Thursday, May 2, 2019

ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து


ஒடிசாவில் பானி புயல் நாளை கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பதிவு: மே 02, 2019 07:04 AM

கொல்கத்தா,

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்கத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிஸாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43- க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024