Friday, May 3, 2019

நன்றி கெட்ட மனிதர்கள்...நன்றியுள்ள நாய்கள்! 

dinamani

By கே.பி. மாரிக்குமார் | Published on : 03rd May 2019 01:47 AM |

சேலத்தில் ஒரே நாளில் 63 பேரை வெறி நாய் ஒன்று விரட்டி விரட்டிக் கடித்த செய்தி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே நாய்கள் என்றாலே அவற்றை அருவருப்புடன் கல்லெடுத்து அணுகும் பொதுமக்கள், இப்போது இன்னும் ஒருபடி மேலேபோய் உச்ச உக்கிரத்துடன் அப்பாவி நாய்களைத் தாக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. அந்தக் கருப்புநிற சேலத்து நாயை சில இளைஞர்கள் தேடிக் கண்டுபிடித்து அடித்தே கொன்றதாகத் தகவல்.

மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. உலகெங்கும் குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் நாகரிகம், முன்னேற்றம் என்ற பெயரில் சுற்றுச்சூழலைப் பாழாக்கி, இயற்கை வளங்களைச் சீரழித்து, சூழலிய பல்லுயிர்கள் அனைத்தையும் துரிதமாகத் துடைத்துப்போடும் ஒரு போக்கு உருவாகியிருக்கும் இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் தெரு நாய்கள் விரோதப் போக்கு சரியானதா?

சேலம் மாவட்டத்தில் தெரு நாய் ஒன்று 63 பேரை கடித்ததற்கான நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் அனைத்து நாய்களையும் பிடிக்க முடிவு என்று கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) வந்தது. இந்தக் கட்செவி அஞ்சல், கடந்த 2016-ஆம் ஆண்டு கேரளத்தில் அரசு மற்றும் உச்சநீதிமன்ற அனுமதியோடு கொத்துக் கொத்தாக தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம்போல தமிழ்நாட்டிலும் நடப்பதற்கு அச்சாரம் இடுகிறதோ என்ற பதற்றம் உருவான நேரத்தில், அதே சேலத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் பன்றி போன்ற விலங்குகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதே போல், சிவகங்கை மாவட்டத்திலும் நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் உள்ள தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திப் பாதுகாக்க, கருத்தடை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி முறையை மத்திய-மாநில அரசின் ஒருங்கிணைந்த பணியாக அமல்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் 2001-ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.
2001-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும், 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனியார் விலங்குகள் நல அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அனைத்துத் தெரு நாய்களுக்கும் கருத்தடையும், ரேபீஸ் தடுப்பூசியும் போடும் பணி சரியாக நடந்திருக்குமேயானால், சேலத்தில் எப்படி வெறி நாய் ஒன்று திடீரென்று தோன்றியிருக்க முடியும்?

தவறு செய்கின்ற மனிதர்கள் அதிகாரிகளாக, மருத்துவர்களாக புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொள்ள, ஏதோ ஒரு நாய் கடிக்க... எதிர்பாராமல் வெறிநாய்க் கடிக்கு ஆளானவர்கள் துடிக்க, மனிதர்களின் நண்பர்களாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பயணித்த அப்பாவி நாய்களைக் கொல்வது பற்றிச் சிந்திப்பதும், பேசுவதும் மானுட மாண்புக்கு அழகா?
ஏற்கெனவே வளர்ச்சி என்ற பெயரில் மண்புழுவில் ஆரம்பித்து சிட்டுக்குருவி வரை அழிக்கத் துணிந்திட்ட நாம், மண்ணுக்குப் பொருந்தாத அயல்நாட்டு நாய்களை செல்லப் பிள்ளைகளாக ஆக்கிக்கொண்டு மண்ணின் மைந்தர்களை தெரு நாய்களாக, வெறி நாய்களாக மாற்றி அவற்றையும் அழிக்க நினைப்பது சரியா?

உயிராய் பிறப்பது எல்லாம் சாகும் என்பது இயற்கை. அதனடிப்படையில் மனிதர்களின் மரணத்துக்கு விபத்துகள், கொலைகள் உள்பட எத்தனையோ காரணிகள் இருக்கின்றன. மனித இனத்தை அழிக்கும் ஆற்றல் படைத்த சாலைகள், வாகனங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை குறித்து இதுவரை நாம் குரல் எழுப்பவில்லையோ, அதே அணுகுமுறை மற்றும் நியாயத்தைத்தான் தெரு நாய்கள் மற்றும் இன்னபிற உயிர்கள் விஷயத்திலும் மனசாட்சியுள்ள மனிதர்களாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு தெருவிலும் அப்பாவியாக படுத்துறங்கும் நாய்களை கல்லால் அடிப்பது, குடியிருப்புப் பகுதிகளில் நாய்கள் இருப்பதே அசிங்கம் என்று கருதுகிற மனநிலைக்கு மனிதர்கள் வந்திருக்கின்றனர். புறக்கணிப்பட்ட இந்த தெரு நாய்களுக்கு பிறக்கும் குட்டிகளில் ஒன்றிரண்டு ஆண் நாய்கள் மட்டும் வளர்ப்புக்கும், ஒரு சில ஆண் நாய்கள் ஒரு சில வணிகபுத்தி மனிதர்களால் விற்பனைக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால், பெண் குட்டிகளின் கதியோ... பரிதாபமாக இருக்கிறது.

