Friday, May 3, 2019

தாலி கட்டினார்; ஒரு மாதம் வாழ்க்கை' - 15 வயது சிறுமியால் கம்பி எண்ணும் இரும்புக்கடைக்காரர்

எஸ்.மகேஷ்

சென்னையில் இரும்புக்கடை வைத்திருந்த இதயதிலகம், 15 வயது சிறுமிக்குத் தாலிகட்டி ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்து, சிறுமியை மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இதயதிலகம். இவர், சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பழைய இரும்புக்கடை நடத்திவந்தார். அப்போது அவருக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும் இதயதிலகத்தைக் கண்டித்தனர். சிறுமிக்கும் புத்திமதி கூறினர். ஆனால், எதிர்ப்பை மீறி இருவரும் காதலித்தனர்.

இந்தநிலையில், கடந்த 25.3.2019-ல் இருவரும் மாயமாகினர். இதனால் மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி சிறுமியின் தந்தை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் நந்தினி மற்றும் போலீஸார் சிறுமியைத் தேடினர். இந்தச் சமயத்தில்தான் சிறுமியும் இதயதிலகமும் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் இருவரையும் சென்னை அழைத்து வந்தனர். சிறுமிக்கு 15 வயதாகுவதால் மைனர் பெண்ணைக் கடத்திய குற்றத்துக்காக இதயதிலகம் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். பிறகு, இதயதிலகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமியை முதன்முதலில் அந்தப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவின்போது இதயதிலகம் சந்தித்துள்ளார். அதன்பிறகு சிறுமி, ஸ்கூலுக்குச் செல்லும்போது இதயதிலகம் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர். 8-ம் வகுப்புக்கு மேல் சிறுமி படிக்கவில்லை. இதயதிலகத்துக்கு அப்பா இல்லை. அவரின் அம்மா, சொந்த ஊரில் இருக்கிறார். சென்னையில் தனியாக இருந்த இதயதிலகம், சிறுமியை உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சென்னையிலிருந்து மும்பைக்குச் சென்றுள்ளார். அப்போதும் இருவரும் போனில் பேசிவந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்துக்குத் தெரிந்ததும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு அவரின் குடும்பத்தினர் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அவர் கேட்கவில்லை.

இந்தச் சமயத்தில்தான் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய இதயதிலகம், அவரை சென்னையிலிருந்து தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமிக்குத் தாலிகட்டியுள்ளார். உடன்குடி பகுதியில் இதயதிலகமும் சிறுமியும் ஒரு மாதம் குடியிருந்துள்ளனர். அங்கு கூலி வேலை செய்து வந்துள்ளார் இதயதிலகம். இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் இதயதிலகத்தைக் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளோம். தற்போது சிறுமி, காப்பகத்தில் தங்கியுள்ளார். சிறுமியின் அப்பா, அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்துவருகிறார். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளோம். அதன் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்போது இதயதிலகத்துக்குக் கடும் தண்டனை கிடைக்கும்" என்றனர்.

சிறுமியை சொந்த ஊருக்கு இதயதிலகம் அழைத்துச் சென்றபோது அவரின் உறவினர்கள் விவரம் கேட்டுள்ளனர். அப்போது இதயதிலகம், சிறுமிக்கு 18 வயதாகிவிட்டது, அவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லியுள்ளார். இதயதிலகத்தின் அம்மாவும் வேறுவழியின்றி சம்மதித்துள்ளார். சென்னை போலீஸார், இதயதிலகத்தைப் பிடித்தபோதுதான் உண்மை வெளியில் தெரிந்துள்ளது.

பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு இதயதிலகத்தையும் சிறுமியையும் அழைத்து வந்த போலீஸார் இருவரிடமும் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி, இதயதிலகத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சிறுமியிடம், உனக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை. இதனால் உனக்கு நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளனர். போலீஸார் கூறிய அறிவுரைகளை சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இதயதிலகத்தை கைது செய்யப்போகும் தகவல் சிறுமிக்குத் தெரிந்ததும் அவர் காவல் நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். அதைப்பார்த்து இதயதிலகமும் கண்ணீர்விட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை போலீஸார் காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியைப் பிரிந்து செல்ல மனமில்லாத இதயதிலகம், உனக்காகக் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு சிறைக்குச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...