Friday, May 3, 2019

படித்தது இன்ஜினீயரிங்... பார்ப்பது தள்ளுவண்டியில் உணவு விற்பனை! - கரூர் இளைஞரின் கதை

vikatan

துரை.வேம்பையன்


நா.ராஜமுருகன்


"இப்போ கடைக்கு கஸ்டமர்கள் அதிகமாகி, செலவு போக மாசம் 20,000 வரை சம்பாதிக்கிறேன். இப்போதான், எங்கம்மாவுக்கு என்மீது நம்பிக்கை வந்திருக்கு. 'உதவாத வேலையைப் பார்க்குறியோன்னு நினைச்சேன். பரவாயில்லை. நல்ல வழியிலதான் போயிருக்க'னு சொல்றாங்க."

'படிப்புக்கேற்ற நல்ல வேலையில் இருந்த கரூர் இளைஞரான ஜெய்சுந்தர், வேலை தந்த அலுப்பில், பார்த்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது கரூர் நகரில் தள்ளுவண்டியில் கரம் உணவு விற்கிறார். மாடர்ன் இளைஞரான அவர், தள்ளுவண்டியில் கரம் உணவு விற்பனை செய்து, மாதம் 20,000 வரை சம்பாதிக்கிறார். விற்பனை முடிந்து, தள்ளுவண்டியைக் கரூர் நகர பிரதான சாலையில் தள்ளிக்கொண்டிருந்த ஜெய்சுந்தரை யதேச்சையாகத்தான் சந்தித்தோம். ஆச்சர்யமாகி, அப்படியே அவரை ஓரங்கட்டிப் பேசினோம்.





"நான் கரூர் தின்னப்பா நகரைச் சேர்ந்தவன். அப்பா இல்லை. எனக்கு அம்மா மட்டும்தான். அவங்க பேரு சித்ரா. அவங்க தனியார் பள்ளியில் ஆசிரியையா இருந்து, கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சாங்க. டிப்ளமோ இ.சி.இ, பி.டெக் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிப்புகள் படிச்சேன். 2011-ல் பிரபல தனியார் செல் நெட்வொர்க் கம்பெனியில 9,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு, கோயம்புத்தூர்ல உள்ள ப்ரீகால் ஆட்டோமொபைல் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். 10,000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். நடுவில் எங்கம்மா, டீச்சர் வேலைக்கு சில விஷயங்களால் போக முடியாத சூழல். அப்புறம், குடும்ப பாரம் முழுவதும் என்மீது வந்தது. இருந்தாலும், அம்மா வீட்டுல மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தாங்க. இதற்கிடையில், புகளூர் அரசு காகித ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தேன். 15,000 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. 'அந்த வேலை நிரந்தரம் ஆயிரும்'னு சொன்னாங்க. ஆனா, அதுமாதிரி தெரியலை. வேலையும் கஷ்டமா இருந்துச்சு. வாழ்க்கையே கஷ்டமா தெரிஞ்சுச்சு.

வேலை முடிஞ்சதும், தினமும் கரூர் பஜார்ல இருக்கிற மதுங்கிறவர் போட்டிருக்கிற கரம் ஸ்டால்ல கரம் வகை நொறுக்கு உணவுகளை வாங்கிச் சாப்பிடுவேன். நல்ல ருசியா இருக்கும். ஒருநாள் அப்படிச் சாப்பிட்டுகிட்டு இருந்தப்ப, 'நானும் உங்களை மாதிரி கரம் ஸ்டால் போடபோறேன்'னு சொன்னதும், மது அதிர்ச்சியாயிட்டார். 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. பார்க்குற வேலையை ஒழுங்கா பாரு'னு சொன்னார். எங்கம்மாகிட்டயும் சொன்னேன். அவங்களும் தாம்தூம்னு குதிச்சாங்க. 'பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கேன். உனக்கு கல்யாணம் பண்ணணும். இப்போ போய் வேண்டாத வேலை பார்க்காத'னு சொன்னாங்க. ஆனா, நான் விடாப்பிடியா இருந்து, கடந்த வருஷம் பிப்ரவரி மாசம், 'கரூவூர் கரம்'ங்கிற பேர்ல தள்ளுவண்டியில கடையை ஆரம்பிச்சுட்டேன். என்னோட உறுதியைப் பார்த்துட்டு, மது சாரும் எனக்கு கரம் தயாரிப்பு பத்தி பயிற்சி கொடுத்தார். ஆரம்பத்துல ரொம்ப சிரமப்பட்டேன். தள்ளுவண்டியைத் தள்ளும்போது, மனசுக்குள்ள கில்ட்டியா ஃபீல் பண்றது ஒருபக்கம்னா, இன்னொருபக்கம், 'தேவையில்லாத வேலை பார்க்கிறோமோ'னு உள்ளுக்குள் உதறலா இருக்கும்.



