Tuesday, October 3, 2017

தஞ்சை அருகே, 'ஆளில்லா கடை' காந்தி ஜெயந்தியில் மட்டும் திறப்பு
பதிவு செய்த நாள்03அக்
2017
00:09

தஞ்சாவூர்:'அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக, தஞ்சை அருகே, காந்தி ஜெயந்தியான நேற்று மட்டும், 'ஆளில்லா கடை' திறக்கப்பட்டது.காந்தி ஜெயந்தியான நேற்று, தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், திறக்கப்பட்ட ஆளில்லா கடையில், வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவை, விலை அச்சிடப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.கடையில் பொருட்கள் வாங்குவோர், பொருளை எடுத்து, அதற்குரிய தொகையை, அங்குள்ள டப்பாவில் போட்டு சென்றனர். சிலர் பணத்தை போட்டு, மீதி சில்லரையை எடுத்துக் கொண்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த, ரோட்டரி சங்க தலைவர், பக்ருதீன் அலி அகமது கூறியதாவது:'நேர்மை, உண்மை, நம்பிக்கை நிறைந்த இந்தியா உருவாக வேண்டும்' என, காந்தி கனவு கண்டார். அவர் கண்ட கனவை நனவாக்க, காந்தி ஜெயந்தியன்று மட்டும், இந்த ஆளில்லா கடை திறக்கப்படுகிறது. 16 ஆண்டுகளாக, லாப நோக்கம் இல்லாமல், நேர்மையை மட்டுமே நோக்கமாக கொண்டு, இந்த கடை திறக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கிண்டி ரயில் நிலையத்தில் திருநங்கையரால் தொல்லை

பதிவு செய்த நாள்03அக்
2017
00:06

'கிண்டி ரயில் நிலையத்தில், திருநங்கையர் பிரச்னையால், பயணியர் அவஸ்தைப்படுவதை தடுக்க, இரவு நேரத்தில், கடைசி ரயில் செல்லும் வரை, பாதுகாப்பு வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே, கிண்டி புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் இருந்து, தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். நிலைய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் இரு வழிகளை தவிர, மற்ற வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆண் பயணியர் இரவு நேரத்தில், பிளாட்பாரத்தின் தெற்கு பக்கம் வழியாக, தண்டவாளத்தில் நடந்து, பாதுகாப்பு சுற்றுச்சுவரில் ஏறி குதித்து செல்வது தொடர்கிறது. இவர்களாலும், திருநங்கையராலும், இரவு நேரத்தில், பெண் பயணியர் அவஸ்தைப்படும் நிலை உள்ளது.இது குறித்து, பெண் பயணியர் கூறியதாவது:

ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிச்செல்வதற்காக, பிளாட்பாரத்தின் தெற்கு பக்கம் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், இப்பகுதியின் இருட்டான இடங்களில், ஆண் பயணியர் - திருநங்கையர் அட்டகாசத்தால், பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது.தெற்கு பக்கம் தண்டவாளம் வழியாக வீடுகளுக்கு செல்வது போல, பாவனை காட்டும் ஆண்களாலும், அவர்களின் நண்பர்களை போல நடந்து கொள்ளும் திருநங்கையராலும், அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது.இரவு நேரத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர். தொடர்ந்து நிலையத்தில் இருப்பதில்லை; ரயில்களில் ஏறிச்சென்று விடுகின்றனர்.இந்நிலையால், கிண்டி ரயில் நிலையத்தில், இரவு, 9:00 மணிக்கு மேல், திருநங்கையர் இருட்டில் நடமாடுவதும், அவர்களிடம் ஆண்கள், 'குடி'மகன்களின் அத்து மீறல்களும் தொடர்கிறது.கிண்டி ரயில் நிலையத்தில், இரவு, 9:00 மணியில் இருந்து, கடைசி மின்சார ரயில் செல்லும், அதிகாலை, 12:20 மணி வரையும், நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடந்து பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
80 சதவீத, 'ஏசி' பேருந்துகள் ஏலம்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:02

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்ட, 80 சதவீத, 'ஏசி' பேருந்துகள் ஏலம் விடப்பட்டுள்ளன.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 2010ம் ஆண்டு, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் நேரு, 100 வால்வோ, 'ஏசி' பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்.அவற்றில் சரி பாதியாக பிரித்து, அண்ணாநகர், அடையாறு பணிமனைகளுக்கு வழங்கினார்.அப்போது, அந்த பேருந்துகளின் பராமரிப்பை, அந்த நிறுவனத்தால் மட்டுமே மேற்கொள்வது என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்உதிரிபாகங்களின் விலை, பராமரிப்பு செலவு,நம் நாட்டு பேருந்துநிறுவன செலவுகளை விட அதிகம்.அதனால், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், அந்த பேருந்துகளை பராமரிக்க, உள்ளூர் தயாரிப்பு உதிரி பாகங்களை உபயோகித்தனர்.இதனால், புதிதாக பொருத்தப்பட்ட உதிரி பாகத்துடன் தொடர்புடைய அனைத்து பாகங்களும், விரைவில் பழுதடைந்தன.இதனால், பேருந்துகளின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோடையில் கூட, 'ஏசி' பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.தற்போது, அடையாறு பணிமனையில், 35 பேருந்துகளும், அண்ணாநகர் பணிமனையில், 45 பேருந்துகளும் இயக்க முடியாதவை என ஒதுக்கப்பட்டு, அவை ஏலம் விடப்பட்டு உள்ளன.