நமக்கு தாயாக, சகோதரியாக, மகளாக, காதலியாக, மனைவியாக எல்லாம் பெண் வேண்டும். ஆனால், நாய் குட்டிகள் மட்டும் பெண்ணாக இருக்கக் கூடாது. வியாபார நோக்கில் வளர்க்கப்படும் அயல்நாட்டு நாய்களில் பெண் நாய்க்கு அமோக வரவேற்பு இருக்கிறது என்பது பணமுரண் சொல்லும் தனிக் கதை.

ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய்தான். வேட்டையாடும் பிற மிருகங்களுக்கு இல்லாத நற்குணம் நாய்க்கு இருக்கிறது. நாயிடம் இருக்கும் அந்த அன்பும் நன்றியுணர்வும்தான் இன்று நாயை தெருவில் அலைய விட்டிருக்கிறது. அந்த வகையில், அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.
நாய்கள் குரைப்பதில் கோபமும், ஆத்திரமும் மட்டும் இருப்பதில்லை. அதில் அன்பிருக்கிறது, ஏக்கமிருக்கிறது, வலியிருக்கிறது. நாய்களின் குரைப்பு... அதன் மொழி. அதைக் கண்டு மனிதர்கள் அஞ்சுவது அறியாமை.
உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வசிக்கும் வீடு, வளர்க்கும் பிராணிகள் என்று எதையெடுத்தாலும் அந்நிய மோகம் பிடித்தாட்டும் தேசம் நம் தேசம்.

 அதே அடிப்படையில் அந்நிய இன நாய்களை இறக்குமதி செய்யும் மனிதர்களின் இந்த நாட்டு நாய் விரோதப் போக்கினால், ஒருவேளை... தெரு நாய்கள் இல்லாமல் போனால், இதனால் உயிர்ச்சங்கிலி எனும் உன்னதமான ஒன்று அறுபட்டு அதன் எதிர்விளைவாக, அந்தந்தப் பகுதிகளில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமே ஏதாவது ஒரு பாதிப்பு வரவே செய்யும்.
மனிதர்களின் இந்தப் பல்லுயிர் விரோதப் போக்கு இதே அளவில் நீடித்தால், மனித இனம் மட்டும் எப்படி தனித்து வாழ்ந்து விடும் என்ற இயற்கை மற்றும் சூழலிய ஆர்வலர்களின் கேள்வியில் உண்மை இல்லாமலில்லை.
காவல் துறைக்கு நாய்கள் சிறந்த துப்பறிவாளன் மட்டுமல்ல; பொது சமூகத்துக்கும், உள்ளாட்சி, சுகாதாரத் துறைக்கும் கைதேர்ந்த துப்புரவுப் பணியாளரும்கூட.

நாட்டார் தெய்வங்களுள் பிரதானமானவரும், தமிழர்கள், தமிழின கலாசாரத்தில் முன்னோடி காவல் தெய்வமான கருப்பசாமியின் வாகனம் நாய். இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் பைரவர், காலபைரவர் மற்றும் வைரவர்கள் என்ற பெயரில் புனிதமாக நாய் அழைக்கப்படுகிறது. என் தேசத்தில், என் மதத்தில் ஒரு நாய்கூட உணவின்றித் தவிக்குமேயானால்...அது தேசமுமல்ல, அங்கு இருப்பது மதமும் அல்ல என்பது சுவாமி விவேகானந்தரின் ஆணித்தரமான கூற்று.

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் தன் வளர்ப்பு நாயான பப்பி எனும் ஆண் நாயோடு அவரது தோட்டத்தில் வழக்கமான நடைப்பயிற்சிக்கு அண்மையில் சென்றபோது, ஐந்தரை அடி நீள நல்ல பாம்பு சீறி வந்துவிட, விசுவாசமான பப்பி அந்த நல்ல பாம்பை கடித்துக் குதறி, தன் முதலாளி நடராஜனின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி எந்த கல் நெஞ்சையும் கரையச் செய்யும். வளர்ப்பு நாய்களின் விசுவாசத்தை, அன்பை இதுபோன்ற ஆயிரமாயிரம் சம்பவங்களால் நாம் பட்டியலிட முடியும்.
தெருவில் பிறந்து மனிதர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும் எல்லா நாய்களும் வளர்ப்பு நாய்கள்தான்;

செல்லப் பிராணிகள்தான். வீட்டில் வளர்க்கப்பட்டு மனிதர்களின் சுயநல காரணங்களுக்காக ஆதரவின்றி தெருவில் விடப்படும் நாய்கள் எல்லாம் தெருநாய்கள்தான். இங்கு மனிதர்களின் ஆதரவும் அரவணைப்பும்தான் நாய்களின் நிலையை, அந்தஸ்தை தீர்மானிக்கின்றன.

அப்பாவி மனிதர்களைக் கடித்த சேலத்தின் வெறி நாய்க்கு தண்டனை கொடுத்தாயிற்று. வெறிநாய் தடுப்பூசி திட்டம் 18 ஆண்டுகள் இருந்தும், தங்கள் பணியைச் சரிவர செய்யாமல் இன்றும் ஒரு சில நாய்களை வெறி நாய்களாக்கும் அரசு கால்நடை நிர்வாகத்துக்கும், அப்பாவி நாய்களை வதைக்கும் கொடூர மனிதர்களுக்கும் யார் தண்டனை கொடுப்பது? நாய்கள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் சேர்த்துத்தான்

இந்த பூமி. கட்டுரையாளர்:

ஒருங்கிணைப்பாளர்,
நன்றி மறவேல்
(தெரு மற்றும் நாட்டு நாய்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு).

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...