Sunday, August 12, 2018

கடலூரில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : ஆக 12, 2018 01:04

கடலுார்: கடலுார் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடலுார் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகி தேர்தல் நடந்தது. 6 பேர் கொண்ட தேர்தல் நடந்தும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் காலை வேட்பு மனு, பரிசீலனை என வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினர்.அதனைத் தொடர்ந்து இறுதியில் போட்டியின்றி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மாசிலாமணி, செயலராக சீத்தாராமன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலர்களாக சந்தானகிருஷ்ணன், சிவகாமசுந்தரி ஆகியோரும், நுாலகராக பூபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆக.14,16,23 தேதிகளில் சபரிமலை நடை திறப்பு

Added : ஆக 12, 2018 04:39

சபரிமலை:நிறைபுத்தரிசி, ஆவணி மற்றும் ஓண பூஜைகளுக்காக சபரிமலை நடை இந்த மாதம் மூன்று முறை திறக்கப்படுகிறது.

நிறைபுத்தரிசி பூஜைக்காக ஆக.,14- மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். 15-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:00 முதல் 6:30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு இதை நடத்துவார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி பூஜை

ஆவணி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்பார். 17ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கும். 21ம் தேதி வரை எல்லா நாட்களிலும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படிபூஜை போன்றவை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஓணபூஜை

திருவோண பூஜைகளுக்காக 23-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை 27-ம் தேதி இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நாட்களிலும் வழக்கமான எல்லா பூஜைகளுடன், திருவேணத்தை ஒட்டி மூன்று நாட்கள் ஓணவிருந்து நடைபெறும்.

புல்லட் ரயில்! 


சென்னை - மும்பை உட்பட 6 புதிய வழித்தடங்கள் தேர்வு
சாத்தியங்களை ஆய்வு செய்வதாக லோக்சபாவில் தகவல் 


dinamalar 12.08.2018

புதுடில்லி: சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில், ஆறு வழித்தடங்களில், புல்லட் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக, லோக்சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது.



மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, குஜராத்தின் ஆமதாபாத் இடையே, ஜப்பான் நாட்டின் உதவியுடன், புல்லட் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டம், 2022 ஆகஸ்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மும்பை - ஆமதாபாத் இடையிலான ரயில் பயணத்துக்கு, தற்போது, ஏழு மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயில் மூலம் செல்வதற்கு, இரண்டு மணி நேரமே ஆகும்.மும்பை - ஆமதாபாத் இடையே, புல்லட் ரயில் திட்டத்துக்கு, ஜே.ஐ.சி.ஏ., எனப்படும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜன்சி, 88 ஆயிரம் கோடி ரூபாயை, குறைந்த வட்டி கடனாக அளிக்கிறது.

ரூ.1.10 லட்சம் கோடி :

இந்த தொகையை, 50 ஆண்டுகளில், 0.1 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தினால் போதும். கடனுக்கான முதல் தவணையை, 15 ஆண்டுகளுக்கு பின் செலுத்தத் துவங்கலாம். இந்த திட்டத்துக்கு, 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களை, புல்லட் ரயில் சேவை மூலம் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதன்படி, டில்லி - மும்பை; டில்லி - கோல்கட்டா; மும்பை - சென்னை ஆகிய வழித் தடங்களில் புல்லட் ரயில் திட்டத்தை துவக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

திட்டம் :

மேலும், டில்லி - நாக்பூர் - சென்னை; மும்பை - நாக்பூர் - கோல்கட்டா; சென்னை - பெங்களூரு - மைசூரு ஆகிய வழித்தடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.'ஆய்வுகள் முடிந்த பின், புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும்' என, அரசு அதிகாரிகள் கூறிஉள்ளனர்.முக்கிய நகரங்களை புல்லட் ரயில் மூலம் இணைக்கும் திட்டம் தொடர்பாக, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை, மத்திய அரசு நாடியுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே ஸ்டேஷன்களில், 'டிஜிட்டல் மியூசியம்':

