Friday, April 19, 2019

சென்னையில் 'ஒரு விரல் புரட்சி' செய்தாரா சுந்தர் பிச்சை?- வைரலாகும் போட்டோ: உண்மை என்ன?

Published : 18 Apr 2019 17:01 IST




கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சென்னை வந்து வாக்களித்ததாக நெட்டிசன்கள் கொண்டாடிவருகின்றனர். இதுதொடர்பான பிச்சையின் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இது உண்மையா?

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்களிக்கும் புகைப்படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. குறிப்பாக அஜித், விஜய் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்த சம்பவம் இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்பிச்சை ஓட்டு போடுவதற்காக சென்னை வந்துள்ளதாக செய்திகள் பரவின. தமிழ் சினிமா ரசிர்கள் பலர், விஜய் நடித்த 'சர்கார்' படத்தை நினைவுகூர்ந்தனர். அப்படத்தில் சுந்தர் பிச்சையின் கேரக்டரை உள்வாங்கி சுந்தர் ராமசாமியாக நடித்திருப்பார் விஜய். ஓட்டு போடுவதற்காகவே அமெரிக்காவில் இருந்து விஜய், சென்னை வருவார்.

அதேபோல 'ஒரு விரல் புரட்சி' செய்ய, சுந்தர் பிச்சையும் சென்னை வந்துள்ளதாக சமூக வலைதளங்களில், புகைப்படத்தோடு செய்திகளும் பதிவுகளும் வைரலாகி வருகின்றன. சுந்தர் பிச்சை வாக்களிக்க சென்னை வந்துள்ளது உண்மையா?

மதுரையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஐஐடி காரக்பூரில் இளங்கலை பொறியியல் படிப்பைப் படித்தவர், எம்.எஸ். படிப்பை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார். பென்சில்வேனியாவில் எம்பிஏ படித்தார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க மேலாண்மை நிறுவனமொன்றில் பணியாற்றிய சுந்தர் பிச்சை, 2004-ல் கூகுளில் இணைந்தார். படிப்படியாக உயர்ந்தவர் தற்போது கூகுள் சிஇஓவாகப் பணியாற்றுகிறார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான சுந்தர் பிச்சைக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் வாக்களிக்க அவர் சென்னை வரமுடியாது.

இளைஞர்களுடன் அவர் சென்னையில் இருப்பதாகப் பகிரப்பட்ட போட்டோ, உண்மையில் 2017-ல் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தான் படித்த காரக்பூர் ஐஐடிக்கு அவர் வந்தபோது எடுத்த புகைப்படம் அது.

அப்போது சுமார் 3,000 மாணவர்களுடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் குறித்தும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்தும் விவாதித்தார். இதை அவரே தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024