சென்னை: நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க, தலைமை செயலர் தலைமையில், சிறப்பு பிரிவு ஏற்படுத்த, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசார் ஒத்துழைக்காவிட்டால், ராணுவத்தினரை அழைக்க வேண்டி வரும் என்றும், நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த, மேனன் தாக்கல் செய்த மனு:சென்னையில், தண்ணீர் செல்லும் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள், இந்திய தர நிறுவனம் நிர்ணயித்த தரத்தில் கட்டப்படவில்லை. இதனால், மழை காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளம், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வெளியேறும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை.அடையாறு, கூவம் ஆறு, இயற்கை அழகை இழந்து விட்டன. மழை காலங்களில், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரை, இந்த ஆறுகள், கடலில் சேர்க்கின்றன.
மனு
கடலில் கலக்காமல் இருக்க, நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதிக நீரை சேமிக்கும் வகையில், ஏரி, குளங்களை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை தாக்கல் செய்த பதில் மனு: சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பின், 10 ஆயிரத்துக்கும் மேலான ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, 4,161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அடையாறு மற்றும் அதன் கிளைகளில் புனரமைப்பு பணிகள், 19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன. அடையாறு மீட்பு திட்டத்தின் கீழ், 55 திட்டங்களை
மேற்கொள்ள, 555 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதலை, அரசு வழங்கி உள்ளது. இதில், 104 கோடி ரூபாய், பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை, நீதிபதிகள், எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, மாநகராட்சி தரப்பில், வழக்கறிஞர் சவுந்தரராஜன் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நம் மாநிலத்தில், அனைத்து ஆதாரங்கள் இருந்தும், முறையாக பயன்படுத்தாததால், வளமான நிலங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளை கொட்டியும், வீணாக்கி விடுகின்றனர். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், தென் ஆப்ரிக்காவில், கேப் டவுன் நகரில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம், நமக்கும் ஏற்படும் நாள், வெகு துாரத்தில் இல்லை.
நிதி வேண்டும்
மற்ற பகுதிகளை பொருட்படுத்தாமல், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் மட்டும் தான், அரசு கவனம்
செலுத்துவதாக தெரிகிறது.மக்கள் நலன் திட்டங்களில், அரசு பாரபட்சம் காட்டக் கூடாது. மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், குளங்களை சுத்தப்படுத்தி மீட்க, நிதி ஒதுக்கப்பட வேண்டும். நீதிபதிகளான எங்களுக்கு, மஞ்சள் நிறத்தில் தண்ணீர் கிடைக்கிறது. அப்படியென்றால், சாதாரண மக்கள் படும் துன்பங்களை விவரிக்க முடியாது. ௧௯௮௫ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆர்., தன் வீட்டில் இருந்து வெளியேறி, ஓட்டலில் தங்கி உள்ளார். அந்த நிலை திரும்பினால், சாதாரண மக்களின் கதி என்ன?
எனவே, நீர் நிலைகளையும், தண்ணீர் செல்லும் பாதையையும் பாதுகாக்க, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டி உள்ளது:
* தலைமை செயலர் தலைமையில், பொதுப்பணித்துறையில் சிறப்பு பிரிவை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்
* தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை மேலாண்மை செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருவாய் துறை செயலர், பொதுப்பணித் துறை செயலர், மாநகராட்சி ஆணையர், மின் வாரிய தலைவர், குடிநீர் வாரிய நிர்வாக
இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, அமைக்க வேண்டும்
* குழு அமைக்கப்பட்ட பின், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, அதிகாரிகளுக்கு உதவி செய்ய, போதிய ஊழியர்களை வழங்க வேண்டும்.மாவட்டங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மாதம் ஒரு முறை, தலைமை செயலர் ஆய்வு செய்ய வேண்டும்
* தமிழகம் முழுவதும், போலீஸ் உதவியுடன், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து முறையான உதவி வரவில்லை என்றால், ராணுவத்தினரின் உதவியை பெற்று கொள்ளலாம். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவங்குவதற்கு முன், மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்
* நீர் நிலைகள், தண்ணீர் பாதைகள், ஆறுகள், கால்வாய், குளங்களில், மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும், கட்டுமானமும் இல்லாததை, சிறப்பு பிரிவு உறுதி செய்ய வேண்டும்
*கடமை தவறிய அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும் உரிமை, அரசுக்கு உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அரசுக்கு, சிறப்பு பிரிவு அறிக்கை அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கும், அறிக்கையில் நகல் அனுப்பப்பட வேண்டும்
*அதிக எண்ணிக்கையில் அணைகள் கட்ட, அரசு யோசிக்க வேண்டும். இதனால், அண்டை மாநிலங்களில், தண்ணீருக்கு கையேந்த வேண்டியதிருக்காது. தண்ணீரை, ஆறுகளிலும், கிணற்றிலும், முந்தைய தலைமுறையினர் பார்த்தனர். தற்போதைய தலைமுறையினர், குழாய்களில் பார்க்கின்றனர். குழந்தைகள், பாட்டிலில் பார்க்கின்றனர். பேர குழந்தைகள், தண்ணீரை, மாத்திரை வடிவத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment