Thursday, May 2, 2019

தலையங்கம்

படித்து முடித்துவிட்டோம், வேலை எங்கே?



மத்திய அரசும், தமிழக அரசும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டிவருகிறது.

மே 02 2019, 03:30

ஆண்டுதோறும் கல்விக்காக இரு பட்ஜெட்களிலுமே ஒரு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. இந்தநிலையில், பல்வேறு படிப்புகளை படித்து முடித்தவர்கள் அதற்குரிய வேலை கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக முயற்சி செய்யும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் என்ன வேலை கிடைத்தாலும் போகலாம் என்றும், கல்விக்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்றும், வாழ்க்கை சக்கரத்தை ஓட்டவேண்டும் என்ற சலிப்பான உணர்விலும் மிக சாதாரண வேலைக்குகூட போக தயாராகி விடுகிறார்கள். அதை நிரூபிக்கும்வகையில், ரெயில்வே துறையில் ‘குரூப்–டி’ பிரிவில், அதாவது கீழ்மட்ட பணிகளான கேங்மேன், கேபின்மேன், ஹெல்பர், கீமேன், டிராக்மேன், வெல்டர் போன்ற பல பணிகளுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டது. மொத்தம் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10–ம்வகுப்பும், தொழிற்பயிற்சியில் தேசிய கவுன்சில் சான்றிதழும் பெற்றிருக்கவேண்டும். இல்லையெனில் ஐ.டி.ஐ. படித்திருக்கவேண்டும் அல்லது தேசிய பழகுனர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், இந்த பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை பார்த்தால் 1 கோடியே 90 லட்சம் பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருந்தவர்கள். 48,48,000 பேர் பட்டப்படிப்புகளையும், முதுகலை பட்டப்படிப்புகளையும் பெற்றிருந்தவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இதற்கும் மேலாக அதிர்ச்சி தரத்தக்க தகவல் என்னவென்றால் இத்தகைய பணியாளர்களுக்கு அதிகாரிகளாக பணியாற்றக்கூடிய கல்வித்தகுதிபடைத்தவர்கள் அதாவது, என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தவேலைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். 4,91,000 என்ஜினீயரிங் பட்டபடிப்பு படித்தவர்களும், 41,000 முதுகலை என்ஜினீயரிங் பட்டபடிப்பு படித்தவர்களும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், நிர்வாகயியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.


கடந்த சிலஆண்டுகளுக்கு முன்புவரை என்ஜினீயரிங் படித்தவர்கள் உடனடியாக கைநிறைய சம்பளம் வாங்கும்நிலை இருந்தது. இதன்காரணமாக நாடுமுழுவதும் ஏராளமான சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால் சாதாரண கிராமங்களில் படித்த இளைஞர்கள் கூட என்ஜினீயரிங் படித்தவுடன் நல்லவேலைக்கு சென்று மனமகிழ்ச்சியடையும் வகையில் ஊதியம் பெற்று வந்தனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. ஆனால் இப்போது, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடுமுழுவதும் 16,50,000 இடங்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்தநிலையில், கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேல் குறைந்துவிட்டது. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் இடங்கள் காலியாகும் சூழ்நிலை இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவரே கூறியிருக்கிறார். இது நிச்சயமாக நல்லதல்ல. மத்திய–மாநில அரசுகள் கல்வி வளர்ச்சியில் எப்படி கண்ணாக இருக்கிறதோ, அதுபோல அந்தந்த படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இணைமுயற்சியாக ஒரேநேரத்தில் இருக்கவேண்டும். இளைஞர்கள் படிக்கும் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை அரசு மட்டும் உருவாக்கமுடியாது. தனியார் நிறுவனங்களும் நிறைய தொழில்களை தொடங்கினால்தான் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் பரவலாக எல்லா இடங்களிலும் ஏராளமான தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படும் வகையில் மத்திய–மாநில அரசுகள் ஊக்கமும் சலுகையும் அளிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...