ஆர்வக் கோளாறு ஆபத்து!
By ஆசிரியர் | Published on : 26th October 2018 01:46 AM |
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மனித இனத்துக்கு பயன் அளிக்கிறதோ, அதேபோல ஆபத்துகளையும் அழைத்து வருகிறது என்பதை கைப்பட (செல்ஃபி) மரணங்கள் எடுத்துரைக்கின்றன. புகைப்படம் எடுப்பதற்கு கேமராக்கள் உபயோகத்திலிருந்த காலம் மலையேறி, எல்லோரும் அவரவர் கையிலுள்ள அறிதிறன்பேசியில் படம் எடுப்பதும் கைப்படம் மூலம் தங்களைத் தாங்களே படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதில் காணப்படும் ஆபத்து குறித்து கவலைப்படாத மனப்போக்கும் ஏற்பட்டிருப்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் தற்செயல் விளைவுகள் உயிருக்கே உலை வைப்பதாக இருக்கும்போது அது குறித்து கவலைப்படாமல் இருந்துவிட முடியாது.
குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் குறித்த மருத்துவ இதழ் ஒன்று செய்திருக்கும் ஆய்வின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலகளாவிய அளவில் 250 உயிர்கள் கைப்படம் எடுப்பதால் பலியாகியிருப்பதாக தெரிகிறது. தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், கடந்த அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை கைப்பட மரணங்கள் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டது. அதன்படி, உலகிலேயே அதிகமான கைப்பட மரணங்கள் இந்தியாவில்தான் நடந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கைப்பட மரணங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய அந்த ஆய்வு மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. கைப்பட மரணங்களில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள். 2011 முதல் 2017 வரையில் நிகழ்ந்த கைப்பட மரணங்களில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்பு இந்தியாவில்தான் என்கிற திடுக்கிடும் தகவலையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதால், இந்தியாவில் அதிக அளவில் 30 வயதுக்குட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கொண்டாலும்கூட, இவர்களில் பெரும்பாலோர் படித்த, நல்ல வேலையில் இருக்கும் இளம் வயதினர் எனும்போது, நாம் அது குறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது.
அந்த ஆய்வு இன்னொரு தகவலையும் தருகிறது. ஆண்களைவிடப் பெண்கள்தான் கைப்படம் எடுப்பதில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. ஆனால், அப்படி படம் எடுக்கும்போது பெண்கள் கவனமாக இருப்பதாகவும், ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு தங்களது ஆண்மையையும், வீரத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்கிற மனப்போக்கு ஆண்களிடம் அதிகமாகக் காணப்படுவதால் அவர்கள்தான் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதிக அளவிலான கைப்பட மரணங்களில் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம்.
அதிகமான கைப்பட மரணங்களுக்கு தண்ணீரில் மூழ்குவதுதான் காரணமாகத் தெரிகிறது. கடற்கரையோரமாக நின்று கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும், படகுகளில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும் ஆபத்தில் முடிந்து நீரில் மூழ்கி மரணிப்பதற்கு காரணியாகிவிடுகிறது. இரண்டாவது முக்கியமான காரணம், வாகனங்கள். ஓடும் ரயிலுக்கு முன்னால் அல்லது சாலை
களில் நின்றுகொண்டு அல்லது இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற மரணங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சிக்கிக்கொள்கிறார்கள்.
நெருப்பின் மூலமும், உயரமான இடங்களிலிருந்து கீழே விழுவதன் மூலமும் மரணிப்பது கைப்பட மரணங்களில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. சமீபத்தில் கொடிய மிருகங்களுக்கு அருகில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்ததன் விளைவாக வெவ்வேறு நிகழ்வுகளில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது போல கைப்படம் எடுத்துக்கொள்ள முற்பட்ட பலர் இறந்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த ஆய்வின்படி, கைப்பட மரணங்கள் குறித்த புள்ளிவிவரம் முழுமையானதல்ல. பெரும்பாலான நிகழ்வுகள் வெளியில் தெரிவதில்லை அல்லது பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், கைப்பட மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்பது மட்டும் உண்மை.
2011-இல் இந்தியாவில் தெளிவாக பதிவு செய்யப்பட்ட கைப்பட மரணங்கள் வெறும் மூன்று மட்டுமே. 2016-இல் அதுவே 98-ஆக அதிகரித்திருந்தது. 2010-க்குப் பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அதிகரித்ததுடன் கைப்பட மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனுக்குடன் தங்கள் வீர சாகசங்களையும், புகைப்படப் பதிவுகளையும் முகநூலிலும் சுட்டுரையிலும் தங்களது வலைப்பூவிலும் ஏற்ற வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு காரணமாக இளைஞர்கள் மத்தியில் கைப்படம் எடுத்துக்கொள்ளும் போக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. தங்களது புகைப்படங்கள் குறித்த விருப்பங்களையும், கருத்துகளையும் சமூக ஊடக நட்பு வட்டத்தில் பெறுவதில் காட்டப்படும் ஆர்வக் கோளாறு ஆபத்தாக முடிவதில் வியப்பொன்றும் இல்லை.
முக்கியமான சுற்றுலாத் தளங்களிலும், மலை உச்சிகளிலும், உயரமான கட்டடங்களிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் கைப்படம் எடுப்பதற்கு தடை விதித்தால் தவறில்லை என்று தோன்றுகிறது. ரஷியாவில் கடந்த 2015 முதல் பாதுகாப்பான கைப்பட பயன்பாடு குறித்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆர்வக் கோளாறு, உயிரிழப்பில் முடிவது தவிர்க்கப்பட வேண்டும்.