1 கிலோ 10 ரூபாய்! தக்காளி விலை சரிவு
பதிவு செய்த நாள்03அக்
2017
00:01

வரத்து அதிகரிப்பின் காரணமாக, சென்னையில், 1 கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, கோவை மாவட்டங்களில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தின் தேவைக்காக, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வரத்து உள்ளது. தற்போது, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தக்காளி விளைச்சல் களை கட்டி வருகிறது. இதன் எதிரொலியாக, அவை அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேட்டிற்கு மட்டும், நாள்தோறும், 60க்கும் மேற்பட்ட லாரிகளில், தக்காளி வரத்து உள்ளது.வரத்து அதிகரிப்பால், அவற்றின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 1 கிலோ தக்காளி, சில்லரை விலையில், 10 - 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -
தீபாவளிக்கு முன் புதிய ஊதியம் வேண்டும் 'ஜாக்டோ - ஜியோ கிராப்' வலியுறுத்தல்
பதிவு செய்த நாள்02அக்
2017
22:25

சென்னை:'தீபாவளி பண்டிகைக்கு முன், புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பினர் வலியுறுத்தினர்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவால், போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, செப்., 27ல், தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதன்படி, விரைவில் ஊதிய உயர்வை அறிவிக்க உள்ளது.அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பின் நிர்வாகிகள் சண்முகராஜன், இளங்கோவன், கணேசன் உள்ளிட்டோர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.
இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன் கூறியதாவது:முதல்வர் அறிவித்தபடி, ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்த குழுவிடம், தமிழக அரசு அறிக்கை பெற்றுள்ளது. இதற்காக, முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ஊதியக்குழு பரிந்துரைப்படி, இந்த மாதம் முதல் புதிய ஊதியம் வழங்க வேண்டும்; இதற்கான அறிவிப்பை, தீபாவளிக்கு முன் வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். தாமதமானால் இடைக்கால நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என, மனு கொடுத்துஉள்ளோம்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நவ.,௩௦க்குள், இதுகுறித்த ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். 

மேலும், 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பு சார்பில், சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழிக்க, மாநாடு நடத்த உள்ளோம். இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.



விடுமுறை ஜாலிதான் ஆனால் பயணம்தான் கொடுமை:புலம்பி தள்ளும் குமரி மாவட்ட மக்கள்

பதிவு செய்த நாள்02அக்
2017
19:41

நாகர்கோவில்: விடுமுறை வந்தால் ஊருக்கு வருவது ஜாலிதான், ஆனால் ஊருக்கு வருவதும், திரும்பி செல்வதும்தான் கொடுமையாக உள்ளது என்று குமரி மாவட்ட பயணிகள் புலம்புகின்றனர்.

தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்ட மக்கள் படிப்பு, வேலைக்காக சென்னையில் அதிக அளவில் தங்குகின்றனர். இது போல கோவை, திருச்சியிலும் வசிக்கின்றனர். மேலும் மருத்துவம், இஞ்ஜினியரிங் படிப்புக்காக மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கின்றனர் விடுமுறை என்றாலே சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் வரும் போதும், திருப்பி செல்லும் போதும் போதுமான பயண வசதி இல்லாததால் பயணம் மிகவும் கொடுமையாக உள்ளது என்று பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்,
ரயில் என்றால் சென்னை செல்ல கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளது. பகல் நேர ரயிலாக குருவாயூர் சென்னை ரயில் உள்ளது. அடுத்து பயணிகள் முக்கியமாக நம்பியிருப்பது ஆம்னி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களைதான். ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம். அரசு பஸ்களில் பயண நேரம் அதிகம். ரயிலில் இடம் கிடைப்பது மிகவும் சிரமம். இதனால் சிரமப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

காலாண்டு விடுமுறையுடன் 4 நாள் அரசு விடுமுறை இணைந்து வந்ததால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கியிருந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்றும், நேற்று முன்தினமும் இவர்கள் திரும்பி சென்றனர். இதனால் பஸ்ஸ்டாண்டுகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான பஸ்களுடன், 112 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. எனினும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

நாகர்கோவில் ரயில் நிலையம் திருவனந்தபுரம் மண்டலத்தில் உள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் குமரி மாவட்ட மக்களின் தேவை பற்றி தெரிந்து கொள்வதில்லை. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. கூடுதல் ரயி்லகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.
22 இந்தியரை விடுதலை செய்ய குவைத் அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்02அக்
2017
23:13

புதுடில்லி;குவைத் அரசின் தண்டனை குறைப்பு நடவடிக்கையால் பலனடைந்துள்ள, இந்தியர்கள், 22 பேரை, உடனடியாக விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில், ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இந்தியர்கள், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியர்கள், 15 பேரின் மரண தண்டனையை, சமீபத்தில், ஆயுள் தண்டனையாக குறைத்த, குவைத் அரசு, மேலும், 119 இந்திய கைதிகளின் தண்டனையை குறைத்துள்ளது.அவர்களில், 53 பேரின் ஆயுள் தண்டனை, 20 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.தண்டனை குறைப்பு நடவடிக்கையால் பலனடைந்துள்ள, இந்தியர்கள், 22 பேரை, உடனடியாக விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் அரசின் நடவடிக்கைக்கு, மத்திய அரசு நன்றி தெரிவித்து உள்ளது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:குவைத் சிறையிலிருந்து விடுவிக்கப்படும், இந்தியர்கள் நாடு திரும்ப, மத்திய அரசின் சார்பில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். அதே போல், அந்நாட்டு சிறையில் வாடும் இந்தியர்கள், மீதமுள்ள தண்டனை காலத்தை, நம் நாட்டு சிறையில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 04.06.2026