Friday, May 3, 2019

கத்திரி வெயில் நாளை தொடக்கம்: வேலூரில் 112 டிகிரியை கடந்த வெப்பம்

By DIN | Published on : 03rd May 2019 04:13 AM |

வேலூரில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள குடைபிடித்துச் செல்லும் பெண்கள்.
velur
கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூரில் வியாழக்கிழமை உச்சகட்டமாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.
இந்தக் காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம். ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகும். 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை (மே 4) தொடங்கி 29-ஆம் தேதி வரை மொத்தம் 26 நாள்கள் நீடிக்கிறது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் உச்சகட்டமாக வியாழக்கிழமை 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடைக்காலம் தொடங்கும் முன்பாக பிப்ரவரி இறுதியில் இருந்தே வேலூரில் வெயிலின் அளவு அதிகரித்துக் காணப்பட்டது. மார்ச் மாதத்திலேயே 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இந்தாண்டில் அதிகபட்சமாக 112 டிகிரி வெப்பம் பதிவானது. இதன்காரணமாக, பகலில் கடுமையான அனல் காற்று வீசியதால் மக்கள் வெளியில் நடமாடவும், வாகனங்களில் செல்லவும் கடும் அச்சமடைந்தனர்.
வேலூரில் அதிகபட்சமாக கடந்த 2000-ஆம் ஆண்டில் 112 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு, இதுவரை இந்த வெப்ப நிலைக்கு அதிகமாக வெப்பம் பதிவாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இரு நாள்களுக்கு முன்பாகவே 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதால் கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் 112 டிகிரியை கடந்து புதிய உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பகல்நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...