Saturday, April 20, 2019

தேர்தல் நடத்தை விதிகள் தொடரும் 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 20.04.2019

சென்னை:''நான்கு சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன. தேர்தல் நடக்கும் மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில், நடத்தை விதிகளை தளர்த்து வதாக இருந்தால், முறைப்படி அறிவிக்கப் படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், நேற்று முன் தினம் தேர்தல் நடந்தது. வேலுார் லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்படவில்லை.

மேலும், காலியாக உள்ள, துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம்; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்; கரூர் மாவட்டம்,

அரவக்குறிச்சி; கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் தேர்தல் நடக்க உள்ளது.எனவே, தமிழகம் முழுவதும், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

ஏப்.,18ல் தேர்தல் முடிந்ததும், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இடைத்தேர்தல் காரணமாக, விதிகள் தளர்த்தப்படவில்லை.கோடை காலம் என்பதால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு பணிகளை, அரசு மேற்கொள்ள வேண்டி உள்ளது.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் கூட நடத்த முடியாத நிலை உள்ளது.நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டால், அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடத்தவும், குடிநீர் திட்டப் பணிகளை துவக்கவும் வசதியாக இருக்கும்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியதாவது:இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகள் அமைந்துள்ள, துாத்துக்குடி, மதுரை, கரூர், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில், பறக்கும் படை வாகன சோதனை தொடரும்.அதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள

பறக்கும் படைகள் தொடர்கின்றன.நான்கு மாவட்டங்கள் தவிர, மற்ற பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து, தேர்தல் ஆணையத்திலிருந்து தகவல் வரவில்லை; வந்தால் தெரிவிக்கப்படும். அதேபோல, முறைப்படி அறிவிப்பு வரும் வரை, பறக்கும் படைகள் பணிகளை தொடரும்.

தேர்தலையொட்டி, பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த, பணம் மற்றும் பொருளுக்குரியோர், அதற்கான ஆதாரங்களை காண்பித்து, பெற்று செல்லலாம். வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக, அவர்கள் உரிய விசாரணை மேற்கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024