இருந்தாலும், தன்னம்பிக்கையை விடலை. முதல் ஆறு மாசம், மாசம் 4,000 கிடைக்கிறதே பெருசுங்கிற நிலைமையா இருந்துச்சு. நாங்க வாடகை வீட்டுல இருப்பதால், அந்தப் பணம் வாடகைக்கே போயிரும். மத்த செலவுகளுக்கு சிரமப்பட்டோம். அப்போதான், நான் இப்போ கரம் ஸ்டால் வச்சுருக்கும் இந்த ஜூஸ் கடையோட ஓனர் கோபிநாத் பெரிய உதவி பண்ணினார். தனது ஜூஸ் கடை முன்பு வாடகை கேட்காம, என்னை கரம் ஸ்டாலைப் போட அனுமதித்தார். அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சாங்க. கல்லூரி மாணவர்கள், மாணவிகள், குடும்பத்தோடு வருபவர்கள்னு எனக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அதிமானாங்க.



இப்போ கடைக்கு கஸ்டமர்கள் அதிகமாகி, செலவு போக மாசம் 20,000 வரை சம்பாதிக்கிறேன். இப்போதான், எங்கம்மாவுக்கு என்மீது நம்பிக்கை வந்திருக்கு. 'உதவாத வேலையைப் பார்க்குறியோன்னு நினைச்சேன். பரவாயில்லை. நல்ல வழியிலதான் போயிருக்க'னு சொல்றாங்க. இங்க உள்ள பிரபல ஹோட்டல்காரங்களும், 'படிச்சுட்டு இப்படித் தள்ளுவண்டியில உணவு விற்கிறியே. சபாஷ். இதை இன்னும் டெவலெப் பண்ணு'னு ஊக்குவிக்கிறாங்க. மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 10.30 மணி வரை வியாபாரம் பார்ப்பேன். அப்புறம், இந்தத் தள்ளுவண்டியிலேயே அனைத்தையும் பேக் செய்து, தள்ளிக்கொண்டு போய் அருகில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டுல வச்சுருவேன். என் கடையில் சாதா கரம், முட்டை கரம், சம்சா கரம், எள்ளடைக் கரம், அப்பளக் கரம், முறுக்கு கரம், போண்டா கரம்னு கரம் நொறுக்குத்தீனிகளை விற்கிறேன்.

 தவிர, தட்டுவடை செட்டு, முறுக்குச் செட்டு, அப்பளச் செட்டு, சம்சா செட்டுனு செட்டு வகை நொறுக்குத்தீனிகளையும் விற்கிறேன். அதோடு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடவே பர்மா உணவுகளான அத்தோ, கவுஸ்வே, மொகிங்கா, வாழைத்தண்டு சூப்னு விற்பனை செய்கிறேன். எல்லா உணவு பொருள்களையும் தரமா விற்கிற கடைகளில்தான் வாங்குறேன். அதோடு, பள்ளி, கல்லூரிகளில நடக்கும் விழாக்களின்போது, சம்பந்தப்பட்ட கல்விநிலைய நிர்வாகத்தின் அனுமதியோடு, கரம் ஸ்டாலைப் போடுவேன். அதேபோல், திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் ஐஸ்க்ரீம், பீடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறேன். அதோடு, கருவூர் கரம் ஸ்டாலை இன்னும் பல இடங்களில் அமைக்கும் முயற்சியிலும் இருக்கிறேன்.



படிப்புக்கேத்த வேலை பார்த்தபோது, வேலை அதிகம், சம்பளம் கம்மிங்கிற நிலைமை. ஆனா, 365 நாள்களும் அவங்களுக்காக இயங்கணும். இதுல அப்படி இல்லை. கொஞ்ச நேரம்தான் பிஸினஸ். நிறைவான லாபம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல காசு வாங்காத வாக்காளர்களுக்கு, கரம் உணவுகள்ல 50 சதவிகிதம் ஆஃபர் போட்டேன். 'உழைப்புக்கேத்த வருமானம்; மனசுக்கேத்த சமூக சேவை பணிகள்'னு வாழ்க்கை அர்த்தமுள்ளதா, ஆனந்தமா போய்ட்டு இருக்கு அண்ணே..!" என்று முடிக்கிறார் மகிழ்ச்சியாக.

கரம் ஸ்டால் உணவு தொழிலில் கலக்கும் ஜெய்சுந்தரை, 'கரம்'பற்றி வாழ்த்திவிட்டு வந்தோம்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...