டபாணி விசாரணை செய்தார்.

அப்போது அவர்கள் கூறுகையில், 'தங்களுக்கு கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஐவதுகுடியில், 2 ஏக்கர், 4 சென்ட் நிலம் இருந்தது. அந்த இடத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், போலி ஆவணங்கள் தயாரித்து மனைகளாக மாற்றி, விற்றுள்ளனர்.

'அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தரக்கோரி, 11 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லாததால், கொடுத்த அனைத்து மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி துாக்கி வந்தோம்' என்றனர். மனுக்களின் மூட்டை, 13 கிலோ எடை இருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024