Thursday, April 18, 2019

தமிழகத்தில் இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?- ஒரு உளவியல் பார்வை

Published : 17 Apr 2019 22:13 IST

மு.அப்துல் முத்தலீஃப்

தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் உள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம் வாக்காளர்கள் 2.65 கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலாக உள்ளதால் அவர்கள் மனநிலை என்ன என்பது குறித்த ஒரு உளவியல் பார்வை.

இந்த தேர்தல் என்ன ஸ்பெஷல்? 18, 19 வயது வாக்காளர்கள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். 20 லிருந்து 29 வயதுள்ள வாக்காளர்கள்: 1 கோடியே 18.5 லட்சம் பேர், 30 லிருந்து 39 வயதுள்ள வாக்காளர்கள்: 1 கோடியே 38.5 லட்சம் பேர். மொத்தமாக இளம் வாக்காளர்கள் 2.69 கோடிபேர். இவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்கிற பதைபதைப்பை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காணமுடிகிறது.

அதற்கு முன் ஒரு தகவல், ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லாத தேர்தல். அதன் அர்த்தம் என்னவென்றால் தலைவர்கள் இல்லாமல் பிரச்சினைகள் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது என்பதே யதார்த்தம்.

முற்றிலும் புதிதாக பிரச்சினைகள் அடிப்படையில் இந்தத்தேர்தல் நடக்கிறது. புதிதாக கட்சிகள் களத்தில் சவாலாக நிற்கின்றன. ஆகவே வழக்கமான கட்சிகள், கூட்டணிகளுக்கு வாக்குகளா? பிரச்சினை அடிப்படையில் வாக்குகளா? என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் உள்ளது.


பொதுவான வாக்காளர்கள் 50 சதவீதத்தினர் உள்ளனர். பணத்துக்கு வாக்களிப்பது, பாரம்பரிய கட்சிக்கு வாக்களிப்பது, போன முறை இவரா இந்த முறை இவருக்கு போடலாம் என்கிற மனநிலை என இவர்களை கூறலாம். ஆனால் மறுபுறம் 45 சதவீதம் இருக்கிறார்களே இளம் வாக்காளர்கள் அவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக இருக்க போகிறார்கள்.

ஒன்று வெற்றியை தீர்மானிக்கும் வாக்காக இருக்கப்போகிறார்கள் அல்லது வாக்குகளை பிரிப்பதன்மூலம் வெற்றி பெறுபவர்களை பாதிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள். இவர்களை ஏன் குறிவைத்து எழுதவேண்டும் என்பதற்கு இரண்டு வகையில் பதில் அளிக்கலாம். ஒன்று இன்றுள்ள புறக்காரணிகள் மற்றும் உளவியல் ரீதியான அணுகு முறைகள்.

அதற்கு முன் இளம் வாக்காளர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதைப்பார்ப்போம்.

பாரம்பரியமாக குடும்பமே ஒரு கட்சி சார்ந்து இருக்கும். இவரும் அதைப்பின்பற்றி வாக்களிப்பார்.

ரசிகராக இருப்பார் தனது அபிமான நடிகருக்காக வாக்களிப்பார்.

சில அரசியல்வாதிகளை பிடிக்காது அதனால் எதிர்முகாமில் உள்ளவருக்கு வாக்களிப்பார்.

யாராவது புதிதாக சீரிய கருத்துக்களை பேசுவார் அவருக்கு வாக்களிப்பார்.

அரசியலே வேண்டாம் என வீட்டில் படுத்து தூங்குவார்.

கடந்த சில ஆண்டுகளாக நோட்டாவுக்கு போடுகிறார்கள்.

இப்போது புறக்காரணிகளுக்கு வருவோம்.

புறக்காரணிகள்:

60 களில் 70 களில் 80 களில் அப்போது இருந்த இளைஞர்களுக்கு இருந்த மிகப்பெரிய தகவல் தொடர்பே தெருவோர கூட்டம், பொதுக்கூட்டம், சினிமா, பேப்பர் செய்தி மட்டுமே.

அதன் பின்னர் வந்த காலக்கட்டங்களில் தொலைக்காட்சிகள் பிரச்சாரத்தை கொண்டுச் சேர்ப்பதிலும், கருத்தை உருவாக்குவதிலும் பங்கு வகித்தன. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் ஆளுமை செலுத்தியதும் உண்டு.

அனைத்தையும் அடுத்தடுத்த நொடியில் அலசவும், மற்ற மாநில, மற்ற நாட்டு அரசியலுடன் ஒப்பிடும் வசதிகளும் நம் பாக்கெட்டில் உள்ள செல்போனுக்குள் வந்தப்பின்னர் இன்றைய இளம் தலைமுறையினர் பார்வையும் மாறித்தான் போயுள்ளது.

எங்களுக்கு கற்றுத்தராதீர்கள் என்கிற மனோபாவத்துடன் ஆனால் அது விஷய ஞானமில்லா எண்ணமல்ல எல்லாம் அறிந்து வருகிறோம் என்கிற நிலையுடன் இருக்கும் இளம் தலைமுறை உள்ளது.

உளவியல் பார்வை:

உளவியல் ரீதியாக இன்றை இளம் வாக்காளர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் மன நிலை எப்படி இருக்கும் உளவியல் நிபுணராக எப்படி பார்க்கிறீர்கள்?