சமீபத்தில், ரயில்வே டிவிஷனல் மேலாளர்கள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே வாரிய இயக்குனர், சுப்ரதா நாத், 8ல், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும், 22 ரயில்வே ஸ்டேஷன்களில், சுதந்திர தினத்தன்று, டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளன.ரயில்வே ஸ்டேஷன்களின் சுவர்களில், டிஜிட்டல் அருங்காட்சியகங்களை எளிதில் அமைத்து விட முடியும். எனவே, டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க, முதலீடுகள் தேவை இல்லை. ரயில்வே அருங்காட்சியகத்தில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வரலாற்றையும், நடப்பு நிலவரங்களையும் காட்சிப்படுத்த முடியும்.டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் அமையவுள்ள, 22 ரயில்வே ஸ்டேஷன்களில், 'டிஜிட்டல் மல்டிமீடியா' திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹவுரா, லக்னோ, வாரணாசி, ரேபரேலி, டில்லி, ஜெய்ப்பூர், ஈரோடு, கோவை, செகந்திராபாத், விஜயவாடா, பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில், டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை




இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நேற்று மீண்டும் நிரம்பியதால், அணையில் இருந்து வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:45 AM மேட்டூர்,

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த மாதம் நிரம்பின.

இதனால் அந்த அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த மாதம் 23-ந் தேதி பகல் 12 மணிக்கு அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் 84 ஆண்டுகால வரலாற்றில் 39-வது ஆண்டாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் அவற்றில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், கடந்த இரு வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை மீண்டும் தீவிரம் அடைந்தது. இதைத்தொடர்ந்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் மீண்டும் நிரம்பியதால், அவற்றில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 233 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருபுறமும் கரைகளை தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. நேற்று இந்த உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 519 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் அருவி பகுதி 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்ததை அடுத்து, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் 116.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 119 அடியாக உயர்ந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் அணையையொட்டி உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும், ஒரு லட்சத்து ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 23-ந் தேதி முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில், இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி உள்ளது.

அணையின் வரலாற்றில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு, 2005-ம் ஆண்டில் 4 முறையும், கடந்த 2007-ம் ஆண்டில் 5 முறையும் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையொட்டி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் ஆகியோர் நேரில் வந்து அணையை பார்வையிட்டனர்.

நீர்வரத்து அதிகரித்ததையொட்டி, அணை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அணையின் வலதுகரை, இடதுகரை, 16 கண் பாலம் உள்பட முக்கிய பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணை மீண்டும் நிரம்பியதால், 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று அங்கு வந்தனர்.

16 கண் பாலத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும், பாதையையொட்டி உள்ள 2 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அங்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்கமாபுரி பட்டணம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய செய்திகள்

நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர் : கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா



கனமழையால் கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்–மந்திரி பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:15 AM

திருவனந்தபுரம்,

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பெரியாறு ஆற்றின் கரையோரம் வசித்து வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர், ஆலுவா, கனயன்னூர், குன்னத்நாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து 5 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் செருதோணி ஊருக்குள் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள பாலம், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆற்றின் கரையோரத்தில் இருந்த ஏராளமான கடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இடுக்கி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், தற்போது மழை குறைந்துள்ளதாலும் இடுக்கி அணையின் நீர் மட்டம் சற்று குறைந்துள்ளது. ஆலுவாவில் பெரியாறு ஆற்றின் கரையோரம் உள்ள பிரபல சிவன் கோவிலின் பெரும் பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. ஆற்றின் காரையோரம் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க 3 படகுகள், 20 உயிர்காக்கும் படகுகள், உயிர் காக்கும் ஆடை, சிறப்பு கயிறு பயன்படுத்தப்படுகிறது.




மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 32 பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநில முதல்–மந்திரி பினராயி விஜயன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, வருவாய்த்துறை மந்திரி சந்திரசேகரன், மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், தலைமை போலீஸ் அதிகாரி லோக்நாத் பெஹாரா ஆகியோர் நேற்று ஒரே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் பினராயி விஜயன் நிவாரண முகாம்களுக்கு சென்றும் பார்வையிட்டார். அத்துடன் கலெக்டர் அலுவலகம் சென்று உயர் அதிகாரிகளுடன் பினராயி விஜயன் வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினார்.

மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில் வழக்கம் போல் விமான சேவை தொடருவதாகவும், எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்துள்ள மழை, கேரளாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர். எனவே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும். இந்த வேதனையான தருணத்தில் எனது வேண்டுதல்களும், சிந்தனைகளும் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் குடும்பங்களைப் பற்றியே உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இன்னொரு பதிவில், மாநில அரசுடன் மத்திய அரசு நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளில் ஒத்துழைத்து செயல்படும் என்று நம்புகிறேன். வெள்ள நிவாரண பணிகளுக்காக கேரளாவுக்கு போதிய நிதி உதவியை பிரதமர் மோடி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேரளா வருகிறார்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே இன்னும் 4 நாட்களுக்கு கனத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
தேசிய செய்திகள்

ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது : ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு



ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரத்து செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:30 AM
புதுடெல்லி,

டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தின் கீழ், ரெயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

இதைப்போல ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது என ரெயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் இனிமேல் விருப்ப தேர்வாக அமைகிறது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.

இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விவரம் குறித்து இன்னும் சில நாட்களில் ரெயில்வேத்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணத்தை ரெயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



Court orders on Grace Marks in MBBS

மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண் ரத்து செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள்: ஆக் 12,2018 01:57

சென்னை:மருத்துவ தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய, விதிகளில் திருத்தம் கொண்டு வர, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லுாரி மாணவர்கள், தோல்வியடைந்த பாடத்தில், தங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும், மருத்துவ படிப்பை முடிக்க அனுமதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, ஐந்து மதிப்பெண்கள் வரை, கருணை அடிப்படையில் வழங்கலாம்; அதுவும், கருணை மதிப்பெண் வழங்குவது, பல்கலையின் தனிப்பட்ட உரிமை. அந்த மாணவன், ஒரு பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்து, மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு முறைக்கு மேல் தேர்வு எழுதுபவர்களுக்கு, கருணை மதிப்பெண் பெற உரிமை இல்லை.கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி, உரிமை கோர முடியாது. 

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மருத்துவ மாணவனிடம், மதிப்பெண் வழங்கியவரின் குடும்பத்தினரை, சிகிச்சைக்கு செல்லும்படி கூற வேண்டும். மருத்துவ கவுன்சில் விதிமுறைகள், சட்டத்தை மீறியதாக இருந்தால் ஒழிய, அதில் மாற்றம் செய்ய முடியாது.எனவே, கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி, பல்கலையிடம், மாணவர்கள் உரிமை கோர முடியாது. செய்முறை தேர்வுக்கும், கருணை மதிப்பெண் வழங்க முடியாது. 

அதனால், கருணை மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்பது நியாயமற்றது.டாக்டர்கள், மருத்துவ மனைகள், காளான்கள் போல பெருகி வருகின்றன. உண்மையான டாக்டர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை, நோயாளிகளுக்கு ஒரு நாள் ஏற்படும். எனவே, டாக்டர்களாக பதிவு செய்வதை, அவ்வப்போது, மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் மற்றும் இதர அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அப்போது தான், முறையான டாக்டர்கள் வருவர்.

கருணை மதிப்பெண் வழங்குவதை ரத்து செய்ய, விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. கருணை மதிப்பெண் வழங்குவது, பல்கலையின் தனிப்பட்ட உரிமை தான் என, விதிகளில் தெளிவாக கூறியிருந்தாலும், தனிப்பட்ட உரிமை என்ற வார்த்தையை, மாணவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிப்பர்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

NEWS TODAY 28.06.2026