Saturday, April 20, 2019

மனநல பாதிப்பா: துாக்கிலிருந்து தப்பலாம்

Added : ஏப் 19, 2019 21:55

புதுடில்லி, 'துாக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிக்கு, மனநல பாதிப்பு ஏற்பட்டால், அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒருவனுக்கு, இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், 2001ல், விசாரணை கோர்ட், துாக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.அந்த நபர் தாக்கல் செய்த, சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவனுக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், துாக்கு தண்டனைக்கு ஆளான நபர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்த நபருக்கு, மனநல பாதிப்பு ஏற்பட்டுஉள்ளதாகவும், அதனால், தண்டனையை குறைக்கும்படியும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதிகள், ரமணா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:மனநிலை பாதிப்புக்கு ஆளான நபருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது, அரசியல் சட்டத்தின், 21வது பிரிவை மீறுவதாக அமையும். இப்படிப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்.

மனநிலை பாதிக்கப்பட்ட நபருக்கு, கொடூரமான அல்லது வழக்கத்துக்கு மாறான தண்டனையை நிறைவேற்றுவது இல்லை என, சர்வதேச சட்ட அமைப்பில், இந்தியா, உறுதி அளித்துள்ளது.அதே நேரத்தில், துாக்கு தண்டனைக்கு ஆளானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டதாக பொய் கூறி, தண்டனையிலிருந்து தப்பித்து விடக் கூடாது. சட்டத்தை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது.இது தொடர்பாக, தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு, மருத்துவ நிபுணர்கள் குழு, உரிய சோதனை நடத்தி, உண்மையிலேயே, அந்த நபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024