இளம் வாக்காளர்களைப் பொருத்தவரை நிறைய விழிப்புணர்வு உள்ளது. நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கூகுள், சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமானோர் அரசியலில் தங்களை அறியாமல் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

இன்றைய இளம் வாக்காளர்கள் இன்றைய அரசியலுக்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர வாய்ப்புள்ளது. நான் பேசியவரை நிறைய இளைஞர்கள் வழக்கமான கட்சிகளைவிட புதிதாக பல கருத்துக்களை பேசும் கட்சிகளை விரும்பும் மன நிலையில் உள்ளனர். இந்த தேர்தல் இந்திய அளவில் நடக்கும் தேர்தலாக இருந்தாலும்கூட மாநில அளவில் புதிதாக கருத்துக்கூறும் கட்சிகளை ஆதரித்தால் என்ன என்கிற ரிஸ்க் எடுக்கும் மன நிலையில் உள்ளனர்.

வழக்கமாக பெற்றோர் கூறும் கட்சிக்கு வாக்களிப்பது, குடும்பமே கட்சி சார்ந்து இருப்பது இப்படிப்பட்ட மனநிலையில் தானே இருப்பார்கள்?

நீங்கள் சொல்லும் மன நிலையில் எந்த இளைஞரும் இன்று இல்லை. தந்தை ஒருவர் நான் இந்த கட்சிக்கு ஓட்டுப்போடுகிறேன் நீயும் அதற்கு போடு என்று சொன்னால் ‘முடியாது அப்பா நான் என் மனதுக்கு உகந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பேன்’ என்று மறுக்கிற மன நிலையில்தான் உள்ளனர்.

அப்படிப்பட்ட இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் முன் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இல்லை. அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது. அப்படியே தந்தையின் மன நிலைக்கு ஏற்ப வாக்களிக்கும் மன நிலை வருவது 10 அல்லது 20 சதவீதம் இருந்தால் பெரிய விஷயம். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு தங்கள் எண்ணப்படி வாக்களிக்கும் மன நிலையில்தான் உள்ளனர்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம் வாக்காளர்கள் இப்போதுள்ள இளம் வாக்காளர்கள் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?

அப்போதிருந்த இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறைவு, அறிவை விசாலப்படுத்தும் விஷயங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிரிண்ட், தொலைக்காட்சி, சோஷியல் மீடியாவிலும் சரி, நாம் யாரை தேர்வு செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு நிறைய உள்ளது.

என்ன காரணிகளால் இளம் வாக்காளர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

என்ன காரணி என்றால் அவர்களின் தேடலில் கிடைக்கும் விழிப்புணர்வுதான் முக்கிய காரணியாக இருக்கமுடியும்.

விழிப்புணர்வு அந்த காலத்திலும் இல்லாமலா இருந்தது?

இருந்தது ஆனால் ஏற்கெனவே கூறியதுபோல் அறிவு விசாலத்துக்கான வாய்ப்புகள் குறைவு அல்லவா? அன்றைய இளம்தலைமுறையினருக்கு கிடைத்தது காலையில் பேப்பர், மாலையில் செய்தியில்மட்டுமே அல்லவா கிடைத்தது.

இன்று அப்படி அல்லவே, 24 மணி நேரமும் செல்போனிலும், நம்மைச்சுற்றியும் வாட்ஸ் அப், சமூக வலைதளம், செய்தி தளம், காட்சி ஊடகங்கள், கூகுள் தேடல்கள் என பல வகைகளிலும் அவர்களுக்கான அனைத்தையும் அவர்கள் அறியாமலே பார்த்து முடிவு செய்கிறார்களே, அந்த வாய்ப்பு அன்று இல்லை.

முன்னர் நிதானமான அணுகுமுறை இருந்தது, தற்போதுள்ள இளம் வாக்காளர்கள் அப்படி இல்லையே?

அதைத்தான் நானும் சொல்கிறேன், முன்னர் அவர்கள் மனதில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இந்த கட்சிக்குத்தான் போடப்போகிறோம் என்று. ஆனால் இன்று அப்படியல்ல நிமிடத்திற்கு நிமிடம் அனைவரின் இமேஜும் மாறுகிறது. காலையில் அவர்கள் வாக்களிக்கப்போகும் முன் ஆயிரம் மாற்றங்களை அரசியல் வாதிகள் குறித்து அறிகிறார்கள். அதை வைத்துத்தான் மன நிலையும் இருக்கும்.

நோட்டா ஒரு மாற்றமாக இருந்தது? இந்த தேர்தலில் அது எதிரொலிக்குமா?

இந்த தேர்தலில் நோட்டா பெரிதாக எதிரொலிக்காது. காரணம் அப்போது இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது அப்படியல்ல பல சிறிய கட்சிகள் கமல், சீமான் போன்றோர் எல்லாம் பல கருத்துக்களை வைக்கிறார்கள்.

இரண்டு ஆளுமைகள் இல்லாததும் இளம் தலைமுறையினர் மாற்றத்துக்கு காரணமாக அமையுமா?

அப்படி நான் நினைக்கவில்லை. இன்றுள்ள வசதிகளில் அவர்களுக்கு ஒவ்வொருவர் இமேஜும், அளவீடுகளும் தெரிகிறது, அதனால் இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்கிறேன்.

தற்போது நிறைய இளம் வாக்காளர்கள் நம் நாட்டை நமது வாக்கால் தீர்மானிக்கவேண்டும் என நினைக்கிறார்கள். முன்பு தேர்தல் நாள் என்றால் இழுத்துப்போர்த்தி தூங்குவார்கள் ஆனால் இம்முறை இளம் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள் வாக்களிக்க.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...