Thursday, April 18, 2019

சென்னை – சேலம் எட்டுவழி சாலைத் திட்டம்: தீர்ப்பு உணர்த்தும் படிப்பினை

Published : 17 Apr 2019 08:27 IST

சென்னை - சேலம் எட்டுவழி விரைவு நெடுஞ்சாலை உத்தேச திட்டம் தொடர்பாக நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்துசெய்து தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இத்திட்டத்தை முன்மொழிந்த முதல்வர் கே.பழனிசாமிக்கு இது அரசியல்ரீதியாக பின்னடைவு. இந்தத் திட்டம் தொடர்பான எல்லா விமர்சனங்களையும் தடுக்கவும், போராட்டங்களை ஒடுக்கவும் அவருடைய அரசு என்னவெல்லாம் செய்தது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதுடன் சாடியும் இருக்கிறது.

புதிய திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை ‘இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்’ ஆராய்ந்து அறிக்கை தயாரிக்காமல், நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்பது நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மூலம் உணர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அதனால் நிலம், நீர், காற்று, உயிரினங்கள், தாவரங்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆராய்ந்து மதிப்பிட்டாக வேண்டும் என்கிறது தீர்ப்பு. சதுப்பு நிலங்கள், செழிப்பான பண்ணைகள், காப்புக் காடுகள், நீர்நிலைகள் வழியாகச் செல்ல வேண்டியிருக்கும் நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முற்பட்டுள்ளன.

மத்திய அரசின் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தில் இந்த எட்டுவழிச்சாலை திட்டம் இல்லவே இல்லை என்பதும் இத்தீர்ப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது. ‘பாரத்மாலா-1’ திட்டத்தில் ஒப்புதல் பெற்ற சாலைத் திட்டத்தில் சென்னை-சேலம் எட்டுவழி விரைவுச் சாலை இல்லை; ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்ட சென்னை-மதுரை நெடுஞ்சாலைத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது, இந்தத் திட்டம் ஏன் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது பதிலில் கூறவேயில்லை. சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் சென்னை-சேலம் நெடுஞ்சாலையைவிட வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். இந்த மாற்றத்தை ‘கொள்கை முடிவு’ என்று அரசு கூறியிருப்பது சரியான விளக்கமல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தில், தான் கடைப்பிடித்த நடைமுறைகள் எந்தவித சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டது என்று நீதிமன்றத்தை நம்பவைக்க மத்திய அரசும் தவறிவிட்டது.

இனியாவது இத்தகைய சாலைத் திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஆராய வேண்டும். மக்களின் கண் வழி வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024